திங்கள், 3 ஆகஸ்ட், 2015

குர்ஆன் முரண்படுகின்றதா?

அருள்மறை குர்ஆனின் இரண்டு வசனங்கள் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 47வது வசனமும், அத்தியாயம் 32 ஸுரத்துஸ் ஸஜ்தாவின் 5வது வசனமும் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது மனிதர்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. அருள்மறை குர்ஆனின் 70வது அத்தியாயம் ஸுரத்துல் மஆரிஜ்ன் 4வது வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது மனிதர்கள் கணக்கிடும் ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது.

மேற்படி வசனம் உணர்த்தும் பொதுவான கருத்து என்னவெனில் அல்லாஹ் கணக்கிடும் காலம் பூமியில் மனிதர்கள் கணக்கிடும் காலத்தோடு ஒப்பிட முடியாததது என்பதுதான். மேற்படி வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆயிரம் ஆண்டுகள் மற்றும் ஐம்பதினாயிரம் ஆண்டுகள் என்பது பூமியில் மனிதர்கள் கணக்கிடும் காலம் ஆகும். ஆயிரம் ஆண்டுகள் என்பது மனிதர்களின் பார்வையில் மிகவும் அதிகமான காலகட்டம் ஆகும். ஆனால் ஆயிரம் ஆண்டுகள் என்பது அல்லாஹ்வின் பார்வையில் ஒரு நாளைக்குச் சமமானது.

1. 'யவ்ம்' என்றால் காலம் என்றும் பொருள் கொள்ளலாம்:

மேற்படி வசனங்களில் 'யவ்ம்' என்ற அரபி வார்த்தை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 'யவ்ம்' என்ற அரபி வார்த்தைக்கு நாள் என்ற பொருள் தவிர, காலம் என்றும் ஒரு நீண்ட காலம் என்றும் பொருள் கொள்ளலாம். மேற்படி வசனங்களில் வரும் 'யவ்ம்' என்ற அரபி வார்த்தைக்கு நாள் என்று பொருள் கொள்ளாது, காலம் என்று பொருள் கொண்டால் எந்த குழப்பமும் இல்லை.

அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 47வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

'(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளை போலாகும்.(அல் குர்ஆன் - 22:47)

இறை நம்பிக்கை கொள்ளாதவர்கள் தங்களது தண்டனைக்காக அவசரப் பட்ட பொழுது, அல்லாஹ் இறக்கியருளிய வசனம் இது. அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. அல்லாஹ்வின் பார்வையில் ஒரு நாள் என்பது, மனிதர்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளை போலாகும் என்று கூறுகிறது.

அருள்மறை குர்ஆனின் 32வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸஜ்தாவின் 5வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே
ஒழுங்குபடுத்துகிறான்: ஒருநாள் (ஒவ்வொரு காரியமும்)அவனிடமே மேலேறிச் செல்லும். அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். (அல் குர்ஆன் - 32:5)

மேற்படி அருள்மறையின் வசனம் ஒருநாளில் எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மேலேறிச் செல்லும் என்றும், அந்த நாளின் அளவு நாம் (மனிதர்கள்) கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும் என்றும் குறிப்பிடுகிறது.

அருள்மறை குர்ஆனின் 70வது அத்தியாயம் ஸுரத்துஸ் மஆரிஜ் - ன் 4வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

ஒருநாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம்
ஏறிச் செல்வார்கள்: அ(த் தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.(அல் குர்ஆன் 70:4)

மலக்குகளும், ஆன்மாக்களும் அல்லாஹ்வை சென்றடையக் கூடிய காலம் ஐம்பதினாயிரம் வருடங்களாக இருக்கும் என்று மேற்கண்ட அருள்மறை வசனம் குறிப்பிடுகிறது.

இரண்டு மாறுபட்ட செயல்கள் நடைபெறக் கூடிய காலகட்டங்கள் சமமாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உதாரணத்திற்கு நான் சென்னையிலிருந்து செங்கல்பட்டைச் சென்றடைய இரண்டு மணி நேரம் பிடிக்கிறது என்கிறேன். அதே வேளையில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்றடைய 14 மணி நேரம் பிடிக்கிறது என்கிறேன். மேற்படி நான் சொன்ன எனது இரண்டு கூற்றுக்களும் ஒன்றோடு ஒன்று முரண்படவில்லை.

அதே போன்றுதான் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் ஒன்றோடு ஒன்று முரண்படுவதே இல்லை. மாறாக நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு சமன்படுகிறது.

அலிஃப் - லாம் -ஹாமீம் - யாஸீன் முக்கியத்துவம் என்ன?

அலிஃப் - லாம் - மீம், யாஸீன், ஹாமீம் போன்ற எழுத்துக்களுக்கு அரபியில் 'அல்-முகத்ததத்' (சுருக்கப்பட்ட எழுத்துக்கள்) என்று பெயர். அரபி மொழியில் மொத்தம் இருபத்து ஒன்பது (அலிஃப் - மற்றும் ஹம்ஸ் என்கிற எழுத்துக்களை இரண்டாக கருதினால்) எழுத்துக்கள் இருக்கின்றன. அதேபோல அருள் மறை குர்ஆனிலும் இருபத்து ஒன்பது அத்தியாயங்கள் மேற்படி சுருக்கப்பட்ட எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன. இவ்வாறு சுருக்கப்பட்ட எழுத்துக்கள் சில அத்தியாயங்களில் தனித்தும், சில அத்தியாயங்களில் இரண்டாகவும், சில அத்தியாயங்களில் மூன்று எழுத்துக்களாகவும், சில அத்தியாயங்களில் நான்கு அல்லது ஐந்து எழுத்துக்களாகவும் சேர்ந்து வரும்.

A. அருள்மறையின் கீழ்க்காணும் மூன்று அத்தியாயங்கள் ஒரே ஒரு எழுத்தினை கொண்டு துவங்குகின்றன.

1. அத்தியாயம் 38 ஸுரத்து ஸாத் - ஸாத் என்னும் எழுத்தைக் கொண்டு துவங்குகிறது.

2. அத்தியாயம் 50 ஸுரத்துல் ஃகாஃப் - ஃகாஃப் என்னும் எழுத்தைக் கொண்டு துவங்குகிறது.

3. அத்தியாயம் 68 ஸுரத்துல் கலம் - நூன் என்னும் எழுத்தைக் கொண்டு துவங்குகிறது.

B. அருள்மறையின் கீழ்க்காணும் பத்து அத்தியாயங்கள் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.

1. அத்தியாயம் 20 ஸுரத்துத் தாஹா 'தா - ஹா' என்னும் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.

2. அத்தியாயம் 27 ஸுரத்துன் நம்ல் 'தா - ஸீன்' என்னும் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.

3. அத்தியாயம் 36 ஸுரத்துல் யாஸீன் 'யா - ஸீன்' என்னும் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.

4. அத்தியாயம் 40 ஸுரத்துல் முஃமின்

5. அத்தியாயம் 41 ஸுரத்து ஹாமீம் ஸஜ்தா

6. அத்தியாயம் 42 ஸுரத்துல் அஷ்ஷுறா

7. அத்தியாயம் 43 ஸுரத்துல் அஜ் ஜுக்ருஃப்

8. அத்தியாயம் 44 ஸுரத்துத் துகான்

9. அத்தியாயம் 45 ஸுரத்துல் ஜாஸியா

10. அத்தியாயம் 46 ஸுரத்துல் அஹ்காஃப்

மேலே குறிப்பிட்டுள்ள அருள்மறையின் பத்து அத்தியாயங்களும் 'ஹா - மீம்' என்னும் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.

C. அருள்மறையின் கீழ்க்காணும் பதினான்கு அத்தியாயங்கள் மூன்று எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.

1. அத்தியாயம் இரண்டு ஸுரத்துல் பகரா

2. அத்தியாயம் மூன்று ஸுரத்துல் ஆல இம்ரான்

3. அத்தியாயம் இருபத்து ஒன்பது ஸுரத்துல் அன்கபூத்

4. அத்தியாயம் முப்பது ஸுரத்துல் ரூம்

5. அத்தியாயம் முப்பத்து ஒன்று ஸுரத்துல் லுக்மான்

6. அத்தியாயம் முப்பத்து இரண்டு ஸுரத்துல் ஸஜ்தா ஆகிய ஆறு அத்தியாயங்களும் அலிஃப் - லாம் - மீம் என்னும் மூன்று எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.

7. அத்தியாயம் பத்து ஸுரத்துல் யூனுஸ்

8. அத்தியாயம் பதினொன்று ஸுரத்துல் ஹுத்

9. அத்தியாயம் பன்னிரெண்டு ஸுரத்துல் யூஸுப்

10. அத்தியாயம் பதின்மூன்று ஸுரத்துல் ராத்

11. அத்தியாயம் பதின்நான்கு ஸுரத்துல் இப்றாஹிம்

12. அத்தியாயம் பதினைந்து ஸுரத்துல் ஹிஜ்ர் ஆகிய ஆறு அத்தியாயங்களும் அலிஃப் - லாம் - ரா என்னும் மூன்று எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.

13. அத்தியாயம் இருபத்து ஆறு ஸுரத்துல் அஸ்ஸுரா

14. அத்தியாயம் இருபத்து எட்டு ஸுரத்துல் கஸஸ் ஆகிய இரண்டு அத்தியாயங்களும் தா - ஸீன் - மீம் என்னும் மூன்று எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.

D. அருள்மறையின் கீழ்க்காணும் இரண்டு அத்தியாயங்கள் நான்கு எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.

அத்தியாயம் ஏழு ஸுரத்துல் அஃராப் அலிஃப் - லாம் - மீம் - ஸாத் என்னும் நான்கு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.

அத்தியாயம் எட்டு ஸுரத்துல் அன்ஃபால் அலிஃப் - லாம் - மீம் - ரா - என்னும் நான்கு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.

E. அருள்மறையின் கீழ்க்காணும் இரண்டு அத்தியாயங்கள் ஐந்து எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.

அத்தியாயம் 19 ஸுரத்துல் மர்யம் காஃப் - ஹா- யா- அய்ன்-ஸாத் - என்னும் ஐந்து எழுத்துக்களை துவங்குகின்றன.

அத்தியாயம் 42 ஸுரத்துல் அஷ்-ஷுறா- ஹா- மீம் - அய்ன் -ஸீன் - காஃப் - என்னும் ஐந்து எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன. இந்த ஐந்து எழுத்துக்களும் அத்தியாயத்தின் இரண்டு வசனங்களான தொடர்ந்து வருகின்றன. அதாவது ஹா- மீம் என்னும் இரண்டு எழுத்துக்கள் முதல் வசனமாகவும், அதனைத் அடுத்து அய்ன் -ஸீன் - காஃப் -என்னும் மூன்று எழுத்துக்கள் இரண்டாவது வசனமாகவும் தொடர்கின்றன.

2. சுருக்கப்பட்ட எழுத்துக்களுக்கு உண்டான விளக்கம்:

சுருக்கப்பட்ட எழுத்துக்களுக்கான அர்த்தமும் நோக்கமும் தெளிவில்லாமல் இருந்தாலும், மேற்படி அருள்மறையில் காணப்படும் சுருக்கப்பட்ட எழுத்துக்களுக்கு வௌ;வேறான பல விளக்கங்கள் அந்தந்த காலத்தில் வாழ்ந்து வந்த மார்க்க அறிஞர்களால் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இப்போது காண்போம்.

1. மேற்படி எழுத்துக்கள் அருள்மறை குர்ஆனில் உள்ள சில வசனங்களுக்கு உண்டான சுருக்கமாக இருக்கலாம். உதாரணத்திற்கு அலிஃப் - லாம் - மீம் என்பதின் முதல் எழுத்துக்கள் என்றும், 'நூன்' என்பதற்கு 'நூர்' (ஒளி) என்றும் பொருள் கொள்ளலாம் எனவும்,

2. மேற்படி எழுத்துக்கள் சுருக்கப்பட்ட எழுத்துக்கள் அல்ல. மாறாக அல்லாஹ்வின் பெயர்கள் அல்லது அவனது அடையாளங்களில் ஒன்றாக இருக்கலாம் எனவும்,

3. மேற்படி எழுத்துக்கள் ராகத்துடன் உச்சரிப்பதற்காக பயன்படுத்தப் பட்டிருக்கலாம் எனவும்,

4. அரபு எழுத்துக்களில் சிலவற்றுக்கு எண் மதிப்பு உள்ளதைப்போன்று, இந்த எழுத்துக்களுக்கும் முக்கியமான எண் மதிப்புகள் எதுவும் இருக்கக் கூடும் எனவும்,
இந்த எழுத்துக்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக (பின்னர் இறைவசனத்தை கேட்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக) இருக்கலாம் எனவும்)
மேற்படி சுருக்கப்பட்ட எழுத்துகளுக்குண்டான முக்கியத்துவம் குறித்து எண்ணற்ற விளக்கங்கள் நம்மிடையே உள்ளன.

3. அருள்மறையின் சுருக்கப்பட்ட எழுத்துக்களுக்கு உண்டான சிறந்த விளக்கம்:
மேற்படி சுருக்கப்பட்ட எழுத்துகளுக்குண்டான முக்கியத்துவம் குறித்து எண்ணற்ற விளக்கங்கள் நம்மிடையே இருந்தாலும், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான இப்னு-கதீர் அவர்களின் விளக்கமும், ஷமக்ஸாரி, மற்றும் இப்னு-தைம்மியா ஆகியோர்களால் சரிகாணப்பட்ட விளக்கங்களும் பின்வருமாறு:

இயற்கையில் காணப்படும் சில அடிப்படை மூலக்கூறுகளால் ஆனது மனித உடல் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். களிமண்ணும், மண்ணும் இயற்கையில் உள்ள அடிப்படை மூலக்கூறுகளில் உள்ளதாகும். இருப்பினும் மனித உடல் மண்ணால் படைக்கப்பட்டது என்பதை எண்ணும்போது சிரிக்கத்தான் தோன்றுகிறது.

மனித உடலின் இயற்கையான மூலக்கூறுகளான மண்ணையும், களிமண்ணையும்;, தண்ணீரையும் நாம் எல்லோரும் எளிதில் பெறக்கூடிய நிலையில்தான் இருந்தாலும், மேற்படி இயற்கையான மூலக்கூறுகளைக் கொண்டு - மனித உடலை படைக்க நம்மால் முடியாது. மனிதன் இன்ன மூலக்கூறுகளை கொண்டுதான் படைக்கப்பட்டான் என்பதை நாம் நன்றாக அறிந்திருந்தும் படைப்பின் ரகசியம் பற்றி நாம் எதுவும் அறியாதவர்களாகத்தான் இருக்கிறோம்.

அதேபோன்று இறைத்தன்மை வாய்ந்த குர்ஆனை மறுப்பவர்களுக்கு - தன்னைப் பற்றி அறிவிக்கிறது. இறைத்தன்மை வாய்ந்த அருள்மறை குர்ஆன் அரபி மொழியிலேயே உள்ளது என்பது பற்றி பெருமை கொண்டிருக்கும் அரேபியர்களுக்கு தன்னைப் பற்றி அறிவிக்கிறது. அரேபியர்கள் அடிக்கடி உச்சரிக்கக்கூடிய எழுத்துக்களை கொண்டுதான் அருள்மறை குர்ஆன் அமைந்துள்ளது என்பதை அரேபியர்களுக்கு அறிவிக்கிறது.

அரேபியர்கள் தங்களது மொழியைப் பற்றி பெருமை கொள்ளக் கூடியவர்கள். அருள்மறை குர்ஆன் இறக்கியருளப்பட்டபோது, அரபு மொழி - புகழின் உச்சக் கட்டத்தில் இருந்த நேரம். ஆலிஃப் - லாம் - மீம், யா - ஸீன், ஹா-மீம் போன்ற வார்த்தைகளை உள்ளடக்கி இறக்கியருளப்பட்ட குர்ஆன் மனித குலத்திற்கு அறை கூவல் விட்டது. அருள்மறை குர்ஆனின் இறதை;தன்மையில் நீங்கள் சந்தேகம் உடையவர்களாக இருப்பின், இது போன்று ஒரு நேர்த்தியான, அழகான அத்தியாயத்தை நீங்கள் கொண்டு வாருங்கள் என்று அருள்மறை குர்ஆன் மனித குலத்திற்கு சவால் விட்டது.

ஆரம்பத்தில் அருள்மறை குர்ஆன் மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், அருள்மறை குர்ஆன் போன்ற ஒன்றை உருவாக்குமாறு சவால் விட்டது. மனிதர்களும் - ஜின்களும் தங்களுக்குள் ஒருவொருக்கொருவர் உதவி செய்து கொண்டாலும் - அருள்மறை குர்ஆன் போன்ற ஒன்றை உருவாக்க முடியாது என்று சவால் விடுகிறது. இவ்வாறான சவால் அருள்மறை குர்ஆனின் 17வது அத்தியாயம் - ஸுரத்துல் பனீ - இஸ்ராயீலின் 88வது வசனத்திலும், 52வது அத்தியாயம் ஸுரத்துத் தூரின் 34வது வசனத்திலும் காணலாம்.

பின்னர் அருள்மறை குர்ஆன் மேற்படி சவாலை மீண்டும் மனிதர்களிடம் வைக்கிறது. அருள்மறை குர்ஆனின் 11வது அத்தியாயம் ஸுரத்துல் ஹுதின் 13வது வசனம் அருள்மறை குர்ஆனில் உள்ளது போன்று பத்து வசனங்களையாவது கொண்டு வாருங்கள் என்று சவால் விடுகிறது. அருள்மறை குர்ஆனின் 10வது அத்தியாயம் ஸுரத்துல் யூனுஸின் 38வது வசனம் அருள்மறை குர்ஆனில் உள்ளது போன்று ஒரு வசனத்தையாவது கொண்டு வாருங்கள் என்று மனித குலத்திற்கு சவால் விடுகிறது. இறுதியாக அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 23 மற்றும் 24 வது அத்தியாயத்தின் மூலமாக மேற்படி சவாலை இன்னும் எளிதாக்குகிறது:

இன்னும்> (முஹம்மது (ஸல் என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து) க் கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.

(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால் - அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது - மனிதர்களையும், கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும், அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) நிராகரிப்பாளர்களுக்காவே அது சித்தப்படுத்தப் பட்டுள்ளது (அல்-குர்ஆன் அத்தியாயம் 02 ஸுரத்துல் பகராவின் - 23 - 24 வது வசனங்கள்.)

இரண்டு கலைஞர்களின் திறமையை மதிப்பிட வேண்டுமெனில், கலைஞர்கள் இரண்டு பேருக்கும் ஒரே விதமான பொருளைச் செய்யச் சொல்லி, ஒரே விதமான மூலப் பொருள்களை வழங்க வேண்டும். உதாரணத்திற்கு அவர்கள் இரண்டு பேரும் தையற்கலைஞர்கள் எனில், அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே விதமான துணியைக் கொடுக்க வேண்டும். அதபோலவே அரபி மொழியின் மூலப் பொருள் எதுவெனில் அலிஃப் - லாம் - மீம் - யா - ஸீன் போன்ற அரபி எழுத்துக்கள் ஆகும். இறைத்தன்மை வாய்ந்த அருள்மறை குர்ஆனின் மொழி உண்மையையே பேசும். ஏனெனில் அது அல்லாஹ்வின் வேதமாகும். அரபியர்கள் எந்த மொழியயைப் பற்றி பெருமை கொண்டிருந்தார்களோ அதே மொழிதான் அருள்மறை குர்ஆன் இறக்கப்பட்ட மொழியுமாகும்.

அரபியர்கள் தங்களது சொல்லாட்சி திறனுக்கும், நாவன்மைக்கும், அர்த்தமுள்ள உச்சரிப்புக்கும் பெயர் போனவர்கள். எப்படி மனித உடலில் உள்ள மூலக் கூறுகள் என்னவென்று நாம் அனைவரும் அறிவோமோ - அந்த மூலக் கூறுகளை நாம் எவ்வாறு பெறவும் முடியுமோ - அதுபோல -அருள்மறை குர்ஆனின் சுருக்கப்பட்ட அலிஃப் - லாம் - மீம் போன்ற எழுத்துக்களை அரபியர்கள் அனைவரும் அறிவார்கள்;. அந்த எழுத்துக்களைக் கொண்டு வார்த்தைகளையும் உருவாக்குவார்கள்.

மனித உடலில் என்னென்ன மூலக் கூறுகள் உள்ளன என்று நாம் அறிந்திருந்தாலும் மனித உடலை எவ்வாறு நம்மால் உருவாக்க முடியாதோ - அதுபோல அருள்மறை குர்ஆனில் உள்ள எழுத்துக்களை அரபியர்கள் அறிந்து வதை;திருந்தாலும் - அருள்மறை குர்ஆன் பயன்படுத்தவது போன்று சொற் பிரயோகங்களை அவர்களால் பயன் படுத்த முடியாது. இவ்வாறு அருள்மறை குர்ஆன் தன்னுடைய இறைத்தன்மையை நிரூபிக்கிறது.
4. ஒவ்வொரு சுருக்கப்பட்ட எழுத்துக்கு பிறகும்; அருள்மறை குர்ஆன் தனது இறைத்தன்மையை எடுத்து வைக்கிறது.

எனவேதான் ஒவ்வொரு சுருக்கப்பட்ட எழுத்துக்கள் அடங்கிய வசனம் முடிந்ததும் அருள்மறை குர்ஆன் தனது தனித் தன்மையை பற்றி எடுத்து உரைக்கிறது.
உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் முதல் இரண்டு வசனங்கள்:

'அலிஃப் லாம் மீம். இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழி காட்டியாகும்.'(அல்குர்ஆன் - 2: 1-2).

குர்ஆன் பல தெய்வ கொள்கையை வலியுருத்தகின்றதா?

இஸ்லாம் ஓரிறைக் கொள்கையை அடிப்படையாக கொண்ட மார்க்கம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை என்கிற கொள்கையில் எந்தவித மாறுபாடும் இன்றி செயல்பட்டு வரக் கூடிய மார்க்கம் இஸ்லாம். அல்லாஹ் ஒருவனே. அவனுக்கென்று தனித்தன்மைகள் உண்டு என்ற நம்பிக்கையில் எந்தவித மாற்றமுமில்லை. அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் தன்னைப்பற்றி குறிப்பிடும்பொழுது 'நாம்' அல்லது 'நாங்கள்' என்கிற வார்த்தையை பயன் படுத்தப்படுகிறது. அவ்வாறு 'நாம்' அல்லது 'நாங்கள்' என்கிற வார்த்தையை பயன் படுத்துவதால் இஸ்லாம் பல தெய்வக் கொள்கையை உடையது என்கிற வாதம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத வாதமாகும்.

இரண்டு விதமான பன்மைகள்

ஒவ்வொரு மொழியிலும் இரண்டு விதமான பன்மைகள் உள்ளன. ஒன்று -எண்ணிக்கையில் அல்லது அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உண்டெனில் அதனை பன்மை என்பதும், ஒரு மனிதருக்கு அளிக்கக் கூடிய 'மரியாதைப் பன்மை' என்றும் இரண்டு வகையான பன்மைகள் உள்ளன

அ. உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் - இங்கிலாந்து நாட்டின் ராணி தன்னைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது 'I - ஐ' என்று குறிப்பிடாமல் 'WE -வீ' என்று குறிப்பிடுவார். இதற்கு 'மரியாதைப் பன்மை' (Royal Plural) என்று பெயர்.

ஆ. இறந்து போன இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஹிந்தியில் பேசும் பொழுதெல்லாம் 'ஹம் தேக்னா சாத்தா ஹை' - நாம் பார்க்க விரும்புகிறோம்' என்று உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இங்கும் 'ஹமே' என்கிற ஹிந்தி வார்த்தைக்கு 'நாம்' என்ற பொருளாகும். 'ஹமே' என்கிற ஹிந்தி வார்த்தையை - ஹிந்தி மொழியில் உள்ள மரியாதைப் பன்மைக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

இ. அது போலவே அல்லாஹ், தன்னைப் பற்றி அருள்மறையில் குறிப்பிடும் பொழுது 'நஹ்னு' (நாம் அல்லது நாங்கள் என்ற பொருள்) என்னும் அரபி வார்த்தை பயன் படுத்தப்படுகிறது. இந்த வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்டது என்கிற அர்த்தத்தில் வருகின்ற பன்மை அல்ல. மாறாக மரியாதைப் பன்மைக்கு பயன்படுத்தக் கூடிய வார்த்தை.

ஏகத்துவம் அல்லது ஓரிறைக் கொள்கை என்பது இஸ்லாத்தின் அடிப்படை தூண்களில் ஒன்று. அல்லாஹ் ஒருவனே இருக்கின்றான். அவனது தன்மைகள் தனித்தவை. தனித்தன்மை வாய்ந்தவை என்கிற வசனங்கள் அருள்மறை குர்ஆனில் பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் நூற்றுப் பன்னிரெண்டு ஸுரத்துல் இக்லாஸின் முதல் வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது.

'(நபியே!) நீர் கூறுவீராக!. அல்லாஹ் - அவன் ஒருவனே.!'(அல்குர்ஆன் 112:1)

மேற்கண்ட அருள்மறையின் வசனத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கம் ஓரிறைக் கொள்கைக்கு உரிய மார்க்கம் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் மன்னிப்பாளனா? இல்லை பழிவாங்குபவனா?.

1. அல்லாஹ் அளவிலா கருணையாளன்..!

அல்லாஹ் அளவிலா கருணையாளன் - என்று அருள்மறை குர்ஆன் பலமுறை கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 114 அத்தியாயங்களில் ஒரேயொரு அத்தியாயம் (அத்தியாயம் 9 ஸுரத்துத் தௌபா)வைத் தவிர, மற்ற அனைத்து அத்தியாயங்களும் 'பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்' - என்கிற அழகிய வாக்கியத்தோடு ஆரம்பமாகின்றன. 'பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்' - என்கிற அரபிப் பதத்தின் பொருள் - அளவிலா கருணையும், இணையிலா கிருபையுமுடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் - என்பதாகும்.

2. அல்லாஹ் மன்னிப்பாளன்.

அருள்மறை குர்ஆனின் உள்ள ஏராளமான வசனங்கள் அல்லாஹ் மன்னிப்பாளன் என்று கூறுகின்றது. குறிப்பாக அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன்னிஸாவின் 25வது வசனமும், ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 74வது வசனமும் கீழ் கண்டவாறு கூறுகின்றன.

'..இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:25).

'..அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், பெரும் கருணையாளனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 5:74).

2. அல்லாஹ் தண்டனை பெறத் தகுதியானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குகிறான்.

அல்லாஹ் கருணையாளனாகவும், மன்னிப்போனாகவும் இருந்தாலும் - தண்டனை பெறத் தகுதியானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதில் விதிவிலக்கில்லாமல் தண்டனை வழங்குகிறான். அருள்மறை குர்ஆனின் வசனங்கள் பலவற்றில் இறை விசுவாசம் கொள்ளாதவர்களுக்கும், இறை உண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் கடுமையான தண்டனை உண்டு என்று குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்க மறுத்தவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகிறது. அருள்மறை குர்ஆனின் பல வசனங்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்க மறுத்தவர்களுக்கு நரகத்தில் வழங்கப்படும் கடுமையான தண்டனைகளின் வகைகள் என்ன?. அவைகள் எவ்வாறு வழங்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றது.

'யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்: அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.' (திருக்குர்ஆன் 4:56)

3. அல்லாஹ் நீதியாளன்.

அல்லாஹ் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?. என்பதே இங்கு கேட்கப்பட்ட கேள்வி. இங்கு ஒரு முக்கியமான கருத்தை நாம் கவனிக்க வேண்டும். அல்லாங் மன்னிப்பவன். மிக்க கருணையாளன். அதே நேரத்தில் அல்லாஹ் நீதி பரிபாலிப்பவனும் ஆவான். எனவே நீதி பரிபாலிக்கப்பட வெண்டுமெனில், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கியேத் தீர வேண்டும்.

அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன்னிஷாவின் 40வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.

'நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஒரு அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்;...' (திருக்குர்ஆன் 4:40)

மேலும் அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியாவின் 47வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது.

'இன்னும் கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது: மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறு கணக்கெடுக்க நாமே போதும்.' (திருக்குர்ஆன் 21:47)

4. தேர்வில் காப்பி அடிக்கும் மாணவனை - மன்னிக்கக்கூடிய ஆசிரியர் ஓர் உதாரணம்:

ஆசிரியர் ஒருவர் தேர்வு நடந்து கொண்டிருக்கும் பொழுது மாணவன் ஒருவன் காப்பி அடிப்பதை கையும் களவுமாக பிடித்து விடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆசிரியர் கருணை உள்ளம் கொண்டவர். மன்னிக்கும் மனோ பக்குவமும் உள்ளவர். எனவே தொடர்ந்து காப்பி அடிக்க மாணவனை அனுமதித்து விடுகிறார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். இரவு முழுவதும் கண் விழித்து படித்து விட்டு வந்து தேர்வு எழுதும் மற்ற மாணவர்கள் ஆசிரியரை கருணை உள்ளம் கொண்டவர் என்றும், மன்னிக்கும் மனோ பக்குவம் உள்ளவர் என்றும் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், மாணவர்கள் - ஆசிரியரை அநியாயக்காரர் என்று அழைப்பார்கள். ஆசிரியரின் கருணையுள்ளம் மேலும் பல மாணவர்களை தேர்வில் காப்பி அடிக்கத் தூண்டும். இதுபோல எல்லா ஆசிரியர்களும் கருணையுள்ளம் கொண்டு மாணவர்களை தேர்வில் காப்பி அடிக்க அனுமதித்தால், எல்லா மாணவர்களிடமும் தேர்வுக்காக படித்து எழுதும் பழக்கம் மாறி, காப்பி அடிக்கும் பழக்கம் உருவாகும். காப்பி அடித்ததால் எல்லா மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவார்கள். தேரிவியலில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறும் மாணவர்கள், நடைமுறை வாழக்கையில் தோல்வியைத்தான் சந்திப்பார்கள். மாணவர்களுக்காக தேர்வு நடத்துவதின் முழு நோக்கமும் தோல்வியைத் தழுவும் என்பது நிச்சயம்.

6. மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை, மறுமை வாழ்க்கைக்கான தேர்வு.
நம்முடைய இவ்வுலக வாழ்க்கையானது மறுமை வாழ்க்கைக்கு உரிய தேர்வுதான். அருள்மறை குர்ஆனின் 67வது அத்தியாயம் ஸுரத்துல் முல்க் - ன் 2வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது.

'உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்: மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்: மிக மன்னிப்பவன்.'(திருக்குர்ஆன் 67:2)

7. அல்லாஹ் எல்லா மனிதர்களையும் தண்டனை அளிக்காமல், மன்னித்து விடுவதாக இருந்தால் யார்தான் அல்லாஹ்வுக்கு அடிபணிவார்?.

அல்லாஹ் எந்த மனிதருக்கும் தண்டனை அளிப்பதில்லை. எல்லா மனிதர்களுக்கம் மன்னிப்பளித்து விட்டு விடுவான் என்கிற நிலை இருக்கும் எனில் - மனிதர்கள் ஏன் அல்லாஹ்வுக்கு அடி பணிந்து நடக்க வேண்டும்?. யாரும் நரகத்துக்கு போகமாட்டார்கள் என்பதை நானும் ஆதரிக்கிறேன். ஆனால் மனிதர்கள் வாழும் இந்த உலகம் அல்லவா நரகமாகப் மாறி விடும். எல்லா மனிதர்களும் பாரபட்சமின்றி சொர்க்கத்திற்குத்தான் செல்வார்கள் எனில் - மனிதன் இவ்வுலகில் படைக்கப் பட்டதின் நோக்கம்தான் என்ன?. எனவே இவ்வுலக வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைக்கு உண்டான ஒரு தேர்வேயன்றி - வேறில்லை.

8. அல்லாஹ் - தன் கட்டளைகளுக்குக் கீழ் படிகிறவர்களுக்கு மாத்திரம்தான் மன்னிப்பு வழங்குவான்.

அல்லாஹ் - தன் கட்டளைககளுக்குக் கீழ் படிகிறவர்களுக்கு மாத்திரம்தான் மன்னிப்பு வழங்குவான். அருள்மறை குர்ஆனின் 39வது அத்தியாயம் ஸுரத்துஜ் ஜுமரின் 53 முதல் 55வது வசனங்கள் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

'என் அடியார்களே!. (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன்' (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.' (திருக்குர்ஆன்- 39:53)

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்: (வேதனை வந்து விட்;டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (திருக்குர்ஆன்- 39:54)

நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறவைனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றை பின்பற்றுங்கள். (திருக்குர்ஆன் 39:55)

நான்கு வகையான செயல்கள் மூலம் நிங்கள் செய்கிற தவறுகளிலிருந்து திருந்திக் கொள்ள முடியும். அவையாவன:

1. முதலில் நீங்கள் செய்யும் தவறான செயல்கள் சரியானது இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

2. இரண்டாவதாக செய்யும் தவறுகளை உடனடியாக நிறுத்துங்கள்.

3. மூன்றவதாக நீங்கள் செய்த தவறுகளை இனி ஒருபோதும் செய்யாதீர்கள்.

4. கடைசியாக நீங்கள் செய்த தவறுகளால் எவரேனும் பாதிக்கப் பட்டிருந்தால், பாதிக்கப் பட்டதற்கான பரிகாரம் தேடுங்கள்;.