ஞாயிறு, 13 அக்டோபர், 2013

பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்


காஃபிர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறதே, இஸ்லாத்தை ஏற்காதவர்களை காஃபிர்கள் என்று வசைபாடுகிறதே, முஸ்லிமல்லாத மக்களுடன் சகிப்புத் தன்மையுடன் நடக்கக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் கட்டளையிடுகிறதே.
மேற்கூறியவை இந்தியாவில் பரவலாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள். இந்தக் குற்றச் சாட்டுக்களைப் பொது மேடையில் பேசி இந்துக்களுக்கு முஸ்லிம்களுக்கும் பகைமை ஊட்டப்பட்டு வருகின்றது. திருக்குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப் படுகின்றது.

இவை, உண்மை கலப்பில்லாத குற்றச்சாட்டுக்களாகும்.

முஸ்லிமல்லாதவர்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது உண்மை தான். காஃபிர்கள் என்பது ஏசுவதற்குரிய வார்த்தையன்று. அரபு மொழியில் காஃபிர்கள் என்பதற்கு மறுப்பவர்கள், நிராகரிப்பவர்கள் என்று பொருள். இஸ்லாத்தை மறுப்பவர்கள், இஸ்லாத்தை நிராகரிப்பவர்கள் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன் படுத்தப்படுகிறது.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை இஸ்லாத்தை ஏற்காதவர்கள் எனக் கூறுவதில் இழிவுபடுத்துதல் ஏதுமில்லை. காஃபிர்கள் என்பதன் பொருள் தெரியாத காரணத்தினால் அது ஏதோ திட்டக்கூடிய வார்த்தை என எண்ணிக் கொள்கின்றனர்.

"காஃபிர்களைக் கொல்லுங்கள்! காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள்" என்றெல்லாம் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளதே? என்ற குற்றச்சாட்டும் தவறாகப் புரிந்து கொண்டதனால் ஏற்பட்டதாகும். முதலில் அவர்கள் சுட்டிக் காட்டும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.

அவர்களைக் கண்ட இடத்தில் நீங்கள் வெட்டுங்கள்! உங்களை அவர்கள் வெளியேற்றியது போல் அவர்களை நீங்கள் வெளியேற்றுங்கள்! குழப்பம் கொலையை விடக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராம்(கஃபா வளாகம்)அருகில் அவர்கள் உங்களுடன் போர் செய்யாத வரை அவர்களுடன் நீங்கள் போர் செய்யாதீர்கள்! அவர்கள்(அங்கே) உங்களுடன் போர் செய்தால் நீங்களும் அவர்களுடன் போர் செய்யுங்கள்! (அல்குர்ஆன் 2:191)
இது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம்.

இவ்வசனத்தில் "அவர்கள்" என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களைக் குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.

இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.

உங்களுடன் போருக்கு வருபர்களுடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போரிடுங்கள்! வரம்பு மீறி விடாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 2:190)
உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.

ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொடுக்குமா?

போர் என வந்து விட்டால் எல்லா விதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருக்குர்ஆன் "அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்" எனக் கூறி போர்க்களத்திலும் புதுநெறியை இஸ்லாம் புகுத்துகிறது.

நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

அல்குர்ஆன் 4:89, 4:90, வசனங்களில் போர்ப் பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் எதிரிகளை வெட்டுங்கள் எனக் கூறப்படுகிறது.

அந்தச் சமயத்தில் கூட நீங்கள் முஸ்லிமல்லாத மக்களுடன் உடன்படிக்கை செய்திருந்தால் அவ்வாறு உடன்படிக்கை செய்த மக்களுடன் எதிரிகள் சேர்ந்து விட்டால் அவர்களைக் கொல்லாதீர்கள் எனவும் அவ்வசனங்கள் கூறுகின்றன. முஸ்லிமல்லாத எத்தனையோ சமுதாயத்தவர்களுடன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்து அவர்களுடன் இணக்கமாக வாழ்ந்துள்ளனர்.

போர் செய்ய வந்த எதிரிகளுக்கு உடன்படிக்கை செய்தவர்கள் அடைக்கலம் கொடுத்தால் அவர்களை விட்டு விடுமாறும் இஸ்லாம் கூறுகிறது.

போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நேரத்தில் எந்த ஆட்சியாளரும் செய்வதை விட பெருந்தன்மையுடன் நடக்கக் கூறும் இவ்வசனங்களைத் தான் சிலர் தங்களின் தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடக்கும் போது "எதிர்த்து வருவோரை சுட்டுத் தள்ளுங்கள்" என்று இந்தியப் பிரதமர் ஆணையிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த உத்தரவுப்படி பாகிஸ்தானிய முஸ்லிம் வீரர்கள் சுட்டுத் தள்ளப்பட்டால் இந்தியா முஸ்லிம்களை கொன்று குவிக்கிறது என யாரும் கூறமாட்டார்கள். சுடப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்கள் சுடப்படவில்லை. போருக்கு வந்த எதிரிகள் என்ற காரணத்திற்காகத்தான் இவர்கள் சுடப்படுகின்றனர்.

ஆனால் இஸ்லாமிய வரலாற்றை மட்டும் இவ்வாறு புரிந்து கொள்ள மறுப்பது தான் விசித்திரமாக உள்ளது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாம் மதீனாவிலும் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்பட வில்லை.

இஸ்லாம் எவ்வளவு சகிப்புத் தன்மையுடைய மார்க்கம் என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் தவறான எண்ணம் கொண்டவர்கள் முன் வைப்பது பொருத்தமாக இருக்கும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனா நகர் சென்றதும் இறைவனை வணங்குவதற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அந்தப்பள்ளி வாசலில் நபிகள் நாயக்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அமர்ந்திருந்த போது முஸ்லிமல்லாத ஒரு கிராமவாசி வருகிறார். பள்ளிவாசலுக்குள் நுழைந்து அதன் ஒரு மூலையில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைக் கண்ட நபித்தோழர்கள் ஆத்திரமுற்று அவரைத் தாக்கத் தயாரானார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் "அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை விட்டு விடுங்கள்" எனக் கூறினார்கள்.

அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை காத்திருந்து அவரை அழைத்தனர். அவரிடம் மென்மையாக "இது அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம். இங்கே அசுத்தம் செய்யக் கூடாது" என்று கூறி அனுப்பினார்கள்.

பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தவரைக் தண்டிக்காமல் அவர்கள் விட்டு விட்டது சாதாரணமான ஒரு செயலாக யாருக்கும் தோன்றலாம். ஆனால் சிறுநீர் கழிப்பதைக் கண்டு, அவர் கழித்து முடிக்கும் வரைக் காத்திருந்து மென்மையாக அறிவுரை கூறியதைச் சாதாரணமாகக் கருதமுடியாது. இத்தகைய சகிப்புத்தன்மையை எந்த மதவாதியிடமும் காணமுடியாது.

இஸ்லாம் ஒரு கடவுளைத்தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடிய கற்சிலைகளுக்கு எந்தவிதமான சக்தியும் கிடையாது என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்துகிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக்கூடாது என இஸ்லாம் திட்டவட்டமாக உத்தரவிடுகிறது.

அவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். அவ்வாறு ஏசினால் அறியாமை காரணமாக அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள். (அல்குர்ஆன் 6:108)
தான தர்மங்கள் செய்வதில், உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப்பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளை பிறப்பிக்கிறது.

மார்க்க விஷத்தில் உங்களுடன் எதிர்த்துப் போர் புரியாதவர்களுக்கும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. (அல்குர்ஆன் 60:8)

விசுவாசிகளே! நீதியை நிலைநாட்டக் கூடியவராகவும் நீதிக்குச் சாட்சிகளாகவும் ஆகி விடுங்கள்! ஒரு சாரார் மீது(உங்களுக்குள்ள) வெறுப்பு(அவர்களுக்கு) நீதி செலுத்தாதிருக்கும்படி உங்களைத் தூண்டக் கூடாது. நீங்கள்(அனைவரிடமும்) நீதியாக நடந்து கொள்ளுங்கள்! அதுவே இறையச்சத்துக்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் (அல்குர்ஆன் 5:8)
இத்தகைய மார்க்கத்தைத் தான் வன்முறை மார்க்கம் எனத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நியாய உணர்வுடையோர் இதை உணர்வார்கள்.

இஸ்லாமியப் போர்கள் Vs முஸ்லிம்களின் போர்க


முஸ்லிமல்லாதவர்களை மதமாற்றம் செய்வதற்காகவும் மறுப்பவர்களைக் கொன்று குவிப்பதற்காகவும் பிறநாட்டில் உள்ள அழகு மங்கையரைக் கவர்ந்து செல்வதற்காகவும் அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் முஸ்லிம்கள் படையெடுத்து உள்ளனர் என்றும் இஸ்லாம், பிறமதங்களைச் சகித்துக் கொள்ளாத மார்க்கம் என்பதற்கும் அருவாள் முனையில் பரப்பப்பட்ட மார்க்கம் என்பதற்கும் இந்தப் போர்களும் படையெடுப்புகளும் சான்றுகளாக உள்ளன என்பது முஸ்லிமல்லாதவர்கள் அடிக்கடி எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

முகலாய மன்னர்களும், வேறு பல முஸ்லிம் மன்னர்களும் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஏராளமான போர்களை நிகழ்த்தியுள்ளதையும் தங்கள் வாதத்துக்குச் சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பல போர்களைச் சந்தித்ததும் உண்மை.

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததும் உண்மை.

ஆயினும் இவற்றை ஆதாரமாகக் கொண்டு எடுத்து வைக்கப்படும் வாதங்கள் தாம் உண்மைக்கு அப்பாற்பட்டவை.

இவர்கள் எடுத்துக் காட்டுகின்ற இரண்டு ஆதாரங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவர்கள் கூறுகின்ற காரணங்களுக்காகப் போர் செய்திருந்தால் அதைக் காரணமாகக் கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்வதில் நியாயம் உள்ளது. அவர்களைத் தவிர ஏனைய முஸ்லிம் மன்னர்கள் எந்தக் காரணத்துக்காகப் போர் செய்திருந்தாலும் அதற்காக இஸ்லாத்தை விமர்சிப்பது அறிவுடைமையாகாது.

ஆகவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி மட்டும் விளக்குவதுதான் நமது பொறுப்பாகும். ஆயினும் நாம் வாழக்கூடிய நாட்டில் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்து வந்தது பற்றியே பிரதானமாகப் பேசப்படுவதால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும் அதுபற்றி சுருக்கமாக ஆராய்ந்து விட்டு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி ஆராய்வோம்.

அன்றைய காலத்தில் போர்கள் சர்வ சாதாரணமாக நடந்து வந்தன. மன்னர்களின் சுயநலத்திற்காகப் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டதுண்டு.

அன்றைக்கு தனித்தனி நாடுகளாக விளங்கிய சேர, சோழ, பாண்டிய நாட்டு மன்னர்கள் ஒருவருடன் ஒருவர் போர் புரிந்த வரலாறு உண்டு. அன்றைக்குத் தனி நாடாக விளங்கிய வடநாட்டின் மீது பாண்டிய மன்னன் படை நடத்திச் சென்று வெற்றி பெற்ற வரலாறும் உண்டு. இந்த நாட்டைச் சுரண்டுவதற்காக ஆரியர்கள் படையெடுத்து வந்த வரலாறும் உண்டு. மத நம்பிக்கையில்லாத திராவிடர்கள் மீது ஆரியர்கள் இந்து மதத்தை திணித்த வரலாறும் உண்டு. பலநாடுகள் மீது படையெடுத்துச் சென்ற அலெக்சாண்டரின் வீர(?) வரலாறும் உண்டு. வெள்ளையர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட சமீபத்திய வரலாறும் உண்டு. தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும், பகைமை கொண்டிருந்த அண்டை நாட்டு மன்னனுக்குப் பாடம் புகட்டுவதற்காகவும், வளங்களை வாரிச் செல்வதற்காகவும் எத்தனையோ படையெடுப்புகளை உலகம் சந்தித்துள்ளது அது போன்ற ஒரு படையெடுப்பே முகலாயர்களின் படையெடுப்பும்.

முஸ்லிம் படையெடுப்புகள்

வெண்ணி, வாகை, புள்ளலுர் பரியலம், மணி மங்கலம், நெய்வேலி, பெண்ணாடகம், விழிஞம், தெள்ளாறு, திருப்புறம்பியம், வெள்ளூர், தக்கோலம், நொப்பம், கூடல், கலிங்கம், ஈழம், சுமந்திரம், மகேந்திரமங்கலம், மற்றும் கண்ணனூர் ஆகிய போர்கள் தமிழக அளவில் இந்து மன்னர்கள் நிகழ்த்திய போர்களில் சில. இன்னும் ஏராளமான போர்கள் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் நிகழ்ந்துள்ளன.

இந்தப் போர்களுக்கெல்லாம் எவை காரணமாக இருந்தனவோ அவைதாம் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புக்கும் காரணங்களாக இருந்தன. நிச்சயமாக மதத்தைப் பரப்புவதோ மதமாற்றம் செய்வதோ இதற்குக் காரணங்களாக இருந்ததில்லை.

முஸ்லிம் மன்னர்கள் 800 ஆண்டுகாலம் இந்த நாட்டை ஆட்சி புரிந்தனர். இந்து மதத்தை அவர்கள் அழிக்க நினைத்திருந்தால் அதற்கு 800 ஆண்டுகள் மிகவும் அதிகமாகும். அதற்கு குறைவான ஆண்டுகளிலேயே அழித்திருக்க முடியும்.

அவர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயங்கள் இதற்கு இன்றளவும் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன.

இந்துக் கோவில்களைக் கட்டிய முஸ்லிம் மன்னர்களும் அவற்றுக்கு மானியம் வழங்கிய முஸ்லிம் மன்னர்களும் இருந்துள்ளனர்.

இஸ்லாம் தடை செய்துள்ள ஆடல் பாடல்களை அவர்கள் தடை செய்ததில்லை. வட்டியை அவர்கள் ஒழித்ததில்லை. குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய தண்டனைகளை அவர்கள் சட்டமாக்கவில்லை. அரசுப் பதவிகளில் முஸ்லிமல்லாதவர்களை பெருமவு நியமிருத்திருந்தார்கள். முஸ்லிமல்லாத பெண்களை மணந்தார்கள்.

இன்னும் இஸ்லாத்தின் ஆயிரமாயிரம் கட்டளைகளைப் புறக்கணித்தவர்கள் இஸ்லாத்தை இந்த நாட்டில் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்களா? நடுநிலையாக யோசிக்க வேண்டும்.

இஸ்லாத்தை விட்டும் வெகுதூரம் விலகியிருந்த முஸ்லிம் மன்னர்கள் வாளால் மிரட்டி இந்திய மக்களை முஸ்லிம்களாக்கினார்கள் என்று நியாயவுணர்வுடைய எவருமே கூறத்துணிய மாட்டார்.

நவீன ஆயுதங்களுடன் இந்த நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளையர்களை 200 ஆண்டுகளில் நாட்டு மக்கள் விரட்டியடித்தனர். அதற்கு முன்பே அவர்களை வெளியேற்ற ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன.

ஆனால் முஸ்லிம் மன்னர்கள் கத்தி, அரிவாள், வாள், கேடயம் போன்ற சாதாரண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் ஆள்பலமே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்ற காலத்தில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர். முஸ்லிம் மன்னர்கள் மதமாற்றம் செய்வதில் ஈடுபட்டிருந்தால் வாள் முனையில் மிரட்டியிருந்தால் ஒரு சதவிதத்துக்கும் குறைவாக இருந்த அவர்களை இந்த நாட்டு மக்கள் வெறும் கையாலேயே அடித்து விரட்டியிருப்பார்கள். முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது அவர்கள் மக்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை என்பதற்குச் சான்றாக உள்ளது.

ஆயினும், ஒரு விஷயத்தை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். மோசமான நடத்தையுடைய முஸ்லிம் மன்னர்களின் மோசமான ஆட்சி, அதற்கு முன் நடந்த மன்னர்களின் ஆட்சிகளை விட சிறப்பானதாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், மிகச் சிறு படையுடன் வந்தவர்களை இந்திய மக்கள் பல நூற்றாண்டுகள் வரை சகித்துக் கொண்டிருக்க முடியாது.

இந்துக்களின் போர்களுக்கெல்லாம் இந்துமதம் தான் தூண்டிவிட்டது என எப்படி கூறமுடியாதோ அது போலவே முஸ்லிம்கள் நிகழ்த்திய போர்களை எல்லாம் இஸ்லாமே தூண்டிவிட்டது எனக் கூறமுடியாது.

சுருக்கச் சொல்வதென்றால் வாள்முனையில் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. பரப்பமுடியும் என்றாலும் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் நிச்சயமாக யாரையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்ததில்லை. அப்படியே செய்திருந்தார்கள் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை. ஏனெனில் திருக்குர்ஆனில் கூறப்பட்டவையும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டிய வழியும் தான் இஸ்லாம். முஸ்லிம் பெயர் தாங்கிகளின் தவறான செயல்களுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது.

இம் மார்க்கத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாக உள்ளது. (அல்குர்ஆன் 2:256)

எனவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஏராளமான யுத்தங்களில் ஈடுபட்டுள்ளார்களே! அவர்களும் நாடு பிடித்துள்ளார்களே! இதற்கு என்ன கூறுகிறீர்கள்? என்ற அடிப்படையான விஷயத்துக்கு வருவோம்.

அது பற்றியே நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சந்தித்த போர்களங்கள் எந்த அடிப்படையிலானவை? என்பதை விரிவாகக் காண்போம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் போர்கள் நாடு பிடிப்பதற்காகவா?

தனது நாட்டை விரிவுபடுத்திக் கொள்வதற்காக நபி(ஸல்) அவர்கள் போர் நடத்தினார்களா? நிச்சயமாக இல்லை. இதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும், அவர்களின் முன்னூறுக்கும் சற்று அதிகமான தோழர்களும், மக்காவின் எதிரிகளுடன் "பத்ர்" எனுமிடத்தில் போர் புரிந்தனர். ஆயிரம் பேர் கொண்ட எதிரிகளின் படை இந்த முதல் போரிலேயே படுதோல்வி கண்டு ஒடலாயிற்று. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர். அனைவரும் அறிந்து வைத்துள்ள வரலாற்று நிகழ்ச்சி இது.

நாடு பிடிப்பது அவர்களின் நோக்கம் என்றால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? தோல்வியுற்று ஓடுபவர்களை விரட்டிச் சென்றிருக்க வேண்டும். விரட்டிச் சென்று அவர்களைக் கொன்று குவித்திருக்க வேண்டும். மேலும் முன்னேறி எதிரிகளின் தலை நகரம் மக்கா வரை சென்று வெறியாட்டம் போட்டிருக்க வேண்டும். அந்த ஒரு போரிலேயே மக்கா அவர்களின் கைவசமாக ஆகி விடக் கூடிய அருமையான சூழ்நிலை வெற்றியடைந்த எந்தத் தலைவரும் நடந்து கொள்ளும் முறையும் அதுதான்.

"பத்ர்" எல்லையத் தாண்டி அவர்கள் ஒரடியும் எடுத்து வைக்க வில்லை என்றால் நாடு பிடிப்பது அவர்களின் நோக்கமில்லை என்பதற்கு இதை விடவேறு என்ன சான்று வேண்டும்?

'உம்ரா' எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான தம் தோழர்களுடன் புறப்பட்டு மக்காவுக்குச் சென்றனர். ஹுதைபியா எனும் இடம் வரை வந்து விட்டனர். மக்காவுக்குள் அனுமதிக்க எதிரிகள் மறுத்தனர். நபியவர்களுக்கு ஆத்திரமூட்டும் அளவுக்கு பிடிவாதம் பிடித்தனர். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நாடு பிடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அரை மணி நேரத்திற்குள் மக்கா நகரம் அவர்களின் வசமாகி இருக்கும். ஆனாலும் நபியவர்கள் பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து அவர்களுடன் சமாதான உடன் படிக்கை செய்து கொண்டனர். மக்காவுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றாமலேயே திரும்பி வந்தனர். இதுவும் அனைவராலும் அறியப்பட்ட வரலாறுதான். நாடு பிடிக்கும் எண்ணம் நபியவர்களுக்கு இருந்ததில்லை என்பதற்கு இவையே போதுமாகும்.

கொள்ளையிடுவதற்காகவா! எதிரி நாட்டு வளங்களைக் கொள்ளையிடுவதற்காகப் போர் நடத்தினார்களா என்றால் நிச்சயமாக இல்லை. "தாயிப்" நீங்கலாக உள்ள மற்ற பகுதிகள் எதுவும் மதீனாவை விட வளமானதாக இருந்ததில்லை. போர் நோக்கமாக அது இருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் அவர்களுக்குத் தெளிவான கட்டளையும் பிறப்பித்துள்ளது.

விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டால் தீர விசாரித்துக் கொள்ளுங்கள்! உங்களை நோக்கி ஸலாமை-(சமாதானத்தை) கூறியவரிடம் (அவரிடம் உள்ள) இவ்வுலக சாதனங்களை (கைப்பற்ற)நாடி 'நீர் விசுவாசி அல்ல' எனக் கூறாதீர்கள் அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. (அல்குர்ஆன் 4:94)

கொள்ளையிடுவது அவர்களின் குறிக்கோளாக இருக்கலாகாது என்று குர்ஆன் தெளிவான கட்டளையிட்டிருக்கும் போது அவர்கள் நடத்திய போருக்கு இது காரணமாக இருக்க முடியாது.

பழிவாங்குவதற்கா?
எதிரிகள் ஏற்கனவே செய்த கொடுமைகளுக்குப் பழிவாங்குவதற்காக போர்க்களங்களைச் சந்தித்தார்களா? நிச்சயமாக அதுவுமில்லை.

மக்காவில் வெற்றிவீராக நபியவர்கள் நுழைந்த நேரத்தில் பழி வாங்குவதற்குரிய அத்தனை காரணங்களும் இருந்தன. சக்தியும் இருந்தது. நபிகள் நாயகத்தைக் கல்லால் அடித்தவர்கள் அங்கே நின்றார்கள். அவர்களைக் கொலைச் செய்யத் திட்டம் தீட்டியவர்கள், அவர்களை நாடு துறத்தக் காரணமானவர்கள், தோழர்களை கொன்றவர்கள், இஸ்லாத்தை ஏற்றதற்காக சுமையா என்ற பெண்ணின் மர்ம உறுப்பில் ஈட்டியை நுழைத்து கொன்றவர்கள், மதீனாவுக்குச் சென்ற பின்பும் பல முறை அவர்களுடன் போர் புரிந்தவர்கள், இப்படி பலரும் அங்கே நின்றார்கள். தங்களின் கதி என்னவாகுமோ என்று பயந்து போய் நின்றார்கள்.

அனைவருக்குமே பொது மன்னிப்பு வழங்கியது தான் அவர்கள் வழங்கிய தண்டனை. பழி வாங்குவதற்குரிய அத்தனை நியாயங்களும் அவர்கள் பக்கம் இருந்தன. ஆனாலும் எவரையும் பழிவாங்கவில்லை. இந்த ஒரு நிகழ்ச்சியே அவர்களின் உயர் பண்புக்குப் போதுமான சான்றாகும்.

ஒரு கூட்டத்தினர் மீது உங்களுக்குள்ள வெறுப்பு நீதியுடன் நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதியுடன் நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவன்.
(அல்குர்ஆன் 5:8)

என்று இறைவன் கட்டளையிட்டிருக்கும் போது எப்படி அவர்கள் அதை மீறியிருப்பார்கள்?

ஒரு போர்க்களத்தில் பெண்ணொருத்தி கொல்லப்பட்டுத் கிடப்பதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அதை ஆட்சேபித்து பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

போர்க்களத்தில் வரம்புமீறாதீர்கள்! சிறுவர்களையும் மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி.
(அறிவிப்பவர்: புரைதா(ரலி) நூல்கள்: முஸ்லிம்)

போர்க்களத்தில் எந்த தர்மமும் பார்க்க வேண்டியதில்லை என்பது உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தும் இங்கேயும் புது நெறியைக் கற்றுத் தரும் அளவுக்கு அவர்களின் உள்ளம் விசாலமானது. எனவே பழி வாங்குதல் என்பது அவர்களிடம் கற்பனை கூட செய்ய முடியாதது.

மத மாற்றம் செய்வதற்காகவா? மற்றவர்களை மத மாற்றம் செய்வதற்காக போர் நடத்தினார்களா என்றால் நிச்சயமாக அதுவும் இல்லை.

இம் மார்க்கத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாக உள்ளது. (அல்குர்ஆன் 2:256)

அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் கட்டாயமாக மதமாற்றம் செய்வதை தடை செய்கின்றது. வெற்றியடைந்த பின் அம்மக்களிடம் இஸ்லாத்தை எடுத்தச் சொல்வார்கள். விரும்பியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். விரும்பாதவர்கள் ஜிஸ்யா வரி செலுத்திவிட்டு அவர்களின் மதத்திலேயே நீடிப்பார்கள். (ஜிஸ்யா வரி பற்றி முன்னர் விளக்கப்பட்டு உள்ளது)

இணை வைப்பவர்களில்(அதாவது மாற்று மதத்தவர்களில்) உள்ள எவரேனும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் இறைவனின் வார்த்தையை அவர் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் கொடுப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக! ஏனெனில் அவர்கள் அறியாத மக்களாக உள்ளனர். (அல்குர்ஆன் 9:6)

மாற்று மதத்தவர்களிடம் நபியவர்களின் நடைமுறை எத்தகையதாக இருந்தது என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.

எதற்காகப் போர் செய்தனர்?
மேற்கண்ட காரணங்களுக்காக போர் நடக்கவில்லை என்றால் அவர்கள் போர் நடத்தியதாகச் சொல்லப்படுவது பொய்யா? அதற்கு வேறு காரணங்கள் ஏதும் உள்ளனவா? என்ற கேள்விகளுக்கு வருவோம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எந்தப் போரிலும் பங்கெடுத்ததில்லை என்று நாம் சொல்லவில்லை. சன்னியாசியாக வாழ்ந்தார்கள் என்று நாம் சொல்லவில்லை.

தாங்களே களத்தில் இறங்கியுள்ளார்கள் மிகச் சிறந்த படைத் தளபதியாக இருந்தார்கள். எத்தனை ஒட்டகங்களை எதிரிகள் அறுத்துள்ளனர் (உணவுக்காக) என்பதை விசாரித்து எதிரிகளின் எண்ணிக்கையை சரியாக மதிப்பிடக் கூடிய அளவுக்கு திறமை மிக்க தலைவராக இருந்தார்கள். அவர்கள் படை நடத்திச் சென்றதற்கு கீழ்கண்ட காரணங்கள் இருந்தன. இது சரியா தவறா என்று நடுநிலையுடன் சிந்தியுங்கள்.

முதலாவது காரணம். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் சொந்த ஊரிலிருந்து அநியாயமாக விரட்டப்பட்டு மதீனா வந்து அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் போது மக்காவை விட்டு அவர்களை விரட்டியவர்கள், அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் கூண்டோடு கறுவறுப்பதற்காக படையெடுத்து வந்தனர். அவர்களை எதிர்த்துப் போரிடவில்லையானால் மொத்த சமுதாயமும் அழிந்து விடக்கூடிய அபாயம் ஏற்பட்ட போது எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக நபி(ஸல்) அவர்கள் போர்களை சந்தித்துள்ளனர். எல்லாப் போர்களுக்கும் இதுவே காரணமில்லை என்றாலும் சில போர்கள் இந்த ஒரு காரணத்துக்காகவே நடத்தப்பட்டன.

நியாய உணர்வுடைய எவரும் இதில் குறை காணமாட்டார்கள். இந்தக் காரணத்துக்காக நடத்தப்பட்ட போர்களில் இரண்டை மட்டும் இங்கே நாம் விளக்குவோம்.

"உஹதுப் போர்" என்பது பிரசித்தி பெற்ற போராகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தலைமையேற்று நடத்திய இந்தப் போர் 'உஹத்' எனும் மலை அடிவாரத்தில் நடந்ததால் 'உஹதுப் போர்' என்று இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது.

போர் நடந்த இடம் மதீனாவுக்கு ஐந்து மைல் தொலைவில் உள்ளது. மக்காவிலிருந்து ஏறத்தாழ முன்னூறு மைல் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அதாவது மக்காவாசிகளான எதிரிகள் சுமார் முன்னூறு மைல்களைக் கடந்து மதீனாவின் எல்லை வரை வந்துவிட்டனர். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வெறும் ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்தனர்.

முன்னூறு மைல்களைக் கடந்து வந்தவர்கள் வம்புச் சண்டைக்கு வந்தவர்களா? ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்திக்க நபியவர்கள் வம்புச் சண்டைக்குச் சென்றார்களா? முன்னூறு மைல்களைக் கடந்து வருவதென்றால் அன்றைய காலத்தில் அதற்கு எவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்! எவ்வளவு நாட்களுக்கு முன் புறப்பட்டிருக்க வேண்டும் இந்த நிலையிலும் ஆட்சித் தலைவராக உள்ள நபியவர்கள் தமது குடிமக்களின் நலனைப் பேண வேண்டிய நபியவர்கள் இதைக் கண்டு கொள்ளாமலிருக்க வேண்டும் என்று எவருமே எதிர்பார்க்க முடியாது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த இரண்டாவது போரின் நிலை. இதுவென்றால், அவர்கள் சந்தித்த முதல் போரின் நிலையும் இத்தகையது தான்.

'பத்ருப் போர்' என்று அறியப்படும் இப்போர் பத்ரு எனும் பள்ளத்தாக்கில் நடைபெற்றது. இந்த இடம் மதீனாவுக்கு எண்பது மைல் தொலைவிலும், மக்காவுக்கு இருநூறு மைல்களை விட அதிக தூரத்திலும் அமைந்துள்ளது.

வலியப்போர் செய்ய நபியவர்கள் சென்றிருந்தால் மக்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் போர் நடந்திருக்க வேண்டும். மதீனாவுக்கு அருகிலேயே இருப்போர் நடந்துள்ளதால் இதுவும் தற்காப்புப் போர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறியலாம்.

தங்களின் ஒப்பந்தங்களை முறித்து விட்டவர்களுடன் நீங்கள் போரிட வேண்டாமா? (இறைத்) தூதரை வெளியேற்றத் திட்டமிட்டவர்களுடன் (நீங்கள் போரிட வேண்டாமா?) மேலும் அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள நிலையில் (நீங்கள் போரிட வேண்டாமா?) (அல்குர்ஆன் 9:13)

போரை முதலில் துவக்கியவர்களே அவர்கள்தான் என்று திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது. சில போர்கள் இந்தக் காரணத்துக்காகவே நடத்தப்பட்டவை.

இரண்டாவது காரணம்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற பின் அங்குள்ள மக்களின் பேராதரவுடன் ஒரு ஆட்சியை நிறுவினார்கள். மதீனாவும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் அந்த நாட்டின் எல்லைகளாக இருந்தன. சிறியதோ, பெரியதோ ஒரு நாடு என்று ஆகிவிட்டால் அதற்கென இறையான்மை உண்டு. அதை மற்ற நாடுகள் பேணி நடக்க வேண்டும். ஒரு நாட்டுக்குள் அன்னிய நாட்டவர் பிரவேசிக்க வேண்டுமானால் அந்த நாட்டின் முன் அனுமதி பெற வேண்டும். இது இன்றைக்கு மட்டுமல்ல. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தது.

இதனால்தான் மக்காவுக்கு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றச் சென்ற நபியவர்கள் மக்காவாசிகளின் ஆட்சேபணைக்கிணங்கத் திரும்பி வந்தார்கள்.

ஆனால் மக்காவாசிகள் மதீனாவின் இறையாண்மையில் அவ்வப்போது குறிக்கிட்டுக் கொண்டிருந்தனர். பல ஊர்களுக்கு வியாபாரம் செய்யச் சென்று விட்டு மக்கா வியாபாரிகள் திரும்பும் போது மதீனாவுக்குள் புகுந்தோ அல்லது மதீனா எல்லைக்குள் புகுந்தோ போய் வந்து கொண்டிருந்தார்கள். இப்படி அனுமதியின்றி அத்து மீறுபவர்களை வழி மறிக்கவும் அவர்களின் பொருட்களை பறிமுதல் செய்யவும் நபியவர்கள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டார்கள். இதனால் இவ்வப்போது சிறுசிறு சண்டைகள் நடந்துள்ளன. பத்ருப் போர்க்களத்துக்குச் சற்று முன்னால் அபூசுப்யானின் வணிகக் கூட்டம் வழி மறிக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எந்த ஆட்சித் தலைவருக்கும் கடமையான ஒரு காரியமாகவே இதைக் கொள்ள வேண்டும். தம் விஷயத்தில் எதிர்மறையான நிலைய மேற்கொள்ளக்கூடியவர்களிடம், இத்தகைய அத்து மீறல்களை எந்த ஆட்சியாளரும் தத்தமது நாடுகளில் அனுமதிப்பார்களா என்பதை மாற்றார்கள் சிந்திக்க வேண்டும்.

மூன்றாவது காரணம். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் தாயகம் மக்காவாகும். அவர்களுடன் தியாகப் பயணம் மேற்கொண்ட அனைவரின் தாயகமும் மக்காவாகும். சொந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப் பட்டவர்கள் என்று இவர்களைக் கூறலாம்.

நபிகள் நாயகத்தை எதிர்த்த மக்காவாசிகளுக்கு மக்காவில் எந்த அளவு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு நபிகள் நாயகத்துக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமை உள்ளது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்த பின் அவர்களின் சிறப்பையும், அவர்களின் உண்மையான கொள்கைகளையும் உணர்ந்து மக்காவாசிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தனர். ஏற்றுக் கொண்டவர்களெல்லாம் மக்காவின் தலைவர்களது கொடுமைக்கு அஞ்சி மக்காவை விட்டு வெளியேறி மதீனாவுக்குச் சென்றனர்.

பெரும்பாலான மக்காவாசிகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டனர். இழந்ததை (சொந்த நாட்டை) மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் நபியவர்கள் மக்காவை இரத்தம் சிந்தாமலேயே வெற்றிக் கொண்டனர்.

தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக போரிடுபவர்களுக்கு(அதற்கு) அனுமதியளிக்கப்படுகின்றது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெற்றவனாவான். அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து 'எங்கள் இறைவன் அல்லாஹ்' என்று கூறியதற்காக அநியாயமாக வெறியேற்றப்பட்டனர்.

தங்கள் தாயகத்தை மீட்டிதற்காகப் போராடும் பாலஸ்தீனியர்களை இந்தியா உள்ளிட்ட அனேக நாடுகள் ஆதரிப்பதற்கு எவ்வளவு நியாயங்கள் இருக்கின்றனவோ அந்த அளவு நியாயங்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடமும் இருந்தது. இதையும் நியாய உணர்வு படைத்த எவரும் குறை சொல்ல மாட்டார்கள்.

நான்காவது காரணம்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவில் நல்லாட்சி ஒன்றை நிறுவியது மக்காவின் தலைவர்களுக்கு எப்படி சகித்துக் கொள்ள முடியாததாக இருந்ததோ அதுபோலவே மதீனாவைச் சுற்றிலும் வாழ்ந்த யூதர்களுக்கும் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்தது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வருகைக்கு முன் மதீனாவைத் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். நபிகள் நாயகத்தின் வருகைக்குப் பின் மதீனத்து மக்களில் மிகப் பெரும்பாலோர்(மதீனத்து யூதர்கள் உட்பட) நபியின் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள்.

இதனால் சுற்று வட்டாரத்தில் இருந்த யூதர்கள் சதிவேலைகளில் ஈடுபடலாயினர். சில்லரை விஷமங்களையும் செய்து வந்தனர். மக்காவுக்குத் தகவல் அனுப்பும் ஏஜண்டுகளாகச் செயல்பட்டனர். இஸ்லாத்தை அறிந்து கொள்ள என்று கூறி சில நபித்தோழர்களை அழைத்துச் சென்று கோரமாகக் கொலை செய்தனர். நபிகள் நாயகத்துடன் பல தடவை ஒப்பந்தம் செய்துவிட்டு ஒவ்வொரு தடவையும் அதை மீறி வந்தனர். இத்தகைய நம்பிக்கைத் துரோகிகளுடனும் நபியவர்கள் போர் செய்துள்ளனர். யூதர்களுடன் நடைபெற்ற போர்களில் பெரும்பாலானவை இந்த காரணத்துக்காக நிகழ்த்தப்பட்டவையே.

இதுவரை கூறிய நான்கு காரணங்களுக்காக போர் செய்வதை நேர்மையான ஆட்சியாளர்கள் என்று மாற்றார்களால் போற்றப்படும் தலைவர்கள் கூட தவிர்த்ததில்லை. நாம் வாழும் நாட்டுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டால் போரில் ஈடுபடுவதையே நாம் வரவேற்போம். இவையல்லாத மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.

ஐந்தாவது காரணம்
ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் இன்னொரு நாடு தலையிடக் கூடாது என்பதை உலகம் ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளது. உலகில் அமைதி நிலவிட இந்த கொள்கை அவசியமானதுதான். ஆனாலும் இதற்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் இன்னொரு நாட்டின் விவகாரத்திலும் தலையிடுவது தவறில்லை என்பதையும் உலகம் ஒப்புக் கொண்டிருக்கின்றது.

ஒரு மனிதன் தன் மனைவியை ஏசுகிறான். அடுத்த வீட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். அவளை அடிக்கிறான் அப்போதும் அடுத்த விட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். அவளைப் பட்டினிபோடுகிறான், அப்போதும் கூட அடுத்த வீட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். கூர்மையான கத்தியால் அவளைக் குத்திக் கொலை செய்யப்போகிறான். அப்போதும் அடுத்த வீட்டு விவகாரம் என்று போசாமல் எவரும் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவன் மனிதனாகவே இருக்க முடியாது. அடுத்த வீட்டு விவகாரத்திற்கு நாம் வைத்திருக்கும் எல்லை அடுத்த நாட்டுக்கும் பொருந்தக் கூடியது தான்.

ஒரு கொடுங்கோலன் தனது குடிமக்களைக் கொடுமைப்படுத்துகிறான் தாங்க முடியாத அளவுக்கு கொடுமை அதிகரிக்கின்றது. அவனை எதிர்ப்பதற்கான துணிவோ, பலமோ அம்மக்களுக்கு இல்லை. அந்த நாட்டு மக்களே இந்தக் கொடுங்கோலன் தொலையமாட்டானா? இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறிவிடுவோமா? என்று ஏங்குகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அம்மக்களை மீட்பதை இஸ்லாம் அனுமதிக்கின்றது.

பலவீனமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் 'எங்கள் இறைவா! இந்த அக்கிரமக்கார ஊரிலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு பொறுப்பானவரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு உதவியாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! என்று கூறிக் கொண்டுள்ள நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன வந்து விட்டது. (அல்குர்ஆன் 4:75)

யாராவது உதவிக்கு வரமாட்டார்களா என்று ஒரு நாட்டு மக்களே எதிர்பார்க்கும் நிலையில் அந்த அக்கிரம ஆட்சியாளருக்கு எதிராக போரிடுமாறு இந்த வசனம் கட்டளையிடுகின்றது.

மக்களைச் சுரண்டி கொள்ளையடித்து, நிற்பதற்கு வரி, நடப்பதற்குவரி, பேசுவதற்கு வரி, எழுதவரி, திருமணவரி, சாவு வரி, வியாபார விரி, விவசாயவரி, வாகனத்துக்கு வரி, குழந்தை பிறப்பதற்கு வரி, என்று தாங்க முடியாத வரிகளை மக்கள் மீது சுமத்தி, இப்படிப்பெறப்பட்ட பணத்தைக் மக்களுக்குச் செலவிடாமல் தங்கத்தால் செருப்பு முதல் சிம்மாசனம் வரை தங்களுக்குச் செய்து கொண்டு, அந்தப் புரத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் ஆட்சி புரியும் நாடுகள் மீதும் நபியவர்கள் படையெடுத்துள்ளனர். அவர்களின் நான்கு கலீபாக்களும் போர் செய்துள்ளனர். அங்குள்ள மக்களே அதை ஆதரிக்கவும் செய்தனர்.

பங்களாதேஷ் என்று அறியப்படும் முன்னால் கிழக்கு பாகிஸ்தான் மக்கள், ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டனர். அங்குள்ள வளங்கள் மேற்குப் பகுதியின் நலனுக்கே பயன்படுத்தப்பட்டன. இதை எதிர்த்து முஜீபுர் ரஹ்மான் என்பவரின் தலைமையில் போராட்டம் நடந்தது. அவரால் இந்தியாவின் உதவியும் கோரப்பட்டது. அன்னிய நாடு என்று பாராமல் அம்மக்களைக் காப்பாற்ற இந்தியா தனது இராணுவத்தை அனுப்பியது. அவர்களை மீட்டது.

விடுதலைப் புலிகள் இன்றைக்கு இந்தியாவிற்கு வேண்டாதவர்களாக ஆகி விட்டாலும், அவர்கள் வேண்டப்பட்டவர்களாக இருந்த காலத்தில் அவர்களுக்குப் பல வகையிலும் உதவிகள் வழங்கப்பட்டன. அந்த நாட்டுத் தமிழர்களை இலங்கை அரசு பட்டினி போட்டபோது இந்தியாவின் விமானங்கள் அந்நாட்டின் மீது பறந்து சென்று உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தன.

மாலத்தீவு என்ற அன்னிய நாடு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட போர் இந்திய அதிரப்படை சென்று அதை மீட்டுக் கொடுத்தது.

இவற்றை நியாயப் படுத்துவோர் நியாயமான முறையில் நபியவர்கள் நடத்திய போர்களைக் குறை கூறுவது தான் வியப்பாக உள்ளது.

நபிகள் நாயகத்தின்போர்கள் அமெரிக்காவின் அடாவடித்தனமான போர்கள் போன்றவை அல்ல.

அனைவராலும் நியாயமானவை என இன்றளவும் ஒப்புக் கொள்ளப்பட்டு வருகின்ற காரணங்களுக்காகவே நபியவர்களும் போர் செய்துள்ளனர். இஸ்லாத்தைக் குறை கூற வேண்டுமென்பதற்காகவே இது சம்பந்தமாக தப்புப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

உருவ வழிபாட்டை அனுமதிக்காத இஸ்லாம், அதே நேரத்தில் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கக்கூடாது எனக் கூறுகிறது என்றால் அதிலிருந்து இஸ்லாத்தை அவர்கள் விளங்கட்டும்.

மக்களில் சிலர் மூலம் சிலரை அல்லாஹ் தடுக்காவிட்டால், கிறித்துவ, யூத, ஆலயங்கள் மற்றும் இறைவனின் பெயர் அதிகமாகக் கூறப்படும் பள்ளிவாயில்கள் இடிக்கப்பட்டிருக்கும். (அல்குர்ஆன் 24:40)

எந்த ஆலயமும் இடிக்கப்படக் கூடாது என்பதை இதன் மூலம் இறைவன் கூறுகின்றான்.

மற்றவர்கள் வணங்குபவற்றை நீங்கள் ஏசாதீர்கள். அதனால் அவர்களும் அறியாமையினால் அல்லாஹ்வை ஏசுவார்கள். (அல்குர்ஆன் 6:108)

ஏகத்துவக் கொள்கைளை உயிர் மூச்சாகக்கொண்டுள்ள இஸ்லாம், மற்ற மதத்தவர்களுக்கு அநீதி இழைக்க நாடியிருந்தால் இந்த இரண்டு போதனைகளையும் கூறியிருக்காது.

இதுபோலவே, மற்ற விஷயங்களில் இஸ்லாம் எவ்வளவு தாராளத்துடன் நடந்திருக்கும் என்பதை நடுநிலையான பார்வை இருப்பவர்கள் விளங்கலாம்.

முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஸ்யா ஏன்


பெரும்பாலான முஸ்லிம்களாலும், முஸ்லிமல்லாதவர்களாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட விஷயங்களில் 'ஜிஸ்யா' வரி என்பதும் ஒன்றாகும்.

"இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஸ்யா எனும் வரி விதிக்கப்பட்டு வந்தது. அவுரங்கசீப் போன்ற முகலாய மன்னர்கள் இத்தகைய வரியை இந்துக்களுக்கு மட்டும் விதித்தனர்" என்று பரவலாக விமர்சனம் செய்யப்படுகின்றது. அரசாங்கத்தால் வெளியிடப்படும் பாடப்புத்தகங்களிலும் கூட இவ்வாறு குறிப்பிடப் படுகின்றது. முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டு வந்தாலும், அவ்வாறு விதிக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுவதும் உண்மையே. அதில் உள்ள நியாயத்தையும் முஸ்லிமல்லாதவர்களுக்கு அது எவ்வளவு நன்மை பயக்கக் கூடியது என்பதையும் உணர்ந்தால் ஜிஸ்யா வரி விதிக்கப் பட்டதற்காக முஸ்லிமல்லாதவர்கள் குறை கூற மாட்டார்கள்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்த வரி முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு இதில் இருந்து விலக்களிக்கப்பட்டது. பாரபட்சமாகவும், அநியாயமாகவும் தோன்றலாம். உண்மையில் வரிவிதிப்பில் பாரபட்சம் ஏதும் காட்டப்பட வில்லை.

ஒரு அரசாங்கம் தனது குடிமக்களின் நலன்களைக் காக்கக் கடமைப்பட்டுள்ளது. தனது குடிமக்களில் வறியவர்களுக்கு உதவி செய்யும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஒருவரது உரிமையை இன்னொருவர் பறித்து விடாமல் காப்பதற்காக காவலர்களை நியமித்துக் கண்காணிக்கும் கடமையும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. அன்னியப் படையெடுப்பின் போது தனது குடிமக்களைக் காப்பதற்காக இராணுவத்தை அமைக்கும் கடமையும் அரசுக்கு இருக்கின்றது. பொருளாதாரமின்றி இந்தக் கடமைகளை எந்த அரசும் செய்ய முடியாது. மக்களிடமிருந்து வரிவிதிப்பதன் மூலம் மட்டுமே அரசாங்கம் பொருள் திரட்ட முடியும்.

ஒரு இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரிவிதிக்கப் படுகின்றது? இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஜகாத் எனும் வரியை கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி, மற்றும் கரன்சிகள் அவர்களிடமுள்ள வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், அவர்கள் விளைவிக்கும் தானியங்கள், மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் அவர்கள் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவர் விரும்பினால் செய்யலாம், விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மம் அல்ல இந்த ஜகாத். மாறாக, இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஜகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமிய சமுதாயம் அரசுக்கு செலுத்தக் கடமைப் பட்டுள்ளது.

ஏழைகள், பரம ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கள், அடிமை விலங்கு போடப்பட்டவர்கள், அறப்போருக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள், திக்கற்றோர் ஆகியோர் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச் சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப் பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாக கீழ்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.

1) முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.
2) முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஜகாத் வரி விதிப்பது.
3) முஸ்லிமல்லாதவர்கள் மீது வேறுவிதமான வரிவிதிப்பது.

இதில் முதல் வழியை நடைமுறைப் படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வித வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளை பெற்று வந்தால் வரி செலுத்துவோர் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.

வரி ஏதும் செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கேட்கும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் வரி ஏதும் செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவர். மனோ ரீதியாக தாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.

ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்கா விட்டால் இதில் அவமானம் வரி வாங்கப் படாதவர்களுக்கே. வரி வாங்கப் படாதது சட்டப்படியாக அவர்களுக்கு உரிமை இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்புக் கடுமையாகும்.

தங்களிடம் மட்டும் வரி வாங்கிவிட்டு மற்றவர்கள் விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்பட வில்லை என்பதால் முஸ்லிமல்லாதாரும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி சாத்தியமாகாது.

இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.

ஜகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொழுகை, நோன்பு போன்ற மதக்கடமையாகவும் ஜகாத் அமைந்துள்ளது.

இந்த ஜகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது இன்னொரு மதச்சட்டம் தங்கள் மீது திணிக்கப் படுவதாக அவர்களுக்குத் தோன்றும். இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள் வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்படுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக அமைந்து விடும். இஸ்லாம், தன் மதச்சட்டங்களை பிற சமயத்தவர்கள் மீது திணித்தது என்ற குற்றச்சாட்டு இன்றளவும் நீடிக்கும்.

முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஜகாத் எனும் வரியை விதிக்க முடியாது.

அப்படியே விதித்தாலும் அவர்களிடமிருந்து அதைப் பெற இயலாமல் போய் விடும் என்பது மற்றொரு விளைவாகும்.

ஜகாத் வரி என்பது அவரவர் சொத்துக்களை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப் பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஜகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களை பொறுத்தவரை அவர்களுக்கு அது மதக்கடமையாகவும் உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்குக் காட்ட முடியும்.

முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்தவரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்பு தரமாட்டார்கள். இயன்றவரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஜகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது.

வரிவிதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது. இப்போது மூன்றாவது வரியை நடைமுறைப்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை.

'ஜகாத்' என்ற வகையில்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும் இந்த அடிப்படையிலேயே 'ஜிஸ்யா' எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விட பலமடங்கு அதிகமாக வரி செலுத்தினர். பாரபட்சம் காட்டப்பட்டு பாதிப்புக்கு ஆளானார்கள் என்று சொல்வதென்றால் முஸ்லிம்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.

பேரரசுகள், சிற்றரசுகள் மீது கப்பம் விதிப்பதும், தான் கைப்பற்றிக் கொண்ட நாட்டு மக்கள் மீது அதிகப்படியான வரிசுமத்துவதும் உலக வரலாற்றில் பரவலாக நடந்து வந்தது. இந்த அக்கிரமத்தையெல்லாம் ஜீரணித்துக் கொள்பவர்கள் மிகவும் நியாயமான முறையில் விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியை குறை கூறுவதற்கு இஸ்லாத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்வு தவிர வேறு காரணம் இருக்க முடியாது.
இந்த ஜிஸ்யா வரி விதிக்கும் போது கூட இஸ்லாம் நடந்து கொண்ட முறை நாகரீகமானதாக இருந்துள்ளது. பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத முதிய வயதினர், பைத்தியக் காரர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்களிக்கப் பட்டிருந்தது. திடகாத்திரமான ஆண்கள் மீது மட்டுமே இந்த வரி விதிக்கப் பட்டது. இவ்வாறு சலுகை காட்டுவது அவசியமில்லாதிருந்தும் இவ்வாறு சலுகை வழங்கப்பட்டது.

சகட்டு மேனிக்கு இந்த வரி விதிக்கப் படாமல் மக்களின் பொருளாதார வசதியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தனிநபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியா வாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் எனவும் தனிநபர் வருவாய் குறைவாக உள்ள ஏமன் வாசிகளுக்கு தலைக்கு ஒரு தீனார் என்றும் நபியவர்களால் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.

இந்த ஒரு தீனார் என்பது மிக மிக சாதாரண ஏழைக்குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியை விட பலமடங்கு குறைவானதாகும்.

சொத்துவரி, விற்பனைவரி, வருமானவரி, சாலைவரி, தண்ணீர்வரி, நுழைவு வரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சி பெட்டி என வாங்கினாலும் மறைமுகமாகவும் இந்தியக் குடிமகன் இன்று வரிசெலுத்துகிறான். இந்த வரியை விட பலமடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த ஜிஸ்யா வரி.

செலுத்துவதற்கு எளிதான தொகையாகவும், செலுத்த இயலாதவர்களுக்கு விலக்களிக்கப்பட்டதாகவும் முஸ்லிம்கள் செலுத்தி வந்த வரியை விட மிகவும் குறைவானதாகவும் தான் இந்த ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.

இந்த அற்பமான வரியை செலுத்துவதன் மூலம் அதிகம் வரி செலுத்தும் முஸ்லிம்கள் பெற்று வந்த அத்தனை உரிமைகளையும் அவர்கள் பெற முடிந்தது. அவர்களின் வழிபாட்டு உரிமைகள் காக்கப்பட்டன. அவர்களின் ஆலயங்கள் பாதுகாக்கப் பட்டன. அவர்களின் சொத்துரிமை பேணப்பட்டது இது முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமிய நாட்டில் பெற்று வந்த சலுகைகள். அவர்களின் சலுகைக்கு வழிவகுத்த ஜிஸ்யா வரியை குறைகூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

இந்த இடத்தில் எழக்கூடிய ஒரு நியாயமான சந்தேகத்தையும் நாம் நீக்கிக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்ட ஜகாத் என்பது முஸ்லிம் செல்வந்தர்கள் மீதே விதிக்கப்பட்டு வந்தது. முஸ்லிம் ஏழைகள் அந்த வரியைச் செலுத்தவில்லை. எந்த வரியும் செலுத்தாமல் முஸ்லிம்களில் பெரும்பாலோர் இருந்துள்ளார்களே இது என்ன நியாயம் என்பதே அந்த ஐயம்.

இரண்டு காரணங்களால் இந்த கேள்வி தவறாகும்.

நூறு முஸ்லிம்கள் இருக்கும் ஊரில் பத்து பேர் மட்டும் ஜகாத் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நூறு பேர் சார்பாக பத்து வசதியானவர்கள் கொடுக்கும் ஜகாத் வரி நூறு முஸ்லிமல்லாதவர்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியை விட அதிகமாகும்.

முஸ்லிம், முஸ்லிமல்லாதார் என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பப் படுவதால் இந்த அடிப்படையிலேயே இதை அணுக வேண்டும்.

ஒரு இலட்சம் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் செலுத்தும் வரியை விட ஒரு இலட்சம் முஸ்லிம்களில் பத்தாயிரம் பேர் செலுத்தும் வரி அதிகமாகும்.

அடுத்து ஏழை முஸ்லிம்கள் வரி விலக்கு பெறுவது போலவே முஸ்லிமல்லாதவர்களும் கூட சலுகை பெற்றிருந்தார்கள். முஸ்லிமல்லாத ஒருவர் இஸ்லாமிய அரசு விதிக்கும் குறைந்த பட்ச ஜிஸ்யா செலுத்தக்கூட விலக்குப் பெறுவார்.

"எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி சிரமப்படுத்த மாட்டான்" என்று குர்ஆன் கூறுகிறது. இதன் காரணத்தினாலும் இதைக் குறை கூறமுடியாது.

இந்த வகையில் ஜிஸ்யா வரியை குறைகூற நியாயம் ஏதும் இல்லை. நியாய உணர்வு படைத்த மாற்று மதத்தினர் இதைக் குறை கூறமாட்டார்கள்.

முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரி விதித்ததன் மூலம் முஸ்லிமல்லாதவர்களை மதம் மாற்ற இஸ்லாம் முயன்றது என்ற குற்றச் சாட்டும் தவறானதே.

மிகமிக சொற்பமான இந்த வரியிலிருந்து தப்புவதற்காக பரம ஏழைகள், பெண்கள், பைத்தியங்கள், சிறுவர்கள், முதியவர்கள் விலக்களிக்கப் பட்டு திடகாத்திரமானவர்கள் மீது மட்டுமே விதிக்கப்பட்ட இந்த வரியில் இருந்து தப்புவதற்காக அங்கள் மதத்தையே மாற்றிக் கொண்டார்கள் என்பதை எந்த அறிவுடையவனும் ஏற்க முடியாது.

ஒரு மதத்தின் மீது கொண்ட நம்பிக்கை(அந்த மதம் எவ்வளவு பலவீனமானதாக இருந்தாலும்) சிறிய வரியிலிருந்து தப்புவதற்காக சிதறுண்டு விடும் என்று எவருமே கூற மாட்டார்கள்.

அவ்வாறு கூறுபவர்கள் அந்த மதத்தையும், அந்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் ஒரு சேர இழிவு செய்கிறார்கள் என்பதே அர்த்தமாகும்.

இதை விடக் கூடுதலாக முஸ்லிம்கள் வரி செலுத்திய நிலையில் இஸ்லாத்தில் சேருவதால் முஸ்லிமல்லாதவர்களுக்கு என்ன பொருளாதாரச் சலுகை கிடைத்து விடும்? இதைச் சிந்தித்தால் இவ்வாறெல்லாம் அபத்தமாக உளற மாட்டார்கள்.
__________________________________
குறிப்பு:
50% சதவீதம் ஜிஸ்யா வரி வசூலிக்கப்பட்டது என்று கூறுபவர்கள் இஸ்லாமிய ஆதாரத்தினை கொடுப்பார்களா?

போர் தர்மங்கள்


"இஸ்லாம்" - அதாவது குர்ஆன், காஃபிர்களை (அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளாதவர்களை அல்லது அல்லது நிராகரிப்பவர்களை) வெட்டிக் கொல்லச் சொல்கின்றது. கண்ட இடத்தில் அவர்களை கருவறுக்கச் சொல்கின்றது" என்ற பிரச்சாரம் இந்து ராஜ்யம்(?) அமைக்கத் திட்டம் வகுத்திருப்பவர்களால் முடுக்கி விடப்பட்டுள்ளது. அப்பாவி இந்துக்களைக் கவர்ந்திழுக்க முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வு கிளறி விடப்படுகின்றது.

இந்தியாவின் அமைதியையே கேள்விக்குறியாக்கி வரும் இப்பிரச்சனைக்கு விளக்கமளிக்கும் கடமை நமக்கு இருக்கின்றது.

"இந்தக் கருத்தில் அமைந்த வசனங்கள் யாவும் பொதுவானதன்று. போர்க்களத்தில் கடைப்பிடிக்க வேண்டிய போர் தர்மங்கள்" என்று ஒருவரியில் பதில் கூறுவதே போதுமானதாகும். ஆயினும், மாற்றார்கள் ஐயத்திற்கிடமின்றி இதைப்புரிந்து கொள்வதற்காக இதை விபரமாக விளக்குவோம்.

கொலை செய்வது பொதுவாக அனைவராலும் கண்டிக்கப்படும் ஒரு கொடுமையாகும். பிறர் பொருளை அபகரிப்பதும், சூரையாடுவதும் கூட கொடியவர்களின் செயலாகும்.

பொதுவாக, இந்தக் காரியங்கள் தடுக்கப்பட்டிருந்தாலும் போர் என்று வந்து விடுமானால் இதையெல்லாம் செய்வதுதான் போர் தர்மம்.

பொதுவாக வெறுக்கப்படும் சில செயல்கள் போர்க்களத்தில் விரும்பத்தக்கதாக அமைந்து விடுகின்றன.

இராமன், கண்ணண், அர்ஜுனன், கர்ணன், பஞ்சபாண்டவர்கள், கவுரவர்கள் போன்ற புராணப் பாத்திரங்களாக இடம் பெறுவோர், பல கொலைகளைச் செய்துள்ளனர். சாதாரணசமயத்தில் இவற்றைச் செய்திருந்தால் அவர்கள் வெறுக்கப்பட்டிருப்பார்கள். போர்களத்தில் செய்ததால் அவர்கள் வீரர்கள் எனப் போற்றப்படுகின்றனர்.

தமிழகத்தின் மூவேந்தர்களும் கூட பல கொலைகளைச் செய்தவர்கள் தான். போர்க்களத்தில் கொலைகள் செய்த காரணத்தினால் அவர்கள் வீரர்களாகப் போற்றப்படுகின்றனர்.

போர்க்களத்தில் மட்டுமின்றி, ஒரு நாட்டிலேயே நடக்கும் விடுதலைப் போராட்டத்திலும் இது போன்ற கொலைகள் நடந்துள்ளன. அதைச் செய்தவர்கள் இன்றளவும் தியாகிகளாக மதிக்கப்படுகின்றனர்.

ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் முதல் தேசிய இராணுவம் அமைத்த நேதாஜி வரை அனைவரும் இன்று மாவீரர்களாகப் போற்றப்படுகின்றனர். கொலை காரர்களாகக் கருதப்படுவதில்லை.

போருக்கு என தனி தர்மங்கள் உள்ளன என்பதற்கே இந்த விளக்கங்கள்.

உலகத்தில் வெற்றி பெற்ற எந்த ஆட்சியாளரும் போரில் எது வேண்டுமாலும் செய்யலாம் என்று நடந்துள்ளனர். ஆனால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் போரிலும் கூட புது நெறி புகுத்தினார்கள்.

மாற்றார்கள் விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளும் குர்ஆன் வசனத்தை விளக்குமுன் அவர்கள் மாற்றாரிடம் நடந்து கொண்ட முறையை மாற்றார்கள் அறிய வேண்டும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவில் தமது பிரச்சாரத்தைத் துவக்கிய போது துன்புறுத்தப்பட்டு மக்காவை விட்டே விரட்டப் பட்டார்கள். மதீனா சென்று அங்கே ஒரு ஆட்சியையும் நிறுவினார்கள். பல்வேறு போர்க்களங்களையும் மக்காவாசிகளால் அவர்கள் சந்தித்தார்கள். இறுதியாக மக்காவில் அவர்கள் வெற்றி வீரராகப் பிரவேசித்தார்கள். அவர்களை ஊரை விட்டே விரட்டியவர்கள், அவர்களின் தோழர்கள் பலரை படுகொலை செய்தவர்கள், சித்திரவதை செய்தவர்கள் அனைவரும் என்னவாகுமோ என்று பீதியடைந்தார்கள்.

காஃபிர்களைக் கொல்வது இஸ்லாத்தில் மரபாக இருந்திருந்தால் மக்கத்துக் காஃபிர்களைக் கொல்வதற்கு ஆயிரம் நியாயங்கள் இருந்த இந்த நேரத்தில் கொன்று குவித்திருக்க முடியும். அவர்களின் கடந்த கால கொடுமைகளுக்குப் பழிவாங்கியிருக்க முடியும்.

சக்தி மிக்க ஆட்சியாளராகவும் தனது கட்டளைக்கு காத்திருக்கும் தோழர்களைக் கொண்ட சமுதாயத்தின் தலைவராகவும் மக்காவில் பிரவேசித்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கத்தியை எடுக்கவில்லை. இரத்தமும் சிந்தச் செய்யவில்லை. எவரையும் பழிவாங்கவில்லை. அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள்.

உலக வரலாற்றில் சக்தி மிக்க ஒரு தலைவர் ஒரு உயிரைக் கூடப் பறிக்காது. ஒரு நாட்டை வெற்றி கொண்டது. இது ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

எதிரி நாட்டு நீர் நிலைகளை யானையை விட்டுக் கலக்கி விளைநிலங்களுக்குத் தீ வைத்து தோற்றவன் பற்களைப் பிடுங்கி கோட்டைக் கதவில் பதித்து, தோற்றவனின் மூக்கை அறுத்துக் கோரப்படுத்தி, தோல்வி கண்டவனின் மனைவியின் கூந்தலை வெட்டி அவமதித்து, போரில் பங்கு கொண்டவன், பங்கு கொள்ளாதவன் என்ற பாகுபாடின்றி அனைவரையும் வெட்டிக் குவித்து இன்னபிற அக்கிரமங்கள் செய்தவர்களையெல்லாம் மாவீரர்களாகவும், தெய்வாம்சம் பொருந்தியவர்களாகவும் போற்றுகின்ற ஒரு சமுதாயத்தினர் இஸ்லாமியப் போர் முறையைக் குறை கூறுவது வேடிக்கையானதே.

காஃபிர்களைக் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்வது இஸ்லாத்தின் கட்டளையாக இருந்திருந்தால் அதற்கான எல்லா வாய்ப்புக்களையும் பெற்றிருந்த இந்தச் சமயத்தில் அதைச் செய்திருப்பார்களே!

காஃபிர்களுடன் அதாவது மாற்று மதத்தவர்களுடன் நபிகள் நடந்து கொண்ட முறைக்கு மற்றொரு சான்றைக் கேளுங்கள்.

யூதப் பெண்ணொருத்தி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். அவள் நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டு அவளிடம் இதுபற்றி விசாரித்தார்கள். "உங்களைக் கொல்லும் நோக்கத்தில் அவ்வாறு செய்தேன்" என்று அவள் கூறினாள். அல்லாஹ் உனக்கு அந்தப் பொறுப்பைத் தரவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். "இவளைக் கொன்று விடட்டுமா? என நபித்தோழர்கள் கேட்டதற்கு "கூடாது" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த வரலாற்று நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது)

மாற்றார்களுடன் இத்தகைய சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எப்படி நடந்துள்ளார்கள் என்பதை மாற்றார்கள் சிந்திக்க வேண்டும்.

காஃபிர்களை வெட்டிக் கொல்வது இஸ்லாமிய கட்டளையாக இருந்திருந்தால் காஃபிரான அந்தப் பெண்மனி மதீனாவில் எப்படி வாழ்ந்திருக்க முடியும்? வாழ்ந்தது மட்டுமின்றி நபியையே கொலை செய்ய சதித்திட்டம் தீட்டும் அளவுக்கு அவள் தரும் உணவை நம்பிக்கையுடன் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அன்னியோன்யமாக நபிகள் எப்படி பழகி இருக்க முடியும்? இதையும் மாற்று மதத்தவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

தனி நூலாக எழுதப்படும் அளவுக்கு பல சான்றுகள் உள்ளன. காஃபிர்களைக் காஃபிர்கள் என்பதற்காகக் கொல்வது இஸ்லாம் காட்டும் வழியல்ல என்பதைப் புரிந்துக் கொள்ள இவை போதுமாகும்.

"அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்" என்று குர்ஆன் கூறும் கட்டளையின் கருத்தென்ன? அந்த நியாயமான ஐயத்தையும் நீக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

அல்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் 191-வது வசனத்தில் இந்தக் கட்டளை இடம் பெற்றுள்ளது.

இந்த வசனத்திற்கு முந்தைய வசனத்தையும் சேர்த்துக் கவனித்தால் அவர்கள் தவறான முடிவுக்கு வரமாட்டார்கள்.

உங்களை எதிர்த்துப் போர் புரிந்தவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்2:190)

எவர்கள் ஆயுதம் தரித்து உங்களுடன் போருக்கு வருகிறார்களோ அவர்களுடன் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள் என்று கூறிவிட்டுத்தான் அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள் எனக் குர்ஆன் கூறுகிறது.

எதிரிகள் போருக்கு வரும் போது நடந்து கொள்ள வேண்டிய முறையைக் கூறும் வசனத்தைத் தான் பொதுவானதாக விஷமிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த விஷமிகள் கனவு காண்பது போல் இந்து ராஜ்யம் ஏற்பட்டு விடுவதாக வைத்துக் கொள்வோம். அப்படி இந்துராஜ்யம் அமைந்த பிறகு அண்டை நாடு ஒன்று போருக்கு வந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? அகிம்சை பேசுவார்களா? அங்கேயும் உண்ணாவிரதம் இருப்பார்களா?

உலகில் எந்த நாடாக இருந்தாலும் இந்தக் கட்டத்திலும் கைகட்டி வாய்பொத்தி நிற்குமா?

போர் என்று வந்துவிட்டால் கோழைகளாக சரணடையாதீர்கள்! எதிர்த்துப் போரிடுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்! என்ற கட்டளையில் என்ன தவறு இருக்கிறது?

மதவெறியைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்தில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பேற்றி இந்து ராஜ்ஜியத்துக்கு ஆள் பிடிப்பதற்காக வேண்டுமென்றே தப்புப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதே உண்மை.

சுமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக் கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக் கூடாது என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது.

மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுமாறு இஸ்லாம் கூறவே இல்லை நபிகள் நாயகம்(ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர்.

எனவே இவர்களின் இந்தக் குற்றச் சாட்டு அபாண்டமானது அர்த்தமற்றது.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

அந்த நூறு மனிதர்கள் (The 100 )


   


மைக்கேல் ஹர்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் கடந்த 1978ல் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்களின் சாதனைகளை பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளோடும், அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி தொகுத்து வெளியிட்ட புத்தகமே அந்த நூறு மனிதர்கள்.

அவர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட 1000 மனிதர்களில் சிறந்த 100 மனிதர்களை வரிசைப்படுத்தியுள்ளார். வரிசைப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர் வரிசைப் படுத்தியதற்கான காரணங்களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஏன் முதலிடம் தரப்பட்டுள்ளது, ஏன் இரண்டாம் இடம் தரப்பட்டுள்ளது என காரண காரியங்களுடன் வளக்கியுள்ளார்.

அவர் வரிசைப்படுத்திய மனிதர்களில் பல்வேறு மத தலைவர்களும், பல்வேறு கண்டுபிடிப்பாளர்களும், புரட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வெறு கொள்கைகளை அறிமுகப்படுத்திய தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அது தான் இந்த நூலின் முக்கியமான அம்சமாகும். 

இந்த நூல் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. மைக்கேல் ஹர்ட வரிசைப்படுத்திய விதம் குறித்து பல்வேறு கருத்துக்களும் மறுப்புகளும் சில மதவாதிகளால் எடுத்துவைக்கப்பட்டது. காரணம் இந்த நூலில் ஹர்ட் இஸ்லாமிய தலைவரான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முதலிடம் கொடுத்ததுதும் கிருத்துவ கடவுளாக கருதப்படும் ஏசுநாதருக்கு 3ம் இடம் கொடுத்ததுமே காரணம். பெரும்பான்மையான கிருத்தவர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் வரும் என்று அவர் முன்பே எதிர்பார்த்து இருந்ததால் தனது கருத்துக்களில் உறுதியாக இருந்தார் மைக்கேல் ஹர்ட். 

இனி அவரது வரிகளை படிப்போம்.....

இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.

எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

இந்நூலில் இடம் பெற்றுள்ளோரில் பெரும்பான்மையானவர்கள் பண்பாடு மிக்க அல்லது அரசியலில் நடுநாயகமாக விளங்கிய நாகரிகத்தின் கேத்திரங்களில் பிறந்து வளர்வதற்குரிய வாய்ப்பினைப் பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், முஹம்மதோ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வாணிபம், கலை, கல்வி ஆகியவற்றின் கேத்திரங்களுக்குத் தொலைவிலுள்ளதும், அக்காலத்தில் உலகத்தின் பின்தங்கிய பகுதிகளாகவும் இருந்த தென் அரேபிய நாட்டிலுள்ள மக்கா என்னும் பேரூரில் கி.பி. 570ஆம் ஆண்டில் பிறந்தார்கள். ஆறு வயதிலேயே அநாதையாகிவிட்ட அவர்கள், எளிய மூழ்நிலையிலே வளர்க்கப்பட்டார்கள்.

அன்னார் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார் என இஸ்லாமிய வரலாறு நமக்குச் சொல்லுகிறது. தம் இருபத்தைந்தாம் வயதில் அவர்கள் செல்வச் சீமாட்டியாக இருந்த ஒரு விதவையை மணந்தார்கள். அதிலிருந்து அவர்களின் பொருளாதார நிலை சீரடைந்தது. எனினும், அவர்கள் தம் நாற்பதாம் வயதை எட்டும் முன்னர், குறிப்பிடத்தக்கவர்கள் என்பதற்குரிய வெளி அடையாளங்கள் மிகக் குறைவாகவே இருந்தன.

அக்காலத்தில் பெரும்பான்மையான அரபுகள் பிற்பட்டோராகவும் பல தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும், மக்காவில் அப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையுடையோராய் யூதர்களும், கிறிஸ்தவர்களும் இருந்தனர். அவர்களிடமிருந்தே பிரபஞ்சம் முழுமையும் ஆளுகின்ற அனைத்து வல்லமையுள்ள ஏக இறைவனைப் பற்றி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) முதலில் அறியலானார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு நாற்பது வயதானபோது, உண்மையான ஏக இறைவன் அல்லாஹ் தம்முடன் பேசுகிறான் என்றும், சத்தியத்தைப் பரப்புவதற்குத் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் என்றும் முஹம்மது உறுதியான நம்பிக்கை கொண்டார்கள்.

இதன் பின், மூன்றாண்டு காலம் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தம் நெருங்கிய தோழர்களுக்கும், துணைவர்களுக்கும் போதனை செய்தார்கள். பின் சுமார் 613ஆம் ஆண்டிலிருந்து, பகிரங்கமாக போதனை செய்யலானார்கள்.

பையப்பைய, தம் கொள்கையை ஏற்கும் ஆதரவாளர்களை அவர்கள் பெறத் துவங்கவே, மக்காவின் அதிகார வர்க்கத்தினர் அன்னாரை அபாயகரமாகத் தொல்லை தரும் ஒருவராகக் கருதலானர்கள். கி.பி. 622ஆம் ஆண்டில், தம் நலனுக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி, மக்காவுக்கு வடக்கே இருநூறு கல் தொலைவிலுள்ள மதீனா நகருக்கு ஏகினார்கள். அங்கு அவர்களுக்குக் கணிசமான அரசியல் வல்லமையுள்ள பதவி கிட்டிற்று.

இவ்வாறு அவர்கள் மதீனாவுக்குச் சென்ற ஹிஜ்ரா என்ற இந்திகழ்ச்சிதான், நபிகள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மக்காவில் அவர்களைப் பின்பற்றியோர் மிகச் சிலரே இருந்தனர். ஆனால் மதீனாவிலோ, மிகுந்த ஆதரவாளர்களைப் பெறலானார்கள். இதனால் அவர்கள் பெற்றுக்கொண்ட செல்வாக்கு ஏறத்தாழ எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு தலைவராக்கிற்று. அடுத்த சில ஆண்டுகளில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை பின்பற்றுவோர் தொகைவேகமாகப் பெருகத் துவங்கியதும் மக்காவுக்கும் மதீனாவுக்கு மிடையே தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன.

இறுதியில் 630ஆம் ஆண்டில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), மாபெரும் வெற்றியாளராக மக்காவுக்குள் திரும்பி வந்ததும், இப்போர் ஒய்ந்தது. அரபுக் கேத்திரங்கள், இப்புதிய மார்க்கத்துக்கு விரைந்து வந்து அதனை ஏற்றுக் கொள்வதை, முஹம்மது அவர்களின் வாழ்வின் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளும் கண்டன, அவர்கள் 632ஆம் ஆண்டில் காலமானபோது தென் அரேபியா முழுவதிலும் பேராற்றல் கொண்ட ஆட்சியாளராக விளங்கினார்கள்.

அரபு நாட்டின் படவீகள் என்னும் நாடோடிக் கோத்திரத்தார் வெறி கொண்ட வீரத்தோடு போராடுவார்கள் எனப் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், ஒற்றுமையின்றி, ஒருவரையொருவர் ஒழிக்கும் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறு தொகையினர் அவர்கள், நாடோடி வாழ்க்கையின்றி, நிலையாக வேளாண்மைகளில் ஈடுபட்டிருந்த வடபகுதி அரசுகளின் பெரிய படைகளுக்கு இணையாக இந்த படவீகள் இருக்கவில்லை. ஆனால் வரலாற்றில் முதன் முறையாக முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் ஐக்கியப்படுத்தப்பட்டு, உண்மையான ஒரே இறைவன் மீது கொண்ட ஆழிய நம்பிக்கையால் உந்தப்பட்ட இச்சிறுசிறு அரபுப் படைகள், மனித வரலாற்றிலே பேராச்சரியம் தரத்தக்க வெற்றித் தொடர்களில் தங்களை ஈடுபடுத்தலாயின.

அரபு நாட்டுக்கு வடகிழக்கில் சாஸ்ஸானியர்கள் புதிய பேரரசு பரந்து கிடந்து, வடமேற்கில் கான்ஸ்டாண்டி நோபிளை மையமாகக் கொண்ட பைஸாந்தியம் என்னும் கிழக்கு ரோமப் பேரரசு இருந்தது. எண்ணிக்கையைக் கொண்டு பார்த்தால், இத்தகு எதிரிகளுடன் அரபு ஈடுகொடுக்க முடியதோர்தாம். எனினும், எழுச்சியடைந்த இந்த அரபுகள் மெஸபொட்டோமியா, சிரியா, பாலஸ்தீனம் முழுவதையும் வெகுவேகமாக வெற்றி கொண்டனர். கி.பி. 642ஆம் ஆண்டில் பெஸாந்தியப் பேரரசிடமிருந்து எகிப்தைப் கைப்பற்றினர். 637இல் காதிஸிய்யாவிலும், 642இல் நஹவாத்திலும் நடைபெற்ற முக்கியப் போர்களில் பாரசீகப் படைகள் நசுக்கப்பட்டன.

முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நெருங்கிய தோழர்கள், முஹம்மது அவர்களைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப் பேற்றவர்களுமான அபூபக்ர், உமர் இப்னு அல்-கத்தாப் (ரளியல்லாஹ¤ அன்ஹ¤ம்) ஆகியோரின் தலைமையில் வென்ற நிலங்களுடன் அரபுகளின் முன்னேறுதல் நின்றுவிடவில்லை. கி.பி. 711க்குள் அரபுப் படைகள், வட ஆஃப்ரிக்காவிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரையிலும் உள்ள பகுதிகளைத் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தன. அங்கிருந்து அவை வடபுலம் நோக்கித் திரும்பி, ஜிப்ரால்டர் கடலிடுக்கைக் கடந்து, ஸ்பெயின் நாட்டின் விஸிகோதிக் அரசை வென்றன.

கிறிஸ்துவ ஐரோப்பா முழுவதையும் முஸ்லிம்கள் வென்று விடுவார்களோ என்று கூட ஒரு சமயம் தோன்றிற்று. ஆனால், 732ஆம் ஆண்டில், ஃபிரான்சின் மையப் பகுதிவரை முன்னேறிவிடட் ஒரு முஸ்லிம் படை, பரங்கியரால் டூர்ஸ் போரில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் கூட நபியவர்களின் சொல்லால் உணர்வு பெற்ற, இந்த படவீக் கோத்திரத்தினர், குறைந்த ஒரு நூற்றாண்டு காலப் போர்களின் மூலமாக, அதுவரை உலகு கண்டிராத -இந்திய எல்லைகளிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரை பரந்திருந்த ஒரு பேரரசை நிறுவினார்கள். இப்படைகள் வென்ற நிலங்களிலெல்லாம், அப்புதிய மார்க்கத்தை மக்கள் பெரும் அளவில் தழுவலாயினர்.

ஆனால், இவ்வெற்றிகள் அனைத்துமே நிலைபெற்றவையாக இருக்கவில்லை. பாரசீகர்கள் நபிகள் மார்க்கத்துக்கு விசுவாசம் பூண்டவர்களாக இருந்து வந்தாலும் கூட, அரபுகளிடமிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். ஸ்பெயின் நாட்டின் எழுநூறு ஆண்டுகள் போர் நடப்புகளுக்குப் பிறகு, அந்தத் தீபகற்பம் முழுவதையும் கிறிஸ்துவர்கள் மறு வெற்றி கொண்டனர். இருப்பினுங்கூடப் பண்டையப் பண்பாட்டின் இரு தொட்டில்களாக விளங்கிய மெஸ பொட்டோமியாவும் (இன்றைய இராக்) எகிப்தும் அரபு நாடுகளாகவே இருக்கின்றன. இது போன்றே வட ஆஃப்ரிக்காவின் முழுக் கடற்கரைப் பகுதிகளும் இருக்கின்றன.

முஸ்லிம்கள் துவக்கத்தில் வென்ற நாடுகளின் எல்லைகளுக்குத் தொலைவிலும் இப்புதிய மார்க்கம் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் தொடர்ந்து பரவியவாறே இருந்தது. இப்போது, ஆஃப்ரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், இன்னும் அதிகமாகவே பாகிஸ்தானிலும் கூட வட இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும், முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். இந்தோனேஷியாவில், இப்புது மார்க்கமே ஒருமைப்பாட்டின் அம்சமாக அமைந்துள்ளது. ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தில் இந்து முஸ்லீம் பூசல் ஒற்றுமைக்குப் பெரும் தடையாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) யின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு (அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.(St. PAUL)

ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல்(THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன.

அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும்.

குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.

வரலாற்று நிகழ்ச்சிகளில் முக்கியம் வாய்ந்த பல, தவிர்க்க முடியாமல் நிகழக் கூடியவை தாம்: அவற்றை நடத்துவதற்குரிய குறிப்பிட்ட தலைவர் ஒருவர் இல்லாவிடினும் சரியே என்று சொல்லக்கூடும். சான்றாக ஸைமன் பொலீவர் பிறந்திருக்காவிட்டாலும் கூட, ஸ்பெயினிடமிருந்து தென் அமெரிக்கக் காலனிகள் தங்கள் விடுதலையைப் பெற்றுத்தானிருக்கும். அதனால் அரேபிய வெற்றிகளைப் பற்றி இவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்துக்கு முன், இப்படி எதுவும் நிகழ்ந்ததில்லை.

எனவே அன்னார் இல்லாமலே இத்தகு வெற்றிகளைப் பெற்றிருக்கும் என நம்புவதற்கும் நியாயமில்லை. மனித வரலாற்றில் இவ்வெற்றிகளுக்கு ஒத்தவையாக எவற்றையும் பற்றிச் சொல்ல முடியுமானால் அவை செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அடைந்த வெற்றிகளாகும். ஆனால், இவ்வெற்றிகள் அரபு வெற்றிகளைவிட, பரப்பளவில் மிகுந்திருந்தாலும்-நிலைத்திருக்கவில்லை. இன்று மங்கோலியர்கள் வசமுள்ள நிலப் பகுதி செங்கிஸ்கானுக்கு முன்னர் அவர்களிடமிருந்தது தான்.

ஆனால், அரபுகளின் வெற்றிகளோ, பெரிதும் வேறுப்பட்டவையாகும். இஸ்லாத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் மட்டுமல்ல, அரபு மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றாலும் இணைக்கப்பட்டு, இராக்கிலிருந்து மொரோக்கோவரை ஒரு சங்கிலித் தொடர்போல் அரபு நாடுகள் விரிந்து கிடக்கின்றன. குர்ஆன் இஸ்லாமிய சமயத்தின் மூலாதாரமாக அமைந்திருப்பதும், அது அரபு மொழியில் இருப்பதுமாகிய காரணங்கள் தாம் பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கிடையில் அம்மொழி ஒன்றுக்கொன்று விளங்காவிட்டார மொழிகளாகச் சிதறிச் சிதைந்து போகாமல் தடுக்கப்பட்டது என்று சொல்லலாம்.

இந்த அரபு நாடுகளுக்கிடையே, கணிசமான வேறுபாடுகளும், பிரிவுகளும் காணப்படுகின்றன என்பதும் உண்மைதான். எனினும், பகுதியளவிலான இவ்வொற்றுமைக் குறைவு இந்நாடுகளுக்கிடையே நிலவி வரும் ஒற்றுமையின் முக்கியம் வாய்ந்த அம்சங்களே தம் கண்களிலிருந்து மறைந்துவிடக் கூடாது. சான்றாக 1973-74 எண்ணை ஏற்றுமதித் தடையில் அரபு நாடுகள் மட்டுமே கலந்து கொண்டன. ஈரானும், இந்தோனேஷியாவும் அவை இஸ்லாமிய நாடுகளாக இருப்பினும் இதில் கலந்து கொள்ளவில்லை.

ஆக ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய அரபு வெற்றிகள், மானுட வரலாற்றில் இன்னும் முக்கியமான பங்கு வகித்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். சமயத் துறையிலும், உலகியல் துறையிலும் முஹம்மது நபி ஒருசேரப் பெற்ற ஈடில்லாத செல்வாக்குத்தான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் என்னும் தகுதிக்கு அவரை உரித்தாக்குகிறது என நான் கருதுகிறேன்.