புதன், 25 ஜூன், 2014

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

இது மார்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மொழி, வரலாறு, பழக்க வழக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.

இது தமிழ் மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய் மொழியான அரபு மொழியில் இத்தகைய நிலை ஏற்படாது.

'அவன்' என்று ஒருவனைக் குறிப்பதற்கு அரபு மொழியில் 'ஹூவ' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.

'அவர்கள்' என்று பலரைக் குறிப்பதற்கு 'ஹூம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.

ஒருவனைக் குறிக்கும் போது மரியாதைக்காக 'ஹூம்' (அவர்கள்) என்று கூறவே மாட்டார்கள்.

அல்லாஹ் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது 'ஹூவ' (அவன்) என்று தான் குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான். தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது 'ஹூம்' (அவர்கள்) என்று அல்லாஹ் பயன்படுத்தவில்லை.

அது போலவே தீயவர்களான இப்லீஸ், ஃபிர்அவ்ன் போன்றவர்களுக்கும் 'ஹூவ' (அவன்) என்று தான் இறைவன் பயன்படுத்தியுள்ளான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தாலும் 'ஹூவ''என்று தான் கூற வேண்டும். மரியாதைக்காக ஒருமையைப் பன்மையாக மாற்றுவது அரபு மொழியில் கிடையாது.

'ஹூவ' (அவன்) என்ற குறிப்பிடும் போது ''பலரைப் பற்றிக் கூறப்படவில்லை. ஒரு நபரைப் பற்றி மட்டும் தான் கூறப்படுகிறது'' என்று தான் அரபுகள் விளங்குவார்களே தவிர, அவர் மரியாதைக்குரியவரா அல்லவா என்பதை இவ்வார்த்தையிலிருந்து புரிந்து கொள்ள மாட்டார்கள்.

இதே போல் ஒருவரைக் குறிப்பிடுவதற்கு ஆங்கிலத்தில் 'He' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. பலரைக் குறிப்பிடுவதற்கு 'They' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.

ஒருவரைப் பற்றி குறிப்பிடும் போது மரியாதைக்காக 'They' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதில்லை.

இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த நிலை தான் உள்ளது.

தமிழ் மொழியிலும் ஆரம்ப காலத்தில் இந்த நிலை தான் இருந்தது. அவன் என்பது ஒருவரைக் குறிக்கும். அவர் என்பது பலரைக் குறிக்கும். இது தான் தமிழ் இலக்கண விதி. நடைமுறையும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்தது.
ஒரு நபரைக் குறிப்பிடும் போது, பலரைக் குறிப்பிடுவதற்குரிய சொல்லை (அவர் என்ற பன்மைச் சொல்லை) மரியாதைக்காகப் பயன்படுத்துவது பிற்காலத்தில் வழக்கமானது. அதுவும் போதாதென்று பன்மையை மீண்டும் பன்மையாக்கி 'அவர்கள்' என்று பயன்படுத்துவதும் வழக்கத்திற்கு வந்தது.
மரியாதை கொடுக்காத போது அவன் எனவும், மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை குறிப்பிடும் போது அவர் எனவும், அதிகம் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை அவர்கள் எனவும் பிற்காலத்தில் மாற்றி விட்டனர்.

மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள் எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் 'அவன்' என்றே குறிப்பிடப்பட்டனர். இன்றும் கூட அவ்வாறே குறிப்பிடப்படுகின்றனர்.

வள்ளுவன் சொன்னான்

கம்பன் கூறுகிறான்

ராமன் வில்லை ஒடித்தான்

என்றெல்லாம் இன்றும் கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம்.

அது போலவே மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன், கடவுளைப் படர்க்கையாகக் குறிப்பிடும் போது 'அவன்' என்றும், முன்னிலையாகக் குறிப்பிடும் போது 'நீ' என்றும் தான் குறிப்பிடப்பட்டது. அதுவே இன்றும் தொடர்கிறது.
மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமானதால் அவர்கûளைக் குறிப்பிடும் போது 'அவர்கள்' என மரியாதைப் பன்மையில் குறிப்பிட்டனர்.
கம்பன் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கூற மாட்டோம்.

கருணாநிதி சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்போம்.

மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்து விட்ட பின் கருணாநிதி வாழ்கிறார்; மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வராத காலத்தில் கம்பன் வாழ்ந்தான் என்பதே இதற்குக் காரணம்.

கடவுள் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு அல்ல. நபிகள் நாயகத்தை அவ்வாறு கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கருதுகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு தான் தமிழ் இலக்கியத்தில் இடம் பிடித்தார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அல்லாஹ்வை அவன் என்று குறிப்பிடுகின்ற முஸ்லிம்கள் மற்ற எந்தச் சமுதாயமும் கடவுளுக்கு அளிக்கும் மரியாதையை விட அதிக மரியாதை அளிப்பதைக் காணலாம்.

எவ்வளவு துன்பங்கள் ஏற்படும் போதும் கடவுளைப் பற்றி தரக்குறைவாகப் பேசாத ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் தான். கடவுள் முன்னிலையில் பாடுவதும், ஆடுவதும், கூச்சல் போடுவதும், கடவுளைக் கிண்டலடிப்பதும் முஸ்லிம்களிடம் அறவே இல்லை.

கடவுளை 'அவன்' என்று குறிப்பிடுவது மரியாதைக் குறைவுக்காக அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இன்னொரு காரணத்துக்காகவும் முஸ்லிம்கள் இறைவனை 'அவன்' என்று ஒருமையில் குறிப்பிடுகின்றனர்.

''அல்லாஹ் கூறினார்கள்'' எனக் கூறும் போது நிறைய அல்லாஹ் இருப்பது போன்ற தோற்றத்தை அது ஏற்படுத்தி விடும். வார்த்தையில் காட்டும் மரியாதையை விட ஏகத்துவம் மிகவும் முக்கியமானதாகும்.

அல்லாஹ்வை 'அவர்கள்' என்று கூறிப் பழகி விட்டால் நிறைய அல்லாஹ்கள் இருந்திருப்பார்களோ என்று எதிர்காலத்தில் நினைத்து விடலாம். அவ்வாறு நினைத்தால் இஸ்லாத்தின் அடிப்படையே வீழ்ந்து விடும்.
மரியாதையை விட ஒருவன் என்று கூறுவது தான் முக்கியமானது என்பதால் அல்லாஹ்வை 'அவன்' என்று கூறுவதைத் தமிழ் கூறும் முஸ்லிம்கள் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டுள்ளனர்.

அதே சமயத்தில் மார்க்கத்தில் இப்படி எந்தக் கட்டளையும் இல்லை.

அல்லாஹ்வை 'அவர்' என்றோ 'நீங்கள்' என்றோ ஒருவர் கூறினால் மார்க்கத்தில் இது குற்றமாகாது. அவ்வாறு கூறும் உரிமை அவருக்கு உள்ளது.
மரியாதையை மனதில் வைத்து ஓரிறைக் கொள்கைக்கு பங்கம் வராமல் 'அவன்' எனக் கூறுவதே சிறந்தது என்பது நமது கருத்தாகும்.

திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்?

மனிதர்களிலிலிருந்து தூதர்களைத் தேர்வு செய்து அவர்கள் மூலமே இறைவன் வேதங்களை வழங்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். அத்தூதர்களின் தாய்மொழி எதுவோ அம்மொழியில் அவர்களுக்கு வேதங்கள் அருளப்பட்டன.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (குர்ஆன் 14:4)

ஈஸா என்னும் இயேசு நாதரும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்று குர்ஆன் கூறுகிறது. அவருக்கு இஞ்சீல் என்னும் வேதம் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறது. அந்த வேதம் அரபு மொழியில் அருளப்படவில்லை. இயேசுவின் தாய்மொழியில் தான் அருளப்பட்டது.

அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகத்துக்கு அரபு மொழியில் வேதம் அருளப்பட்டது. நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி தான் தெரியும். அவர்களுக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால் தான் அவர்களால் அதற்கு விளக்கம் கூற முடியும்

அரபு மொழி தான் தேவமொழி என்பதோ அது தான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது. மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை.

இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியையும் ஒரு வழிகாட்டி நெறியையும் கொடுத்து அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும். எந்த மொழியில் அந்த வழிகாட்டி நெறி இருந்தாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கே ள்வி எழுப்புவார்கள்.

யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு ஒரு மொழியைத் தேர்வு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.

நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ, மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும் போது உலக ஒருமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அனை வரும் ஒரே நல்வழியை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விஷயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனித குலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.

ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திற்கு தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேயே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.

அரபு மொழி பேசுபவன் வேறு மொழி பேசும் மக்களை விட சிறந்தவன் அல்லன் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம் செய்ததே இதற்குப் போதிய சான்றாகும். (நூல்: அஹ்மத் 22391)

செவ்வாய், 24 ஜூன், 2014

இஸ்லாமிய பெண்கள் ஃபர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?

இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமரிசிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம். இஸ்லாம் வலியுறுத்தும் - இஸ்லாமிய உடை பற்றிய காரண காரியங்களை அறியும் முன்பு இஸ்லாம் தோன்றும் முன்பு - உலகில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

1. முந்தைய காலங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு - போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள்.
பண்டைய காலங்களில் பெண்கள் சமுதாயத்தில் மிகவும் கீழத்தரமாக மதிக்கப்பட்டு - மனிதனுக்கு உண்டான அடிப்படை கௌரவம் கூட மறுக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டார்கள் என்பதை கீழ்க்காணும் வரலாற்று உண்மைகள் நமக்கு போதுமான விளக்கத்தை தருகின்றன.

a) பாபிலோனிய நாகரீகம்:
பாபிலோனிய சட்டப்படி பெண்கள் கீழ்த்தரமாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டார்கள். ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டால் அவருக்கு மரண தன்டனை வழங்குவதற்கு பதிலாக அவருடைய மனைவிக்கு மரண தண்டனை வழங்கும் வழக்கம் பாபிலோனிய நாகரீகத்தில் இருந்தது.

b) கிரேக்க நாகரீகம்:
பண்டைகால நாகரீகங்களில் கிரேக்க நாகரீகம் பெருமைக்குரியதாக கருதப்பட்டது. மேற்படி 'பெருமைக்குரிய' நாகரீக காலத்தில் - பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள். 'பண்டோரா' என்றழைக்கப்பட்ட 'கற்பனைப் பெண்மணி' யே மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகள் அனைத்திற்கும் அடிப்படை காரணமாக அமைந்தவள் என்று கிரேக்க புராணங்கள் பறை சாற்றுகின்றன. கிரேக்கர்கள் பெண்களை மனித குலத்தில் தாழந்தவர்கள் என்றும் - ஆண்களுக்கு அடிமைகள் என்றும் கருதினார்கள். கிரேக்க நாகரீகத்தின் பிற்பட்ட காலத்தில் பெண்கள் - உயர்வானவர்களாக மதிக்கப்பட்டாலும் - ஆண்களுக்கு உரிய தான் என்ற அகம்பாவத்தாலும் - பாலியியல் பலாத்காரங்களுக்கும் - பெண்கள் உட்படுத்தப்பட்டார்கள். கிரேக்க சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் - விபச்சாரம் பரவலாக காணப்பட்டது.

c) ரோமானிய நாகரீகம்:

ரோமானிய நாகரீகம் புகழின் உச்சநிலையில் இருந்தபோது கூட ஒரு ஆண் தனது மனைவியை கொலை செய்வதை தனது உரிமையாக கொண்டிருந்தான். விபச்சாரமும் - பெண்களை நிர்வாணமாக பாhப்பதுவும் - ரோமானியர்களின் மிகச் சாதாரண பழக்க வழக்கமாக இருந்தது.

d) எகிப்திய நாகரீகம்:

எகிப்தியர்கள் பெண்களை ஒரு தீமையாகவும் - சாத்தானின் சின்னமாகவும் கருதினார்கள்.

e) இஸ்லாமிய மார்க்கம் தோன்றுவதற்கு முன்பிருந்த அரேபிய நாகரீகம்:

அரேபியாவில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு - அரேபியர்கள் பெண்களை கீழத்தரமாக மதித்தார்கள். பெண்குழந்தைகள் பிறந்தால் அவைகளை உயிரோடு மண்ணில் புதைத்தார்கள்.

2. இஸ்லாம் பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது.. அவர்கள் சமுதாயத்தில் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை வலியுறுத்தியது.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது. சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை இஸ்லாம் வலியுறுத்தியது.

ஆண்களுக்குரிய 'ஹிஜாப்'

வழக்கமாக இஸ்லாத்தில் பெண்களுக்கு மாத்திரம்தான் 'ஹிஜாப்' முறை உள்ளதாக பொதுமக்கள் வாதிடுவார்கள். ஆனால் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்; பெண்களுக்கான 'ஹிஜாப்' பற்றி அறிவிப்பதற்கு முன்பாக ஆண்களுக்கான 'ஹிஜாப்' பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான். அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் '(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீரா க: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் - வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் - அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.

பெண்களுக்குரிய 'ஹிஜாப்'

அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் '(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள் தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்…………….ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
1. ஹிஜாப் அணிவதற்கான அளவுகோல்கள்:

நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான முதல் அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் - கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.

இஸ்லாமிய ஆடையில் எஞ்சிய ஐந்து அளவுகோல்களும் - ஆண்களுக்கும் - பெண்களுக்கும் சமமானவையே.

2. அணியக் கூடிய ஆடை உடல் பரிணாமத்தை வெளிக்காட்டாத அளவுக்கு தொய்வாக இருக்க வேண்டும்.
3. அணியக் கூடிய ஆடை உற்றுப் பார்த்தால் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும்படியான மெல்லிய ஆடையாக இல்லாது - உரத்த ஆடையாக இருக்க வேண்டும்
4. அணியக் கூடிய ஆடை (பெண்கள் ஆண்களை வசீகரிக்கக் கூடியவாறும் - ஆண்கள் - பெண்களை வசீகரிக்கக் கூடியவாரும்) எதிர்தரப்பாரை கவரக்கூடிய அளவுக்கு கவர்ச்சியாக இல்லாமல் இருக்க வேண்டும்.
5. ஆண்கள் பெண்களைப் போல் ஆடை அணிவதையும் - பெண்கள் ஆண்களைப் போல் ஆடை அணிவதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.
6. அணியக் கூடிய ஆடை இறை நிராகரிப்பாளர்கள் அணியக் கூடிய ஆடையைப் போன்று இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு இறை நிராகரிப்பவர்கள் உடுத்துகின்ற காவி நிறம் - கருப்பு நிறம் - போன்ற ஆடைகள் அணிவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

3. இஸ்லாமிய ஆடை மனிதர்களின் நடத்தையையும் - பழக்கவழக்கங்களையும் உள்ளடக்கியது.

மேற்கூறிய ஆறு நெறிமுறைகள் தவிர மனிதனின் நன்னடத்தை அவனது பழக்கவழக்கம் அவனது மனோபாவம் மற்றும் தனிமனித எண்ணங்கள் ஆகியவையு
ம் இஸ்லாமிய ஆடை முறையில் உள்ளடங்கும். ஒரு மனிதர் ஆடைகளில் மாத்திரம் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பாரேயானல் - இஸ்லாமிய ஆடையின் ஒரு பகுதியை மாத்திரம் பின்பற்றுவது போன்றதாகும். ஆடைகளிலும் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பதோடு - தனது கண்களிலும் - தனது உள்ளத்திலும் - தனது எண்ணத்திலும் - இஸ்லாமிய ஹிஜாப் முறையை கடைபிடிக்க வேண்டும். இஸ்லாமிய ஹிஜாப் என்பது - ஒருவர் நடக்கும் விதத்திலும் - அவர் பேசும் விதத்திலும் - அவர் பழகும் விதத்திலும் பிரதிபலிக்க வேண்டும்.

5. ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:
பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்.
பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் - அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் - ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

இரட்டை சகோதரிகள் - ஓர் உதாரணம்:

இரட்டைப் பிறவியான சகோதரிகள் - இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் - மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக ந ந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் - கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?. கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். மேற்படி வகையான ஆடைகள் ஆண்பாலரை கேலியும் கிண்டலும் - தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

7. வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.
இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் - அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். சிலர் இஸ்லாம் கருணையில்லாத - காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு சிறிய கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ - அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு - தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?. நான் கேள்வி கேட்ட கேள்
க்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் - வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து கொல்வோம் என்றும் சொன்னார்கள்.அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் - யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு - வல்லுறவு கொண்டு விட்டால் - மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் - வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ - அல்லது தாயோ வல்லறவு கொள்ளப்பட்டு - வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?.

8.மேற்கத்திய சமூகம் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து விட்டதாக தவறான கருத்தை கொண்டுள்ளது.

மேற்கத்திய நாடுகள் சொல்லும் பெண் விடுதலை என்பது - பெண்களின் உடலை பயன் படுத்திக்கொள்வதற்கும் - பெண்களின் ஆன்மாக்களை கொச்சைப் படுத்தவதற்கும் - பெண்களின் கௌரவத்தை இழக்கச் செய்யவும் - மேலை நாட்டினர் அணிந்திருக்கும் மாறுவேடமே தவிர வேறில்லை. மேற்கத்திய உலகம் - சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்திவிட்டதாக கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் பெண்களின் உயர்வான நிலை என்பது - பெண்களை போகப்பொருளாக பயன்படுத்திக் கொள்ளவும் - அவர்களை சமூகத்தின் காட்சிப்பொருளாக மாற்றுவதையுமே - பெண்விடுதலை என்கிறார்கள். 'கலை' மற்றும் 'கலாச்சாரம்' என்கிற பெயரில் வண்ணத்திரைகளில் வியாபாரிகள் தங்களின் பொருட்களை விற்பதற்கு பெண்களை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வதைத்தான் பெண் விடுதலை என்கிறார்கள்.

9. அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலே யே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 1990 ஆம் ஆண்டில் - அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1756 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை சொல்கிறது. பின்னர் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. குற்றம் நிகழ்ந்த ஆண்டு குறிப்பிடப் படவில்லை. அந்த ஆண்டு - 1992 அல்லது 1993 ஆக இருக்கலாம். பிறகு வந்த ஆண்டுகளில் அமெரிக்கர்கள் இன்னும் 'தீவிரமாக' வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்.

அமெரிக்காவில் இஸ்லாமிய 'ஹிஜாப்' முறை நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் - அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார். அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி - மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் - அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும். மேற்கண்டவாறு இஸ்லாமிய ஆடை முறை அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் - அமெரிக்காவில் வல்லுறவு குற்றஙகள்் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?.

10. இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் - வல்லுறவு குற்றம் கண்டிப்பாக குறையும்

இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் - தூய்மையான சமுதாயம் அமைவதை எவராலும் தவிர்க்க முடியாது. அமெரிக்காவாக இருக்கட்டும் - ஐரோப்பாவாக இருக்கட்டும் - அல்லது உலகில் எந்த நாடாக இருந்தாலும் எங்கெல்லாம் இஸ்லாமிய சட்டத் திட்டங்கள் நடைமுறை படுத்தப்படுகிறதோ - அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். எனவே இஸ்லாமிய ஆடை முறை பெண்களை இழிவுபடுத்துவதில்லை. மாறாக பெண்களின் மானத்தையும் - கற்பையும் காப்பாற்றி அவர்களை சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்களாக மாற்றுகிறது.