புதன், 25 ஜூன், 2014

யூத, கிறிஸ்தவ மதங்களின் தழுவலா இஸ்லாம்?

கொள்கை ரீதியாகவே யூத, கிறிஸ்தவ மதங்களிலிருந்து இஸ்லாம் வேறுபட்டு நிற்கிறது என்பதை பிறகு பார்ப்போம். அதற்கு முன் இவர்களின் கூற்று சரிதானா? என்பதை அறிந்து கொள்ள வாருங்கள் திருக்குர்ஆன் வசனங்களை பரிசீலிப்போம்.

2:41. இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள், இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது, நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி (ஒழுகி) வருவீர்களாக.

2:89. அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள். இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!

2:101. அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்.

2:146.எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள். ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

2:89. அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள்;. இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!

7:157. எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ – அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்.

மேற்கண்ட வசனங்கள் யாவும், இஸ்ராயீலின் மக்களே, அல்லது வேதம் வழங்கப்பட்டோரே என்று அழைத்துப் பேசுகிறது. இந்த வசனங்களும் இன்னும் இது போன்ற பல வசனங்களும், திருக்குர்ஆன் முந்தய வேதங்களை மெய்ப்பிக்கிறது என்று சான்று பகர்கிறது. மெய்ப்பிக்கிறது என்றால் முழுக்க, முழுக்க ஓரிறைக் கொள்கை, மற்றக் கடமைகள், மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படைகள் முந்தய வேதங்களில் சொல்லியுள்ளதை இஸ்லாம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக:
2:83. இன்னும் (நினைவு கூறுங்கள்,) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், ”அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் – எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது. (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள். மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள். ”ஜக்காத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.

2:43. தொழுகையைக் கடைப் பிடியுங்கள். ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள். ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.

(2:43வது வசனத்திலுள்ள சட்டங்கள் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அருளப்பட்டது. இதை, 2:40வது வசனத்தில் ”இஸ்ராயீலின் மக்களே!” என்று இறைவன் அழைப்பதிலிருந்து விளங்கலாம்.)
//அன்றைய நம்பிக்கையாளர் முகமதுவை ஒரு இறைத்தூதர் என்று நம்பி, அவருக்கு கீழ்ப்படிந்து ஜகாத் எனும் வரியை கொடுக்கும் ஒரு குழு-அங்கத்தினர் அவ்வளவே.// – 15.09.2006 திண்ணைக் கட்டுரையில் நேசகுமார் எழுதியது.

அதாவது, இறைத்தூதர் (ஸல்) அவர்களை எற்றுக் கொண்ட நம்பிக்கையாளர்கள், கப்பம் கட்டுவது போல் – ஜகாத் எனும் வரியைக் கட்ட வேண்டும் அவ்வளவுதான் என்று எழுதியிருக்கிறார். இது கலப்படமில்லாத பொய், ஆய்வறிவற்ற மட்டரகமான விமர்சனம். டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்டின் பக்தரிடம் இதை விடக் கூடுதலாக எதிர்பார்க்க முடியாது.

2:43,83 வசனங்களில், ”ஜகாத்” எனும் வரி முந்தய வேதங்களிலேயே, முந்தய சமூகத்தார்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை திருக்குர்ஆன் அறிவித்துக் கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே இறைத்தூதர்களால் முந்தய வேதங்களில் சட்டமாக்கப்பட்ட மார்க்க வரியை, முந்தைய இறைத்தூதர்களைப் பின்பற்றியே இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்களும் ஜகாத் வரியை தமது சமூகத்தின் மீது கடமையாக்கினார்கள் என்பது வெள்ளிடை மலை. எனவே இஸ்லாத்தின் எதிரிகள் சொல்வது போல ஜகாத் வரி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்தார்கள் என்பதில் நேர்மையில்லை.

அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது.
பெற்றோர்கள், உறவினர்கள், அனாதைகள், மற்றும் ஏழைகளுக்கு நன்மை செய்வது, மனிதர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.
தொழுகையை நிறைவேற்றுவது
ஜகாத் வரி கொடுப்பது.(2:83)
இவையெல்லாம் முந்தய இறைத்தூதர்களின் வழியாக முந்தய வேதங்களில் அருளப்பட்ட சட்டங்களைத்தான் இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களின் சமூகத்தார்களும் பின்பற்றும்படி இறுதி வேதமான திருக்குர்ஆன் வழியாக இறைவன் அருளினான்.

2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.
உண்ணா நோன்பு நோற்பதும் முந்தய சமூகத்தாருக்கு விதியாக்கியது போல, இறுதி நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்துக்கும் விதிக்கப்பட்டிருக்கிறது.

22:26. நாம் இவ்றாஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து ”நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர் என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக).

22:27. ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).

ஹஜ்ஜிற்கான அழைப்பு இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் அறிவித்தது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பே மக்கள் ஹஜ் செய்து வந்தார்கள் என்பதை வரலாற்றில் அறியலாம்.

முந்தய வேதங்களையும் முந்தய நபிமார்களையும் திருக்குர்ஆன் உண்மைப்படுத்துகிறது. என்பது மட்டுமல்ல, முந்தய நபிமார்கள் போதித்த சட்டங்களையேத் திருக்குர்ஆனும் அடிப்படை சட்டமாக ஏற்றுக் கொண்டுள்ளது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அதாவது இங்கு குறிப்பிட்டிருக்கும் இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படை சட்டங்கள் ஏற்கெனவே முந்தய வேதங்களில் அருளப்பட்டதையே பின்பற்ற நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் மூலம் அருளப்பட்டது.

இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது, என்று முந்தய வேதங்கள் வழங்கப்பட்டவர்களை நோக்கி திருக்குர்ஆன் கூறுகிறது! முந்தய வேதங்களை திருக்குர்ஆன் எவ்வாறு உண்மைப்படுத்துகிறது என்ற கருத்தை திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து விளக்கியுள்ளோம். அன்றைய யூதர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை உண்மைப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியை இங்கு நாம் அறிந்து கொள்வது மிக அவசியம். நபித்தோழர் உமர் (ரலி) அவர்களுக்கும், யூதர்களுக்குமிடையை நடந்த ஒரு விவாத உரையாடலைப் படிப்போம்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: யூதர்கள் வேதப் பாடம் படிக்கும் நாளில் அவர்களுடன் நான் இருந்ததுண்டு. அப்போது தவ்ராத் வேதம், குர்ஆனை எந்த அளவுக்கு உண்மையாக்குகிறது என்றும், அதைப் போன்றே குர்ஆன் தவ்ராத் வேதத்தை எந்த அளவிற்கு உண்மையாக்குகிறது என்றும் ஆச்சரியம் அடைவேன்.

இந்நிலையில் ஒருநாள் நான் அவர்களுடன் இருந்தபோது, ”கத்தாபின் மகனே! உம்முடைய தோழர்களில் உம்மைவிட எங்களுக்கு மிகவும் பிரியமானவர் வேறு யாரும். இல்லை” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘அது எதனால்’? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”நீர் எங்களிடம் வந்து எங்களுடனேயே ஆழ்ந்து போய்விடுகிறீர்” என்று கூறினார்கள்.

அப்போது நான், ”தவ்ராத் வேதம் குர்ஆனை எந்த அளவிற்கு உண்மையாக்குகிறது என்றும், அதைப் போன்றே குர்ஆன் தவ்ராத் வேதத்தை எந்த அளவிற்கு உண்யாக்குகிறது என்றும் ஆச்சரியம் அடைகிறேன் இதனாலேயே நான் உங்களிடம் வருகிறேன்” என்று கூறினேன். இவ்வாறு அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே யூதர்கள், ”கத்தாபின் மகனே! ”அதோ உம்முடைய தோழர் (செல்கிறார்) அவருடன் சென்று சேர்ந்து கொள ளுங்கள்” என்று கூறினார்கள்.

அப்போது நான், ”யாரைத்தவிர வேறு இறைவன் இல்லையோ அந்த அல்லாஹ்வை முன்னிறுத்திக் கேட்கிறேன், அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் நீங்கள் எதைப் பேணிக்காக்க வேண்டும் என்று உங்களைப் பணித்துள்ளானோ அதை முன் வைத்துக் கேட்கிறேன், தன் வேதங்களில் எதை உங்களிடம் அல்லாஹ் அமானிதமாகத் தந்தானோ அதை முன் வைத்துக் கேட்கிறேன், ”அவர்தாம் அல்லாஹ்வின் தூதர் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று அந்த யூதர்களிடம் கேட்டேன் அப்போது அவர்கள் மெளனமாக இருந்தார்கள்.

அவர்களில் ஞானமுள்ள பெரியவர் ஒருவர் ” உமர் உங்களிடம் காட்டமாகக் கேள்வி கேட்டிருக்கிறார். அவருக்கு (தக்க முறையில்) பதில் கூறுங்கள்” என்று கூறினார். அதற்கு அவர்கள், ”நீங்கள்தாம் எங்களில் அறிஞரும், வயதில் மூத்தவரும் ஆவீர் எனவே, உமருக்கு நீங்களே பதிலளியுங்கள்” என்றனர்.

உடனே அவர், ”(உமரே!) நீங்கள் எதை முன்வைத்து எங்களிடம் கேட்டீர்களோ, அதை முன்வைத்துக் கூறுவதானால், அவர் அல்லாஹ்வின் தூதர்தாம் என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம்” என்றார்.

உடனே ”உங்களுக்குக் கேடுதான்! அப்படியானால் நீங்கள் அழிவுக்குள்ளாவீர்கள்” என்று நான் கூறினேன். அதற்கு அவர்கள் ”நாங்கள் அழிய மாட்டோம்” என்றனர். நான், ”அதெப்படி முடியும்? அவர்தாம் அல்லாஹ்வின் தூதர் என்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்திருக்கிறீர்கள். ஆனால், அவரை உண்மையாளரென ஏற்பதில்லை, அவரைப் பின்பற்றுவதில்லையே!” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ”எங்களுக்கு வானவர் வானவர்களில் ஒரு விரோதி இருக்கிறார். அதைப் போன்றே ஒரு நேசரும் உள்ளார். வானவர்களின் எங்களின் விரோதி யாரோ அவருடன் முஹம்மத் தமது நபித்துவத்தை இணைத்துக் கொண்டுள்ளார்” என்றனர்.

அப்போது நான், ”உங்களின் விரோதி யார்? உங்களின் நேசர் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”எங்களின் விரோதி ஜிப்ரீல் ஆவார். எங்களின் நேசர் மீகாயீல் ஆவார்” என்றனர்.

”ஜிப்ரீல் முரட்டுத்தனம், கடுகடுப்பு, கஷ்டம், வேதனை போன்றவற்றின் பொறுப்பு வழங்கப் பெற்ற வானவராவார். மீகாயிலோ அன்பு, அருள், சலுகை போன்ற பொறுப்பு வழங்கப் பெற்ற வானவராவார்” என்றும் கூறினர். உடனே நான், வலிவும் மாண்பும் மிக்க இறைவனிடம் அவ்விருவரின் தரம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”அவ்விருவரில் ஒருவர் இறைவனின் வலப் புறத்திலும், மற்றொருவர் இறைவனின் இடப் புறத்திலும் உள்ளனர்” என்று கூறினார்கள்.

அப்போது நான், ”யாரைத்தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீது ஆணையாக! அவ்விருவரையும் யார் பகைத்துக் கொண்டாரோ அவருக்கு அவ்விருவர் மட்டுமல்ல, அவ்விருவரிடையே இருக்கும் அல்லாஹ்வும் விரோதிகள்தாம். அதைப் போன்றே அவ்விருவரையும் யார் நேசித்தாரோ அவருக்கு அவ்விருவருமே நேசர்கள்தாம். மீகாயிலின் விரோதியிடம் நேசம் பாராட்ட, ஜிப்ரீலுக்கு எந்த அவசியமும் இல்லை. அதைப் போன்றே, ஜிப்ரீலின் விரோதியிடம் நேசம் பாராட்ட மீகாயிலுக்கு எந்தத் தேவையுமில்லை” என்று கூறினேன்.

பின்னர் நான் (அந்த இடத்திலிருந்து) எழுந்து வந்து, நபி (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் இன்ன கூட்டத்தாரது (வீட்டின் நுழைவாயிலில் உள்ள) சிறிய கதவு வழியாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”கத்தாபின் மகனே! சற்று முன்பு அருளப்பெற்ற வசனங்களை உமக்கு ஓதிக்காட்டவா?” என்று கேட்டார்கள். பின்னர் (2:97,98) இரு வசனங்களையும் ஓதிக்காட்டினார்கள்.

அப்போது நான், ”என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் தூதரே! உண்மையான (மார்க்கத்)துடன் தங்களை அனுப்பிய (இறை)வன் மீது சத்தியமாக! (யூதர்களுடன் நான் உரையாடிய) இந்தச் செய்தியைத் தங்களிடம் தெரிவிக்கத்தான் நான் வந்தேன். அதற்குள் எல்லாம் அறிந்த அல்லாஹ் எனக்கு முன்பே தங்களுக்கு அறிவித்து விட்டதைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்” என்று கூறினேன். (இப்னு கஸீர்)

அன்றைய யூதர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை ”அல்லாஹ்வின் தூதர்” என்று நன்கு அறிந்து வைத்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள் பற்றி முன்னறிவிப்பை முந்தய வேதங்களிலிருந்து அறிந்திருந்தும், வானவர் ஜிப்ரீலைக் காரணம் காட்டி இறைத்தூதர் (ஸல்) அவர்களை மறுத்தார்கள்
வானவர்கள் எவரும் இறைவனுக்கு மாறு செய்யமாட்டார்கள்.

19:64. (மலக்குகள் கூறுகிறார்கள், நபியே!) ”உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்.

வானவர்கள், இறைவனின் கட்டளை எதுவோ அதை மட்டுமே நிறைவேற்றுவார்கள். யூதர்கள் வானவர் ஜிப்ரீலை பகைவராகவும், வானவர் மீக்காயிலை நேசராகவும் கருதியதற்கு, பதிலடியாகத் திருக்குர்ஆன் இப்படிக் கூறுகிறது…

2:97. யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதி யாவான்) என்று (நபியே!) நீர் கூறும், நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார். அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது. இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.

2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.

மேற்கண்ட இரு வசனங்களும், யூதர்களின் கூற்றை மறுப்பதோடல்லாமல், அவர்களின் முரண்பட்ட கொள்கையையும் கண்டிக்கிறது. மனிதனுக்கு ஒரு வானவர் பகைவராக வும், இன்னொரு வானவர் நேசராகவும் ஒருகாலும் இருக்க முடியாது. ஒரு வானவர் பகைவரென்றால், வானவர்கள் அனைவரும் அவனுக்குப் பகைவராகி விடுவார்கள். அவன் அல்லாஹ்வுக்கும், அவனின் தூதர்களுக்கும் பகைவனாகி விடுவான், அது போல, ஒரு வானவர் நேசரென்றால் அவனுக்கு அனைத்து வானவர்களும் நேசராக இருப்பார்கள். அல்லாஹ்வும், அவனுடைய தூதர்களும் அவனை நேசிப்பார்கள். என்று இறை மார்க்கத்தின் ஏதார்த்தத்தை, இறை வேதம் எடுத்துக் கூறுகிறது.

ஒரு செம்பு பாலில், பாதி பால் நஞ்சு, பாதி பால் நஞ்சில்லை என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதே அபத்தம் – ”எங்களுக்கு வானவர் ஜிப்ரீல் பகைவராகவும், வானவர் மீக்காயில் நேசராவும் இருக்கிறார்” என்று – யூதர்கள் சொல்லியதிலும் நிறைந்திருக்கிறது. யூதர்களின் இந்த ”வானவர் கொள்கை” முந்தய வேதங்களில் சொல்லப்படாத, முந்தய தூதர்களாலும் போதிக்கப்படாத யூதர்களாக தமக்குத் தோன்றியதை கொள்கையாகச் சொல்லிக் கொண்டார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களை ”அல்லாஹ்வின் தூதர்” என்று நன்கு அறிந்திருந்தும், ஏற்றுக் கொள்ளத் தயங்கியதற்கு யூதர்கள் சொன்ன ”வானவர் கொள்கை” வெறும் சப்புக்கட்டு என்பதை இதிலிருந்து விளங்கலாம். இப்படிச் சொன்னதன் மூலம் அவர்கள் முந்தய வேதங்களையும், முந்தய நபிமார்களையும் பின்பற்றவில்லை என்பது தெளிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக