புதன், 25 ஜூன், 2014

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி வேதமாகிய திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவது போல், திருக்குர்ஆனுக்கு முந்தய வேதங்களும் ஏன் பாதுகாக்கப்படவில்லை?

ஒவ்வொரு இறைத்தூதரின் மறைவுக்குப் பின்னும் அவர்கள் கொண்டு வந்த வேதங்கள், அவற்றைப் பின்பற்றுபவர்களாலேயே மறைக்கப்பட்டது. மறைக்கப்பட்டது மட்டுமல்ல, வேதத்தைப் பெற்றிருந்த அறிஞர்களால் அவர்களின் சொந்தக் கருத்தும் வேதமெனத் திணிக்கப்பட்டு அதுவும் வேதத்தில் உள்ளதுதான் என மக்களுக்கு போதிக்கப்பட்டது. இதை சரிசெய்வதற்காக இன்னொரு இறைத்தூதரின் வருகை அவசியமாயிற்று இது ஒரு காரணம். (இது பற்றி இன்னும் விரிவாக ”யூத, கிறிஸ்தவ மதங்களின் தழுவலா இஸ்லாம்? என்ற பகுதியில் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்)
இறைத்தூதர்கள் வேதங்களைக் கொண்டு வரும்போதும் பழைய வேதங்களை உள்ளடக்கியும், அதைத் தொடர்ந்து புதிய சட்டங்களை சேர்த்தும் அனுப்பப்பட்டார்கள். உதாரணமாக:

3:50. ”எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன், ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், என்னைப் பின் பற்றுங்கள்.” (இறைத்தூதர்களின் மீள் வரவின் காரணத்தை மேலும் பல திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து விளங்கலாம்)

முந்தய வேதத்தை உண்மைப்படுத்த வந்த இயேசு எனும் ஈஸா (அலை) அவர்கள் முன்பு விலக்கப்பட்ட சிலவற்றை நீக்கி புதிய சட்டங்களை சேர்க்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டார். இப்பொழுது – தவ்ராத் வேதத்தையும் உள்ளடக்கி அதோடு புதிய சட்டங்களையும் சேர்த்து இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கொண்டு வந்த – இன்ஜீல் எனும் வேதம் பின்பற்றத்தக்கது. ஏனென்றால் தவ்ராத் எனும் வேதத்தோடு புதிய இறைச் சட்டங்கள் இன்ஜீல் எனும் வேதத்தில் இறைத்தூதர் இயேசு (அலை) அவர்களால் சேர்க்கப்பட்டன.
”இன்று (மோசே எனும்) மூஸா (அலை) அவர்கள் உயிரோடு இருந்தாலும் என்னைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நபி மூஸா (அலை) அவர்களே முஹம்மது நபியைத்தான் பின்பற்ற வேண்டும் என்பது முன் சென்ற நபிமார்களைப் பின்பற்றியே புதிய சட்டங்களுடன் பிந்திய நபியின் வருகை இருந்ததால் இந்த இறைத்தூதர் கொண்டு வரும் சட்டங்களே பின்பற்றப்பட வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது. விளங்கிக் கொள்ள:

ஏற்கெனவே ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்து, புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தினால், பழைய ஆட்சியை ஆதரித்த குடிமக்களும் அதற்குக் கட்டுப்பட வேண்டும், பழைய ஆட்சியாளர்களும் புதிய அரசின் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.

இறைச் செய்தியை அறிவித்து இறைத்தூதராக வாழ்ந்து, வழிகாட்டிய ஒரு நபியின் மறைவுக்குப்பின் அந்த சமுதாயம், அடுத்த இறைத்தூதர் வரும்வரை மறைந்த இறைத்தூதரையேப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளார்கள். மீண்டும் இறைத்தூதரின் வருகை அவசியமென இறைவன் தீர்மானித்து அடுத்த இறைத்தூதரை நியமிக்கிறான். அதுவரை மறைந்த இறைத்தூதரைப் பின்பற்றியவர்கள் இப்போது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த இறைத்தூதரைப் பின்பற்ற வேண்டும். இதைத்தான் மறைந்த இறைத்தூதர்களும் தமக்குப்பின் வரவிருக்கும் இறைத்தூதரைப் பின்பற்றும்படியும் அறிவித்தார்கள்! மக்களும் அடுத்த இறைத்தூதரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் என்பதை வரலாற்றில் அறிந்து கொள்கிறோம்.
//இந்த வேதம் இதுவரை மாறாமல் காக்கப் பட்டது போல் மற்றைய முந்திய வேதங்களையும் இறைவன் காத்திருக்கக் கூடாதா; முடியாதா? பின் ஏன் அப்படி நடக்கவில்லை?//

முந்தய வேதங்களையும் இறைவனால் பாதுகாக்க முடியாதா? என்றால் இறைவனால் அது முடியாத காரியமில்லை! ஆனால் அதற்கான அவசியமில்லை. அடிப்படைக் கொள்கை நீங்கலாக, வணக்க வழிபாடுகளிலும், வாழ்க்கை நெறிகளிலும் சில மாற்றங்களுடன் ஒவ்வொரு இறைத்தூதர்களும் வேதங்களைக் கொண்டு வந்தார்கள். முழுமையடைந்த வேதம் மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டும். முழுமையடையாத முந்தய வேதங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதில்லை.

முந்தய வேதங்களையும் ஏற்றுக் கொண்டு நிறைவு பெற்ற இறுதியான வேதம் திருக்குர்ஆன். ”இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன், இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்” (திருக்குர்ஆன், 5:3) என இறைச் செய்தியை பறைசாற்றித் திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது.

இஸ்லாம் மார்க்கம் முழுமை பெற்று, தூதுப்பணியும் முடிந்து விட்டதால் இறைத்தூதர்களின் வருகையும் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் முற்றுப் பெற்று விட்டது. இனி தூதர்களின் வருகை இல்லை அதனால் வேதங்களின் வருகையும் இல்லை. திருக்குர்ஆனே இறுதி வேதம் எனும்போது இறுதி வேதமாகிய திருக்குர்ஆன்தான் பாதுகாக்கப்பட வேண்டும்.
மனித குலத்துக்கு வழிகாட்டியாக இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்படுகிறது. திருக்குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஏற்றுக் கொண்டிருக்கிறான். (பார்க்க: திருக்குர்ஆன், 15:9) திருக்குர்ஆனில் இடைச் செருகல் ஏற்படாமல் இன்னும் தொடர்ந்து இறைவனால் பாதுகாக்கப்படும் இறுதி நாள்வரை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக