புதன், 31 ஜூலை, 2013

அறுத்துப் பலியிடுதல் நியாயம் தானா


 

ஹஜ் பெருநாளில் பிராணிகளைப் பலியிடுவதை இஸ்லாம் கட்டாயப் படுத்துவது மோலோட்டமாகப் பாக்கும் போது சிலருக்கு அது பிடிக்காமல் போகலாம் . ஆனால் அதில் உள்ள நியாயங்களை உணாந்து கொண்டால் குறை காண மாட்டாகள். 
ஹஜ்ஜுப் பெருநாள் முஸ்லிம்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய நாளாகும். அறுத்துப் பலியிடுவதை வசதிமிக்கவர்கள் மீது கடமையாக்கும் போது ஏழைகளுக்கு தாராளமாக மாமிசம் கிடைக்கிறது. அந்த ஒரு நாளிலாவது செல்வந்தர்களைப் போலவே ஏழைகளும் சிறந்த உணவை உட்கொள்ள முடியும். முஸ்லிம் சமுதாயம் முழுவதும் மகிழ்ச்சியில் திளைக்க முடியும். 

 ஆபிஸ் பின் ரபீஆ அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான், ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஈதுல் அள்ஹா' பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா? என்று கேட்டேன். அவர்கள், மக்கள் (பஞ்சத்தால்) பசி பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில் தான் அவர்கள் அப்படி(த் தடை) செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதி உள்ளவர், ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக் காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும் கூட அதைச் சாப்பிட்டு வந்தோம் என்று பதிலளித்தார்கள். உங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன வந்தது? என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சிரித்து விட்டு, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களுடைய குடும்பத்தார் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கூட (கறிக்) குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. நூல் : 
புஹாரி 5423
 
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், உங்களில் யார் குர்பானிப் பிராணியை அறுக்கிறாரோ அவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாட்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரது வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம் என்று சொன்னார்கள். அடுத்த ஆண்டு வந்த போது, மக்கள் அல்லாஹ்வின் தூதரே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. ஆகவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று நான் விரும்பினேன் என்று பதிலளித்தார்கள். நூல் : புஹாரி 5569, 5570

 பெருநாள் தினத்தில் யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்திற்காகத் தான் இஸ்லாத்தில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து விளங்கலாம்.  

இதைத் தவிர இன்னொரு முக்கியமான நோக்கமும் இதற்கு உள்ளது. இப்ராஹீம் எனும் தீக்கத்தரிசி இறைவனுக்காகத் தம் புதல்வரைப் பலியிட முன் வந்தாகள். ஆட்டைப் பலியிடுமாறு இறைவன் வழி காட்டினான். அந்த தியாக உணர்வை நினைவு படுத்திக் கொள்வதற்காக முஸ்லிம்கள் மீது பலியிடுவது கடமையாக்கப்பட்டது. வெளித் தோற்றத்தில் ஆட்டைப் பலியிடுவது போல் இது தோன்றினாலும் இறைவனுக்காக அனைத்தையும் தியாகம் செய்ய நான் தயார்; அதற்கு அடையாளமாகவே இந்த ஆட்டைப் பலியிடுகிறேன். என்று உறுதி மொழி கொடுப்பதே இதன் நோக்கம்.  

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்குஆன் 22:37  

பலியிடுவதன் நோக்கம் இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது தான். இறையச்சத்தை வளர்க்காமல் அறுக்கப்படுவது இறைவனால் ஏற்கப்படாது என்பதை இவ்வசனம் மிகத் தௌவாக அறிவிக்கின்றது. 

இறைவன் கட்டளையிட்டால் என் மகனைக் கூட நான் பலியிடத் தயார். அதன் அடையாளமாகவே பிராணியைப் பலியிடுகிறேன் என்ற எண்ணத்தில் பலியிடுபவர் இறைவனின் எல்லாக் கட்டளைகளையும் நிச்சயம் நடைமுறைப் படுத்துவார்.  

வட்டி வாங்கமாட்டார். திருட மாட்டார் கொலை செய்யமாட்டார் ஏமாற்றமாட்டார் யாரையும் புண்படுத்தமாட்டார் எவரது உமைகளையும் பறிக்க மாட்டார். ஏனெனில் இது போன்ற அக்கிரமங்களை இறைவன் தடை செய்துள்ளான். இந்தப் பயிற்சியின் மூலம் அவர் மட்டுமின்றி மனித சமுதாயம் முழுவதுமே பயனடைகின்றது. இந்த உயர்ந்த பயிற்சியை அளிப்பதற்காகவே பலியிடுதல் இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது

. மேலும் இதனால் வேறு பல பயன்களும் உலகுக்குக் கிடைக்கின்றன. கடவுளுக்கு எதையேனும் பலியிட வேண்டும் என்ற நம்பிக்கை எல்லா மதத்தவர்களிடமும் உள்ளது. சில சமயங்களில் கடவுளுக்காக மனிதர்களைப் பலியிடும் மக்களும் உள்ளனர். தாம் பெற்ற மக்களையே கடவுளுக்காக அறுத்துப் பலியிடுவோரும் உள்ளனர். மனிதனைப் பலியிடக் கூடாது; வேண்டுமானால் அதற்காக ஒரு ஆட்டைப் பலியிடுங்கள் என்று மறைமுகமாக இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது. கடவுளுக்காகப் பலியிடுவதென்றால் அதிகபட்சமாக பிராணிகளைத் தான் பலியிடலாம் என்று முஸ்லிம்கள் விளங்கியிருப்பதனால் தான் முஸ்லிம்கள் கடவுளுக்காக நரபலி இடுவதில்லை என்பதைக் காண்கிறோம். 

குர்பானியால் ஏற்படும் நன்மையில் இதுவும் அடங்கும். மனிதனிடம் இரக்கமும், கருணையும் இருக்க வேண்டியது அவசியமாகும். இது போல் சில சமயங்களில் கடுமையும் தீயவர்களுக்கு எதிராக மூர்க்கமான தாக்குதலும் அவசியம். ஆனால் மனிதன் தன்னிடம் கொள்ளையடிக்க வருபவர்களைக் கூட எதித்துத் தாக்குவதற்கு அஞ்சுவதை நாம் பாக்கிறோம். இரத்தத்தைக் கண்டதும் மயங்கி விழக் கூடியவர்களையும் நாம் பார்க்கிறோம். அந்தக் கோழைத்தனத்தைப் பிராணிகளைப் பலியிடுவது நிச்சயம் மாற்றியமைக்கும். அக்கிரமத்தை எதிர்க்கும் துணிவை இது வழங்கும். இது போன்ற பயன்களை உங்கள் தோழி உணர்ந்து கொண்டால் நிச்சயம் இஸ்லாம் கூறும் பலியிடுதலைக் குறை கூற மாட்டார்.

ஒரு குர்‍ஆனும் பல குர்‍ஆன்களும்?

!



இஸ்லாத்தை விமர்சிக்கும் பிறமத நண்பர்கள் ஒரு குர்ஆனா பல குர்ஆன்களா!? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

-----------------------------------------------------------------------------------
//ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?!

Quran or Qurans?!

இக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية

இந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:

The reading ways of Quran dictionary: (moa'agim alqera'at alqura'nia):

இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:

டாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)
டாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)

இவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.
புத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel - Kuwait)

முன்னுரை:

உத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்‍ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்‍ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்‍ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார்.

உதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்‍ஆன் வகைகள்:

1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்‍ஆன் (Quran according to Ali bin abi talib)
2. இபின் மஸூத் என்பவரின் படி குர்‍ஆன் (According to Ibn Mass'oud)
3. அபி பின் கப் என்பவரின் படி குர்‍ஆன் (According to Aobi bin ka'ab)

இதன் பொருள் இவர்கள் குர்‍ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்‍ஆனை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர்.

குர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.

ஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:

1. நஃபா: கலன் + வர்ஷ் (Nafaa': Qalon + Warsh)
2. இபின் கதிர்: அல்பிஜி + கோன்பில் (Ibn Kathir: Albizi + Qonbil)
3. அபி அம்ரொ: அல்தோரி + அல்சோசி (Abi amro: Aldori + Alsosi)
4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)
5. அச்செம்: அபோ பைகர் + ஹஃபஸ் (Assemm: Abo Biker + Hafas)
6. அல் கெஸ்ஸய்: அலித் + அல்தோரி (Alkessa'i: Allith + Aldori)
7. ஹம்ஜா: அல்பிஜாஜ் + அபோ ஈஸா அல்சிர்பி (Hamza: Albizaz + Abo Isa Alsirfi)//

-----------------------------------------------------------------------------------


இங்கு பதிவு செய்துள்ள குழப்பமான கருத்துகளில் பிறமத நண்பர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று முழுதும் புரியவில்லை என்றாலும் ''குர்ஆன் ஒன்றல்ல, ஏழு வகையான குர்ஆன் உள்ளது'' என்று சொல்கின்றனர் என்று விளங்குகிறது. எடுத்து வைக்கும் சான்றுகளில் இவர்களுக்கே நம்பிம்கையில்லை என்பதை இவர்களின் தடுமாற்றம் தெளிவுபடுத்துகிறது. இவர்கள் பதியும் கருத்துக்கள் இவர்களுக்கேப் புரியாமல் போய் விடுகிறது என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்,

-----------------------------------------------------------------------------------
//நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.//
-----------------------------------------------------------------------------------

தெளிவில்லாத விமர்சனத்தைப் பதிவு செய்கிறோம் என்பது அவர்களுக்கே உறுத்தலாக இருப்பதால் ''மிகவும் தெளிவாக உள்ளது'' என்று சான்றிதழ் வழங்கிக் கொள்கிறார்கள்.

நண்பர்களே! உலகில் ஒரே ஒரு குர்ஆன் உள்ளதாக யாரும் சொல்ல மாட்டார்கள்! உலகம் முழுதும் உள்ள குர்ஆன் பிரதிகளை கணக்கிட்டால் பல கோடி குர்ஆன் பிரதிகளை கண்டெடுக்கலாம். விஷயத்துக்கு வருவோம்,

வட்டார மொழி

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களும் பேசுவது தமிழ் என்றாலும் ஒவ்வொரு இடத்திலும் பேசும் தமிழில் வித்தியாசமிருக்கும். இதை வட்டார மொழி என்று சொல்வார்கள். பேசு பொருள் ஒன்றாக இருந்தாலும் பேசும் ஒலியில் ஏற்ற இறக்கமிருக்கும். ஒருவர் தமிழ் பேசுவதை வைத்தே அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறிவிடலாம். இதில் இலங்கைத் தமிழ் வித்தியாசமான தனித் தமிழ் பேச்சாக இருக்கும். பயிற்சி எடுத்தாலே தவிர ஒரு வட்டாரப் பேச்சை இன்னொரு வட்டாரத்தைச் சேர்ந்தவர் பேசுவது கடினம். அந்த அளவுக்கு வட்டார மொழி ஒருவரின் பேச்சில் ஊறிப்போனதாகும்.

''ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப்படி ஜிப்ரீல்(அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள். அதை இன்னும் பல(வட்டார) மொழிவழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறால்கள். (புகாரி, 3219, 4991)

திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது. அரபு மொழியில் ஏழு வட்டார மொழியில் ஓதுவதையே பிரபலமான ''ஏழு கிராஅத்துகள்'' - ஏழு வகையான ஓதும் முறைகள் - என்று சொல்வார்கள்.

ஏழு வகையான ஓதும் முறைகளையே மாறுபட்ட ஏழு வகையான குர்ஆன்கள் இருக்கின்றன என்று புரிந்து கொண்டு, //''ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.''// என்ற தவறான விமர்சனத்தை வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வைத்துள்ள ஆதாரங்கள் மறு ஆய்வுக்குரியவை என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்.

ஏழு வகையான ஓதுதல்

''இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) 'அல்ஃபுர்கான்' எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக் கொண்டேன்.

(அவர் தொழுது முடித்த) பிறகு அவரின் மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, 'நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஒதிக் காண்பித்தார்கள்' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர்! ஏனெனில், நீர் ஓதியதற்கு மாற்றமாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எனக்கு ஓதிக்கொடுத்தார்கள்' என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்' என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை விடுங்கள்!' என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), 'ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்!' என்றார்கள். அவர் என்னிடம் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது' என்று கூறினார்கள்.

பிறகு (என்னைப் பார்த்து), 'உமரே, ஓதுங்கள்!' என்று கூறினார்கள். எனக்கு அவர்கள் ஓதிக்கொடுத்திருந்த முறைப்படி நான் ஓதினேன். (அதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.'' என்று உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, 4992, 5041, 6936, 7550)

நபி (ஸல்) அவர்களின் காலத்தில், இரு நபித்தோழர்கள் குர்ஆனை இரு வகையாக ஓதியிருக்கிறார்கள். இரு ஓதலையும் நபி (ஸல்) அவர்கள் சரி என அங்கீகரித்துள்ளார்கள் என்றால் இருவரும் குர்ஆன் வசனங்களை மாற்றி ஓதினார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா? என்றால் இல்லை. உதாரணமாக:

நபித்தோழர் ஹிஷாம் (ரலி) அவர்கள் திருக்குர்ஆனில் அல்ஃபுர்கான் எனும் 25வது - அத்தியாயத்தை ஓதியதாக அறிவிப்பில் உள்ளது. ஃபுர்கான் அத்தியாயத்தின் தொடக்க வசனம்:

''(சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியவான்'' என்று கூறுகிறது. தொழுகையில் முன்னின்று ஓதும் இமாம் இதை பிழையாக ஓதினாலோ, அல்லது மறதியாக ஒரு வார்த்தையை விட்டுவிட்டாலோ, அவருக்குப் பின்னின்று தொழுபவர்கள் தவறைத் திருத்தியும், மறந்த வசனத்தை நினைவு படுத்தியும் எடுத்துச் சொல்வார்கள்.

இந்த அடிப்படையில், ஹிஷாம் (ரலி) அவர்கள் அல்ஃபுர்கான் அத்தியாய வசனங்களை மாற்றியோ, தவறாகவோ ஓதியிருந்தால் தொழுகையிலேயே அவர் திருத்தப்பட்டிருப்பார். ஹிஷாம் (ரலி) அவர்களின் குர்ஆன் ஓதலை, பின்னின்று தொழுத மற்ற நபித்தோழர்கள் ஆட்சேபிக்கவில்லை. உமர் (ரலி) அவர்களும் அவர் ஓதி முடிக்கும் வரை ஆட்சேபிக்கவில்லை என்பதிலிருந்து ஹிஷாம் (ரலி) அவர்கள் குர்ஆன் வசனங்களை சரியாகவே ஓதியுள்ளார்கள் என்பது தெளிவு!

ஹிஷாம் (ரலி) அவர்கள் சரியாக ஓதியிருந்தால் அதை உமர் (ரலி) அவர்கள் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு, ஓதிய வகையில் மாற்றமிருந்தது. அதாவது ஓதிய வட்டார மொழி வித்தியசமாக இருந்ததால் உமர் (ரலி) அவர்களுக்கு அது குர்ஆன் ஓதும் முறையாக இல்லையே என்று தோன்றியிருக்கிறது, குர்ஆனை மாற்றி வேறு முறையில் ஓதிவிட்டதாகக் கருதி, அதைக் கண்டிப்பதற்காக ஹிஷாம் (ரலி) அவர்களின் கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்து, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுகிறார்.

நபி (ஸல்) அவர்கள், இருவரும் ஓதியது சரிதான் என்று கூறிய பின் உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டதிலிருந்து, ஹிஷாம் (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதிய முறையும் நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட முறைதான் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. தெரிந்த பின் ஏற்றுக்கொண்டார்கள் என்று விளங்கலாம்.

குர்ஆன் ஓதும் முறை

''குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!'' (திருக்குர்ஆன், 073:004)

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ''குர்ஆனை எனக்கு ஓதிக்காட்டுங்கள்'' என்று சொன்னார்கள். நான் ''தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க , தங்களுக்கு நான் ஓதிக்காட்டுவதா?'' என்று கேட்டேன். அவர்கள் ''பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்'' என்று சொன்னார்கள். என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, 5049)

நபி (ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படி இருந்தது என்று கேட்டேன். அதற்கவர்கள், ''நீட்டி ஓதுதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எப்பதில் ''பிஸ்மில்லா...ஹ் என நீட்டுவார்கள், அர்ரஹ்மா...ன் என்றும் நீட்டுவார்கள், அர்ரஹீ...ம் என்றும் நீட்டுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். (புகாரி, 5046)

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது ஒட்டகத்தின் மீதர்ந்தபடி) 'அல்ஃபதஹ் (48வது) அத்தியாத்தைத் 'தர்ஜீவு' செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக்கொண்டிருந்தார்கள். (புகாரி, 4281, 4835)

''தர்ஜீவு'' என்பதற்கு மீட்டுதல் என்று பொருளாகும். ஒரு எழுத்தைத் திரும்பத் திரும்ப தொண்டைக்குக்கொண்டு வந்து ஓசை எழுப்பி ஓதுவதாகும். ஆ எழுத்தை ஆ ஆ ஆ என்று இழுத்து ஓதும்போது ஒரே எழுத்தின் ஒலி நீண்டு ஓசை நயத்துடன் ஓதும் முறைக்கு தர்ஜீவு எனப்படும்..

பாங்கொலியில் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்... தொழுகையின் அழைப்பை குரல் வளமிக்கவர் நன்றாக நீட்டிச் சொல்லும் போது கேட்க இனிமையாக இருக்கும். எடுத்துக்காட்டாக: நாகூர் ஹனீஃபா என்ற முஸ்லிம் பாடகர் ஒரு பாடலில் பாங்கு சொல்லியிருப்பார் அவரின் கனத்த குரலுக்கு நீட்டி நிறுத்தி சொல்லியிருக்கும் பாங்கை தர்ஜீவு என்று சொல்லலாம்.

குர்ஆனை மனனம் செய்தவர்கள் வெவ்வேறு முறைகளில் நீட்டி இழுத்து ஓதியிருக்கிறார்கள். ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்ற தொடக்க வசனத்தை ஓதி நிறுத்திவிட்டு பின்னர் அல்ஹம்துலில்லாஹி... என்று தொடங்குவது ஒருவகை ஓதல்.

''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீமில்ஹம்துலில்லாஹி...'' என்று ஒன்றாகச் சேர்த்து நீட்டி இழுத்து ஓதுவதும் ஒருவகை ஓதல்.

ஒரு வசனத்தையே திரும்பத் திரும்ப ஓதுவதும் ஒருவகை. குரல் வளமிக்கவர்கள் குரலை உயர்த்தி, தாழ்த்தி நீட்டி நிறுத்தி வெவ்வேறு வகையிலும் ஓதிக்கொள்ளலாம் என்பதே பல வகையான ஓதுதல் எனப்படும். ஏழுவகையான ஓதுதல் என்பது ஓர் அளவுதானே தவிர குர்ஆனை இனிமையாக ஓத முடியுமென்றால் ஏழு முறைக்கும் அதிகமான வட்டார மொழியில் ஓதலாம். அதற்கு தடையேதும் இல்லை. குர்ஆன் இனிமையாக ஓதப்பட்டால் செவி தாழ்த்திக் கேட்பவர்களை அது ஊக்கப்படுத்தும்.

இதற்கு உதாரணமாக: 12 வயது எகிப்து சிறுமி சுமையா, இன்று தன் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதில் சிறப்புப் பெற்று வருகிறார். இவருடைய ஓதல், அப்படியே குர்ஆன் ஓதுவதில் பிரபல்யமான அப்துல் பாசித் அவர்களின் ஓதலை நினைவூட்டுகிறது. சுமையாவின் குர்ஆன் ஓதலைக் கேட்பதற்காக மக்கள் திரளாக வந்து கண்ணியத்துடன் காத்திருக்கிறார்கள் என்றால் ராகத்துடன் ஓதும் சுமையாவின் இனிமையான குரல் மக்களை ஈர்க்கிறது.

ஏழு வட்டார மொழி

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ஏழு வட்டார மொழி இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. ஒலியைப் பதிவு செய்ய முடியாத காலத்தில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தது என்பதால் அன்று குர்ஆனை ராகமிட்டு ஓதிய முறை இது என்று தீர்க்கமாக சொல்ல இயலாது. குர்ஆனை ஓதும் முறை பற்றி வசனத்திலும் சில அறிவிப்புகளிலும் ஆதாரங்கள் இருப்பதால் குர்ஆனை இனிமையாக ராகமிட்டு ஓதலாம் என்கிறோம்.

ஏழு வட்டார மொழியை பிரபல்யமான ஏழு வகையான கிராஅத் - ஓதல் என்று சொன்னாலும் அறிஞர்களிடையே ஏழு வட்டார மொழி குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு. இவற்றை அறிஞர்களின் கருத்தாகவே கொள்ளலாமே தவிர அறிஞர்களின் கருத்துக்களை வலுசேர்க்க நபிவழி அறிவிப்புகளில் சான்று எதுவும் இல்லை.

குர்ஆனை இனிமையாக பல ராகத்துடன் ஓதிக்கொள்ளலாம் என்பதையே ஏழு வட்டார மொழி வழக்கு என்ற அறிவிப்பு அனுமதிக்கிறது. குர்ஆன் வசனங்களை ஏழு விதமாக மாற்றி ஓதினார்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. இதற்கு மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் தக்க சான்றுகள் உள்ளன.

மேலும்,

''நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள்'' (திருக்குர்ஆன், 073:020)

''இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' (மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பு, புகாரி, 4992, 5041, 6936, 7550)

குர்ஆனில் சுலபமானதை ஓதுங்கள் என்று - (கூட்டுத் தொழுகையில் முன்னின்று தொழ வைப்பவர் அல்லாத) - ஒருவர் குர்ஆனை நீட்டியும் ஓதலாம், சுருக்கியும் ஓதலாம் என்பதை அனுமதிக்கிறது. ''உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' என்பதும் ஒரே ஒரு குர்ஆனையேக் குறிப்பிடுகிறது. ஏழு வகையான குர்ஆனைக் குறிப்பிடவில்லை.

எம்மிடம் உள்ளது இதுவே!

இனி...

-----------------------------------------------------------------------------------
//குர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.//
-----------------------------------------------------------------------------------

ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின்... என்று விளக்கியிருக்கும் பிறமத நண்பர்களே!

ஏழு வித்தியசாமான குர்ஆன்கள் உண்டு என்ற உங்களின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, வித்தியாசப்பட்ட குர்ஆன் வசனங்களை சான்றுகளுடன் களத்தில் வையுங்கள்!

அதாவது, ''ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின் படி'' இந்த ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தையும், +3 +4 இதர மற்றும் கூடுதலான, இதில் இயல்புக்கு மாறான முறை என்ன? என்பதையெல்லாம் சற்று விளக்கிச் சொல்வீர்களாயின் முஸ்லிம்களும் புரிந்து கொள்வார்கள், விளக்குவீர்களா...?

சம்பந்தப்பட்ட பதிவில், நீங்கள் சரித்திரங்களைத் திரித்துள்ளீர்கள். ஆதாரங்களுடன் அடுத்து சந்திப்போம்.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

காஃபீர் என்றால் யார்????

 காபிர் என்றால் யார் ?
 
ஏகனான அல்லாஹ்வை .......இறைவனை முழுமையாக நிராகரிப்பவனை இஸ்லாம் "காபிர்" என்று கூறுகிறது. 
அல் குர்ஆன் சொல்லும் ஏகனான அல்லாஹ் யார்?

(நபியே!) நீர் கூறுவீராக: (ஆதியும் அந்தமும் இல்லா) அல்லாஹ் அவன் ஏகன் .[112:1] 

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.[112:2]
 
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.[112:3] 

அன்றியும், அவனுக்கு இணையாக எதுவும் இல்லை.[112:4]
முஸ்லிம்கள் இறைவனின் வேதம் என்று உறுதியாக விசுவாசிக்கின்ற புனித அல் குர்ஆன் இறைவன் சம்பந்தமாக இவ்வாறு குறிப்பிடுகிறது. 
அல் குர்ஆன் குறிப்பிடுன்ற ஏகனான அல்லாஹ்வை .......இறைவனை முழுமையாக நிராகரிப்பவனை இஸ்லாம் "காபிர்" என்று கூறுகிறது. 
அல் குர் ஆன் குறிப்பிடும் இந்தத்தகுதிகளுக்கு மாற்றமாக அல்லாஹ்வை ......இறைவனை நினைப்பது அல்லது கருதுவது தெய்வ நிந்தனையாகும்.
யாராகிலும் ஒருவர் அல் குர் ஆன் குறிப்பிடும் இந்த அல்லாஹ்வை நிராகரித்தால் அவரை அல்லது அத்தகைய மக்களை  "காபிர்" என்று இஸ்லாம் கருதுகிறது.

அல் குர் ஆன் குறிப்பிடுகின்ற இந்த அல்லாஹ்வை அல்லது ஏகனான இறைவனை ஏற்றுக் கொள்ளாமல் அவனுக்குப் பகரமாக அல்லது இணையாக வேறு கடவுளை அல்லது கடவுளர்களை விசுவாசிக்கும் மக்களையும் இஸ்லாம் "காபிர்" என்றழைக்கிறது.

அவர்களுடன், அல் குர் ஆன் குறிப்பிடும் இந்த அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட நிலையில் அந்த அல்லாஹ்வுடன் வேறு இறைவனை அல்லது கடவுளர்களை இணையாக கருதுகிறவர்களையும் இஸ்லாம் "காபிர்" என்று வரையறை செய்கிறது.

அல் குர்ஆன் விளக்கியிருக்கும்  அல்லாஹ்வை சொல்லளவில் ஏற்றுக் கொண்டு உள்ளத்தில் அந்த இறைவனுக்கு நிகராக அல்லது இணையாக யாராகிலும் ஒருவரை அல்லது ஒரு குழுவினரை அல்லது ஒரு அமைப்பை அல்லது ஒரு நாட்டை ஏற்றுக் கொண்டிருக்கும் மக்களையும் இஸ்லாம் "காபிர்" என்று வர்ணிக்கிறது.
இறைவனை அல்லது கடவுளை ஏற்றுக் கொண்டேன் என்று தன்னை அழைத்துக் கொள்கின்ற இணைய நண்பர் அன்புராஜ் போன்ற ஒருவர் அல் குர்ஆன் குறிப்பிடுகின்ற அல்லாஹ்வை தனது கடவுளாக அல்லது இறைவனாக ஏற்றுக் கொண்டிருந்தால் அவர் முஸ்லிமாக,கிறிஸ்தவராகஅல்லது யூதராக இல்லாத நிலையிலும் இஸ்லாம் அவரை  "காபிர்"  என்று அழைப்பதில்லை.

அவர் உண்மை இறை விசுவாசியாவார்.
ஆனால்,துரதிர்ஷ்ட வசமாக இறைவனை அல்லது கடவுளை விசுவாசிக்கின்ற ஒருவர் அல் குர் ஆன் குறிப்பிடும் அல்லாஹ்வை ...ஏகனான இறைவன்  அல்லாத பிறிதொரு இறைவனை விசுவாசித்தால் அவர் "காபிரா"வார்.
அல் குர்ஆன் விளக்கியிருக்கின்ற ஏகனான அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு முஹம்மது நபியை அவனது தூதராக ஏற்றுக் கொண்டிருக்கும் மக்கள் முஸ்லிம்கள் என்று அழைக்கப் படுகிறார்கள்.அதனால், அல் குர் ஆனின் கருத்தியலின் பிரகாரம் முஸ்லிம்கள் காபிர்கள் அல்ல. இறை விசுவாசிகள்.

அந்த அல்லாஹ்வை தனது இறைவனாக ஏற்றுக் கொண்டு அவனது  தூதராக நபி ஈஸாவை ஏற்றுக் கொண்டிருக்கும் மக்கள் கிறிஸ்தவர்களாகும். ஆகவே, அல் குர்ப ஆனின் போதனையின் பிரகாரம்  கிறிஸ்தவர்கள் காபிர்கள் அல்ல.இவர்களும் இறை விசுவாசிகள்.

அதே போன்று அல் குர் ஆன் இனம் காட்டியிருக்கும் அல்லாஹ்வை தனது இறைவனாக ஏற்றுக் கொண்டு நபி மூஸாவை அவனது தூதராக ஏற்றிருக்கும் மக்கள் யூதர்களாகும்.இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அந்த யூத மக்களும் காபிர்கள் அல்ல.இறைவனையும் நபி மூஸாவையும் ஏற்றுக் கொண்ட இந்த சமூகத்தவர்களும் இறை விசுவாசிகளாகும்.

‘தலாக்’ ஓர் ஆய்வு!

!


மனிதனின் குடும்ப வாழ்வு நரக வாழ்வாக நீடிக்க வகையில்லாது ஒரு முடிவுக்கு கொண்டு வர அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள சாதனம் ‘தலாக்’ விவாக விடுதலை. அந்த தலாக் இன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு விதவிதமான பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அல்லாஹ் அளித்துள்ள இந்த அனுமதி ‘தலாக்’ – இதன் எதார்த்தமான நிலையை ஆராய்வோம்.
    அல்லாஹ்வின் சட்டங்களை ஆராய்வதற்கு சிறந்த உரைகல் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட இறுதி வேதம் அல்குர்ஆன். அடுத்து அந்த அல்குர்ஆனுக்கு விளக்கவுரையாக அமைந்துள்ள அல்லாஹ்வின் இறுதித் தூதரின் நடமுறைகள். இதற்குமேல் முடிவு செய்யும் அதிகாரம் யாருக்குமில்லை. மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் இன்று இந்த இரண்டு அடிப்படைகளை விட்டு மனித அபிப்பிராயங்களை முன்னோர்களின் பெயரால், இமாம்களின் பெயரால் மார்க்கத்தில் நுழைத்து அதை மதமாக்கியதாகும். அதே வரிசையில் தான் இந்த ‘தலாக்’ பிரச்னையிலும் முஸ்லிம் சமுதாயத்தின் பெருந்தொகையினர் மனித சட்டத்தை இறை சட்டமாக ஆக்கியுள்ளனர்.
    குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணாக மத்ஹபுகளையும், தரீக்காக்களையும் கடைபிடிக்கும் தங்களை அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை முஸ்லிம்களும், அவர்களை வழிநடத்திச் செல்லும் ஜமாஅத்துல் உலமா சபையினரும் அவர்கள் நடத்தும் வார, மாத இதழ்களிலும் தலாக் சட்டம் இறவனின் தீர்ப்பாகும். இதில் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை என்று ஏகோபித்து எழுதுகிறார்கள். ஆனால் “நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரே சமயத்தில் சொல்லப்பட்ட 3 தலாக் ஒரே தலாக்காகவே கணக்கிடப்பட்டது” என்ற உண்மையான சட்டத்தை மாற்றி ‘ஒரே சமயத்தில் சொல்லப்பட்ட 3′தலாக்’ மூன்று தடவையாக கணக்கிடப்பட்டு விவாக முறிவு ஏற்படும்’ என்ற சட்டத்தை அல்லாஹ்வின் சட்டம் என்று சொல்கிறார்கள்.
    அல்லாஹ்வின் சட்டத்தை மாற்ற யாருக்கும் அதிகாரமில்லை என்று சொல்லிக்கொண்டு மனித சட்டங்களை மார்க்கமாக்குவதில்தான் குறியாய் இருக்கிறார்கள். ஏனிந்த முரன்பாடோ தெரியவில்லை. தலாக் விஷயத்தில் மட்டுமல்ல, அவர்களது பெரும்பாலான நிலைகளில், மத்ஹபு, தரீக்கா, ரமழான் இரவுத்தொழுகை இப்படி எண்ணற்ற பிரச்னைகளில் நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தியதற்கு முரணாக நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் மனிதர்களால் நடமுறைப்படுத்தப்பட்ட மனித நடைமுறைகளையே இவர்களும் பக்தியுடம் கடைபிடிக்கின்றனர்.
    இந்த தலாக் விஷயத்திலும் நபி(ஸல்) நடமுறைக்கு முரணாக ‘ஒரே சமயம் சொல்லும் மூன்று தலாக் செல்லும் என்ற தவறான சட்டத்தை பெரும்பான்மையினராக அவர்கள் சொல்லுவதால் அதுதான் சரி, குறைந்த எண்ணிக்கையினரான குர்ஆன், ஹதீஸ் வழியில் நடப்பவர்கள் சொல்லும் ‘ஒரே சமயத்தில் சொல்லப்படும் மூன்று தலாக் ஒரே தவணையாகவே கணக்கிடப்பட வேண்டும்” என்ற நபியின் நடமுறை ஏற்கத்தக்கதல்ல என்று வாதிடுகிறார்கள். பெரும்பான்மை கொண்டு சட்டம் வகுக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்.
    பூமியில் உள்ளவர்களில் பெரும் பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். (6:116)
      நாங்கள் பெரும்பான்மையினர் நாங்கள் கூறுவதுதான் சரி என்று மார்தட்டும் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலையை உற்று நோக்கும்போது இந்த 6:116 வசனம் அவர்களை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. எனவே மத்ஹபு, தரீக்கா வழி செல்வோர் விஷயத்தில் உண்மை முஸ்லிம்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். காரணம் முன்னோர்களைப் கண்மூடிப் பின்பற்றும் மாற்று மதத்தினருக்கும், அதே போல் முன்னோர்களைப் கண்மூடிப் பின்பற்றி இஸ்லாமிய மார்க்கத்தையும் மதமாக்கியுள்ள முக்கல்லிதுகளுக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதாக அறிய முடியவில்லை. ‘ஒரே சமயத்தில் 3 தலாக் சொன்னால் அது செல்லுபடியாகும் என்ற தவறான சட்டத்தையே இந்த பெரும்பான்மை அஹ்லசுன்னத் வல் ஜமாஅத்தினர் கடைபிடிக்கின்றனர். இதை விரிவாக ஆராய்வோம்.
    ‘தலாக்’ அல்லாஹ்வின் கட்டளை என்ன?
    தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்டி அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு. கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும் ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான். (2:228)
   (இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம் அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம் அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது – இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும். ஆகையால் அவற்றை மீறாதீர்கள். எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள். (2:229)
     மீட்ட முடியாதபடி (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன்  மனைவி சேர்ந்து வாழ நாடினால் – அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்டி இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். (2:230)
    (மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள் அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள். ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள். இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார். எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள். அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்துப் பாருங்கள். இவற்றைக்கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (2:231)
    இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும் (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான் நீங்கள் அறிய மாட்டீர்கள். (2:232)
     முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பெரிய கைசேதம் என்னவென்றால் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தெள்ளத்தெளிவான குர்ஆனையும், ஹதீஸையும் ஏறிட்டுப் பார்க்க அவர்கள் விரும்புவதில்லை; முற்படுவதுமில்லை. மற்ற மதத்தினரைப் போல் இவர்களும் தங்களின் முன்னோர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கத்தான் முற்படுகிறார்கள். இந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு குர்ஆனையும், ஹதீஸையும் நோட்டமிட ஆரம்பித்தால் அவை அவர்களுடம் பேச ஆரம்பித்துவிடும். அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் விட தெளிவான விளக்கத்தை மற்றவர்கள் தரமுடியும் என்று நம்புகிறவர்கள் பெரும் வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
    இப்போது நாம் எடுத்து எழுதியுள்ள இறைவாக்குகளை கவனமாகப் பாருங்கள். இந்த வசனங்களில் தலாக்கினுடைய எண்ணிக்கை சொல்லப்படவில்லை. ஒரு தலாக். இரண்டு தலாக், மூன்று தலாக் என்று சொல்லப்பட்டிருக்கின்றதா அல்லது முதல் தவணை அல்லது இரண்டாவ்து தவணை, மூன்றாவது தவணை என்று முறை, வேளை, சந்தர்ப்பம் என்று அவகாசம் கொடுப்பதையே உள்ளங்கை நெல்லிக்கனியாக எடுத்துக் காட்டுகிறது.
    مَرَّتَانِ மர்தானி என்ற அரபி பதம் வெவ்வேறு அவகாசங்கள் இரண்டைக் குறிக்குமேயல்லாமல், ஒரே நேரத்தில் கூறப்படும் இரண்டு எண்ணிக்கையைக் குறிப்பிடாது. மூன்று வேளை சாப்பாடு, மூன்று வேளை மருந்து என்று சொல்லும்போது ஒரே வேளயில் மூன்று வேளை சாப்பாட்டையும், அல்லது மருந்தையும் சாப்பிடுவது என்று பொருள்படும் என்று கூறுபவர்களை அறிவாளிகள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
    எனவே கணவன் மனைவி என்ற உறவைப் பிரிக்க அல்லாஹ் வெவ்வேறு சந்தர்ப்பத்தை அளித்துள்ளானேயல்லாமல் ஒரே நேரத்தில் மூன்று தலாக்கைச் சொல்லி உறவைப் துண்டிக்கச் சொல்லவில்லை. காரணம் நினைத்த மாத்திரத்தில் உடனடியாக மனைவியை விரட்டிவிட மார்க்கம் அனுமதிக்கவில்லை. என்பதற்கு உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (4:21) கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உhpமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டுடி (2:228) உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (4:21) ஈமான் கொண்டவர்களே! மூஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை முன்னமேயே ‘தலாக்” செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை (33:49) என்ற வசனத்தையும் ஒப்பு நோக்கும் எவரும் மணந்து மனைவியுடன் வாழ்ந்தபின் அந்த மனைவி பிடிக்கவில்லை என்பதால் தவணைகளை புறக்கணித்து ஒரே சமயத்தில் மூன்று தலாக் கூறி அவளை மனைவி என்ற உறவிலிருந்து பிரித்து விட முடியாது. அது செல்லாது என்பதை எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.
    எனவே ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தடவை அல்ல, முன்னூறு ‘தலாக்’ சொன்னாலும் அது ஒரே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியதாகவே பொருள்படும். இன்னும் இரண்டு சந்தர்ப்பங்கள் இருக்கவே இருக்கின்றன. ஆனால் அதற்கு மாற்றமாக ஒரே சந்தர்ப்பத்தில் ஒரே ‘தலாக்’ சொல்லி 3 தவனைகளுக்குறிய காலக்கெடு முடிந்து விட்டால் கணவன் மனைவி என்ற உறவு முறிந்துவிடத்தான் செய்கிறது. காரனம் தவனைகள் முடிந்து விட்டன. அதே சமயம் அந்தப் பெண் வேறொரு கணவனை அடைந்துகொள்ள உரிமை இருப்பதுடன், இதே கணவனை விரும்பினால் மீண்டும் மணமுடித்துக்கொள்ளவும் முடியும். மூன்று தவணைகளில் மூன்று தலாக் சொல்லி பிரிந்து விட்டால் மட்டுமே, வேறு கணவனுக்கு மனைவியாகி வாழ்ந்து பின் அவரிடமிருந்து முறைப்படி தவணைகளில் ‘தலாக்’ பெற்ற பின்பே முன்னைய கணவன் அவளை மீண்டும் மனைவியாகக் கொள்ள முடியும்.
    தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான். (2:226)
   இந்த இறைவாக்கு சொல்வதென்ன? மனைவியுடன் சேர்வதில்லை என்று சத்தியம் செய்தவரே உடனடியாக மனைவியை விரட்டிவிட முடியாது. நான்கு மாதம் பொறுக்கவேண்டும். அதற்குள் சேர்ந்து கொள்ளவும் அல்லாஹ் வாய்ப்புத் தருகிறான்.
இந்த நிலையில் தவணைகளைப் புறக்கணித்து ஒரே சமயத்தில் மூன்று ‘தலாக்’ சொன்னவுடன் மண முறிவு ஏற்பட்டு விடும் என்று சட்டம் வகுப்பவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மதிப்பவர்களா? சொல்லுங்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மூன்று தலாக் ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது என்ற ஹதீஸை பார்ப்போம்.
    நபி(ஸல்) காலத்திலும், அபூபக்ரு(ரழி) காலத்திலும், உமர் (ரழி) அவர்களின் ஆரம்ப இரண்டு ஆண்டுகளிலும் ஒரே சமயத்தில் மூன்று தலாக் என்பது ஒரு ‘தலாக்’காகவே (தவணை) கருதப்பட்டு வந்தது; நிதானத்தை மேற்கொள்ள வேண்டிய விஷயத்தில் மக்கள் அவசரம் காட்டுவதைக்கண்ட உமர்(ரழி) அவ்வாறு நாம் அதைச் சட்டமாக்குவோம் எனக்கூறி சட்டமாக்கினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி), நூல்:முஸ்லிம்)
    இந்த ஹதீஸ் தெள்ளத்தெளிவாக அல்லாஹ்வின் சட்டத்தை அதன் அடிப்படியில் நபி(ஸல்) நடைமுறையை உமர்(ரழி) மாற்றினார்கள் என்பதை தெளிவாக கூறுகிறது. இந்த நிலையில் தலாக் சட்டம் இறைவனின் தீர்ப்பு; இதில் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமையில்லை என்று சொல்கிறார்களே அதன் பொருள் என்ன? உமர்(ரழி) அவர்கள் மாற்றியமைத்தது தான் அல்லாஹ்வின் சட்டமா? நபி(ஸல்) அவர்களுக்கே இல்லாத, இறைவனின் சட்டத்தை மாற்றும் அதிகாரம் உமர்(ரழி) அவர்களுக்கு இருந்ததாக இவர்கள் நம்புகிறார்களா? ஏனிந்த முரண்பாடு?
    மஹ்மூது இப்னு லபீத்(ரழி) அறிவிக்கும் ஹதீஸ் ஒருவர் தனது மனைவிக்கு ஒரே தவணையில் மூன்று ‘தலாக்’ கூறி விடுகிறார். இதனைக் கேள்வியுற்ற நபி(ஸல்) சினமுற்றவர்களாக எழுந்து விட்டனர். பின்னர், நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும்போதே அவர் அல்லாஹ்வின் வேதத்தோடு விளையாடுகிறாரா? என்றார்கள் என்று காணப்படுகிறது. இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி, இங்கு மூன்று தலாக்கும் ஒரே நேரத்தில் சொல்லப்பட்டு மணமுறிவு ஏற்பட்டதால் தானே நபி(ஸல்) அவர்கள் ஆத்திரப்பட்டார்கள். இருக்கையை விட்டு எழுந்து குர்ஆனோடு விளையாடுகிறாரா என்று சுய விளக்கம் தருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் சுய விளக்கம் சரிதானா?
    அல்லாஹ் மூன்று தவணை என்று வெவ்வேறு அவகாசத்தைக் குறிப்பிட்டிருக்க, மூன்று தலாக் ஒரே நேரத்தில் சொன்னவர்  தவணை என்று இருப்பதை எண்ணிக்கையை கணக்கில் கொண்டது குர்ஆனோடு விளையாடுவதாக ஆகாதா? அதனால் நபி(ஸல்) அவர்கள் கோபப்பட்டிருக்க முடியாதா? தலாக் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனத்தில் (பார்க்க 2:226-2:237) 2:231ல் “அல்லாஹ்வின் வசனங்களை கேலிகூத்தாக ஆக்காதீர்கள்” என எச்சரிக்கிறான். இந்த வசனத்தையும் இதர வசனங்களையும் ஆய்ந்து பார்க்கும்போது அல்லாஹ் மூன்று தவனை என்று சொல்லியிருப்பதை அந்த நபர் மூன்று எண்ணிக்கையாக ஆக்கி செயல்பட்டுள்ளதை அறிந்தே நபி(ஸல்) அவர்கள் வேகப்பட்டார்கள் என்று ஏன் கூற முடியாது? அவர்களின் சுய விளக்கத்தை விட இந்த விளக்கமே குர்ஆன் வசங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
    “ஒரே சமயத்தில் சொல்லப்படும் மூன்று தலாக் ஒரே தவணையாகவே கொள்ளப்படும்” என்ற இறை சட்டத்தை மாற்றி ஒரே சமயத்தில் சொல்லப்படும் மூன்று தலாக் மூன்று தவணைகளாகக் கொள்ளப்பட்டு மணமுறிவு ஏற்பட்டுவிடும். கணவன் மனைவி பிரிந்தேயாக வேண்டும் என்ற மனிதச் சட்டத்தை இறைச் சட்டமாகப் பிரகடனம் செய்யும் அவர்கள் சேர்ந்து வாழ வேண்டிய பல குடும்பங்களை தங்கள் மனித சட்டத்தால் பிரித்து அக்குடும்பங்களை சிதறடித்த மாபெரும் குற்றத்திற்கு ஆளாகி மறுமையில் அல்லாஹ்வின் பெரும் சாபத்திற்கும், தண்டணைக்கும் ஆழாக வேண்டி வரும் என அவர்களை எச்சரிப்பது ஒவ்வொரு உண்மை முஸ்லிமின் கடமையாகும். எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு உண்மையிலேயே அடிபணிந்து நடக்க துஆச் செய்கிறோம்.

முஸ்லிம் பெண்களின் விவாகரத்து உரிமை





மனைவியைப் பிடிக்கவில்லை என்றால் தலாக் – விவாகரத்துச் செய்யும் உரிமை, இஸ்லாத்தில் ஆண்களுக்கு இருப்பது போன்று, பெண்களுக்கு இல்லை என்று முஸ்லிமல்லாதோர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். இஸ்லாம் பெண்களுக்கும் அந்த உரிமையை வழங்கியிருக்கிறது என்பதை அறியாததால் அவர்கள் இவ்வாறு கருதுகின்றனர். கணவன் – மனைவி இருவருக்குமிடையே விவாவரத்துச் செய்யும் முறையில் வித்தியாசமிருக்கிறதே தவிர உரிமையில் வித்தியாசமில்லை.
சில முஸ்லிம்களும் இஸ்லாத்தை அறியாததால் பெண்களின் விவாகரத்து உரிமை மறுக்கப்பட்டாலும் இதற்காக இஸ்லாத்தைக் குறை கூற முடியாது. திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள கணவனுக்கு உரிமை இருப்பது போல் மனைவிக்கும் உரிமையிருப்பதை இவ்வசனத்திலிருந்து விளங்கலாம். ”கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று, மனைவியர்க்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு” 2:228
தவறான எண்ணம்.
கணவனால் கொடுமைப்படுத்தப்படும் மனைவி, அவனிடமிருந்து பிரிய விரும்புகிறாள் இந்த நிலையில் கணவன் மறுக்கிறான் – அவன் தலாக் விட்டால் தான் மனைவி பிரிய முடியுமென்றால் – காலமெல்லாம் அவனின் கொடுமைக்கு அவள் ஆளாகிக் கொண்டிருக்க நேரிடும் இது எவ்வளவு பெரிய விபரீதம் என்று தவறாக விளங்கி, இஸ்லாத்தை விமர்சிக்கிறார்கள். இது களையப்பட வேண்டும்.
கணவன் செய்யும் அக்கிரமங்களையெல்லாம் சகித்துக் கொண்டு, கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று ஆணாதிக்க சக்திக்கு அடிமைப்பட்டு வாழ பெண்களை ஒரு போதும் இஸ்லாம் நிர்ப்பந்திக்கவில்லை. மனைவியைப் பிடிக்கவில்லையெனில் ”தலாக்” சொல்லி விவாக பந்தத்தை முறித்துக் கொள்ளும் உரிமை கணவனுக்கு இருப்பது போல், கணவன் மீது அதிருப்தியுற்ற மனைவி ”குலா” எனும் விவாகப் பிரிவினையின் மூலம் கணவனைப் பிரியும் உரிமையைப் பெற்றிருக்கிறாள்.
ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் ஸாபித் அவர்களின் நன்னடத்தையையோ, அவரின் குணத்தையோ குறை சொல்லவில்லை. ஆயினும் நான் இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘சரி! அவர் (உனக்கு மஹராக – மணக்கொடையாக வழங்கியத்) தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்து விடுகிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவரும் ‘சரி’ என்றார். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கணவரிடம் ”தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு” என்று கூறினார்கள். (புகாரி, நஸயீ)
பெண்ணுக்கு வழங்கியுள்ள இந்த விவாகரத்து உரிமையை இஸ்லாமிய வழக்கில் ”குலா” என்பார்கள். இந்த நபிவழியிலிருந்து விளங்கும் சட்டங்கள்.
1 ஒரு பெண்ணுக்கு தன் கணவனைப் பிரிய வேண்டுமானால் அந்தப் பகுதியின் தலைவரிடம் முறையிட வேண்டும்.
2 அவள் திருமணத்தின் போது மஹராக – மணக் கொடையாக எதை வாங்கினாளோ அதைக் கணவனிடம் ஒப்படைக்குமாறு தலைவர் கட்டளையிட வேண்டும்.
3. அந்த மஹரைப் பெற்றுக் கொண்டவுடனே, அவளை விட்டுப் பிரிந்து விடுமாறு கணவருக்குத் தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்படா விட்டாலும், தலைவர் அத்திருமணத்தை ரத்துச் செய்வார்.
4 கணவனைப் பிடிக்காத மனைவி அதற்கானக் காரணத்தை சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இஸ்லாத்தில் விவாகரத்து என்பது ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும், முறையில் வித்தியாசமிருந்தாலும் உரிமையில் சமமாகவே வழங்கப்பட்டிருக்கிறது. மனைவியைத் தலாக் சொல்லும் கணவன் அது பற்றி அந்தப் பகுதி தலைவருக்குத் தெரிவிக்க வேண்டும். அதே மாதிரி கணவனைப் பிரிய எண்ணும் மனைவியும் அந்தப் பகுதி தலைவரிடம் முறையிட வேண்டும். ”தலாக்”, ”குலா” இவ்விரண்டுமே ரகசியமாக நடப்பதில்லை. ஊரறியப்படுவதுதான் மறுமணத்திற்கான வாய்ப்பையும் எளிதாக்கும்.
திருமணப் பந்தத்தின் மூலம் இணையும் தம்பதியர்கள் ஒருவரையொருவர் புரிந்து நல்லிணக்கத்தோடு தொடர்ந்து வாழலாம். அல்லது தம்பதியரிடையே பிணக்கு ஏற்பட்டு தொடர்ந்து அதில் நீடிக்க விரும்பாமல் நிரந்தரமாகப் பிரிந்துவிடும் நிலையும் ஏற்படலாம். இஸ்லாம், கணவன் – மனைவி இருவருக்கும் மணவிலக்கை இலேசாக்கியிருக்கிறது. இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளைத்தான் பிரிக்க முடியாது. திருமணத்தினால் ஏற்படும் கணவன், மனைவி உறவைப் பிரிக்கவே முடியாத உறவாக இஸ்லாம் கருதவில்லை. திருமணத்திற்குப் பின் கணவன் ஒழுக்கமில்லாதவன் என்று அறியப்பட்டால் அதை சகித்துக் கொண்டு அவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சமமாக ”விவாகரத்தில்” இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியிருக்கிறது

ஹஜருல் அஸ்வத்  என்னும் இது கருப்புக்கல்


 
காபா எனும் எனும் புனித ஆலயம் சதுர வடிவில் அமைக்கப்பட்ட கட்டடம் ஆகும். அதன் நான்கு மூலைகளுக்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. காபாவின் தலைவாயிலை ஒட்டியுள்ள வடகிழக்கு மூலைக்கு 'ஹஜருல் அஸ்வத் மூலை' -(ருக்னுல் அஸ்வத்)- கருப்புக்கல் மூலை என்று பெயர். அந்த மூலையில்தான் ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக்கல் பதிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மூலைக்கு 'யமன் மூலை' (ருக்னுல் யமானீ) என்று பெயர். இவ்விரு மூலைகளையும் சேர்த்து யமனிய மூலைகள் என்பர். காபாவை தவாஃப் - சுற்றி வரும்போது கருப்புக்கல் மூலையை தொட்டு முத்தமிடுவதும், யமன் மூலையைத் தொடுவதும் நபிவழி ஆகும்.
கருப்புக் கல் மூலைக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. 1. இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் எழுப்பிய அஸ்திவாரத்தில் அமைந்திருப்பது. 2. ஹஜருல் அஸ்வத் - கருப்புக் கல் பதிக்கப்பட்டிருப்பது. ஆனால் யமன் மூலைக்கு இச்சிறப்புகளில் முதலாவது மட்டுமே உண்டு.
அடுத்து தென்மேற்கு மூலைக்கு 'ஷாம் (சிரியா) மூலை' - ருக்னுஷ் ஷாம் என்றும், வடமேற்கு மூலைக்கு 'இராக்கிய மூலை' (ருக்னுல் இராகீ) என்றும் பெயர். இவ்விரு முனைகளுக்கும் சேர்த்து 'ஷாமிய மூலைகள் என்பர். காபாவைத் தவாஃபு செய்யும்போது இவ்விரு முனைகளையும் தொடுவதோ, முத்தமிடுவதோ கிடையாது என்பதே பெரும்பாலனோரின் கருத்து. (அல்மின்ஹாஜ், ஃபத்ஹுல் பாரீ)
அஸ்வத் மூலையில் பதிக்கப்பட்டுள்ள கருப்புக் கல் சரித்திரம் வாய்ந்த ஒரு கல். இந்தக் கல்லைப் பற்றி விமர்சிக்கும் பிற மதத்தவர்கள் அவர்களின் கடவுளாகிய சிவனின் கற்சிலை வடிவங்களில் ஒன்றான சிவலிங்கத்தோடு ஒப்பிட்டு, காபாவில் பதிக்கப்பட்டுள்ள கருப்புக் கல்லும் முஸ்லிம்களால் வணங்கப்படும் ஒரு சிலையாகச் சித்தரிக்கிறார்கள். 
இதில் என்ன வேடிக்கை என்றால், இஸ்லாத்தை விமர்சிக்கும் இவர்களின் கோர முகத்தை வெளிக்காட்ட வெட்கப்பட்டுத்தானோ என்னவோ இவர்கள் முஸ்லிம்களின் பெயர்களை முகமூடியாக பயன்படுத்தி மறைத்துக் கொண்டு, ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக் கல்லை சோதனை செய்ய வேண்டும் என்று உளறுகிறார்கள். சோதனையை அவர்களின் கற்சிலை சிவலிங்கத்தோடு நிறுத்திக் கொள்ளட்டும்.
சிவனைக் கல்லில் செதுக்கிய சிலையாக வடித்து. அதைக் கடவுள் என்று நம்பிக்கைகொண்டு வணங்கும் இவர்களுக்கு, இது கல், கருப்புக் கல் என்று கல்லைக் கல்லென்று சொல்லும் முஸ்லிம்களை விமர்சிக்க இவர்களுக்கென்ன அருகதை இருக்கிறது என்று தெரியவில்லை! இவர்களைப் போல் முஸ்லிம்கள் கல்லைக் கடவுளாக்கவில்லை. செதுக்கிய கல்லை சிவலிங்கம் என்று இவர்கள் நம்புவது போல், முஸ்லிம்கள் கருப்புக் கல்லைக் கடவுளாக ஒருபோதும் நம்புவதில்லை!
உமர் (ரலி) அவர்கள் (இந்தக்) கருப்புக் கல் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, ''நீ தீங்கோ, நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன், நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்'' என்றார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், முஅத்தா, தாரிமி)
கருப்புக் கல்லுக்கு எவ்வித சக்தியும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் கருப்புக் கல்லை முத்தமிட்டார்கள் என்பதைத் தவிர அதற்கு எந்த சிறப்பும் இல்லை. என்பதை நபித்தோழர் உமர் (ரலி) அவர்கள் இங்கே நிறுவுகிறார்கள். 
கருப்புக் கல்  
பிறகு முஸ்லிம்கள் கருப்புக் கல்லை என்னவாகக் கருதுகிறார்கள்?
ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிருந்து இறங்கியதாகும். அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருப்பாக்கி விட்டன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதீ, நஸயீ, அஹமத்)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கல்லை ஒரு கருப்புக் கல் என்றுதான் அடையாளப்படுத்துகிறார்கள். அதற்கு இறைத்தன்மை இருப்பதாகவோ, இந்த சமூகம் அதை வணங்க வேண்டும் என்றோ சொல்லவில்லை. அந்தக் கல்லின் அசல் நிறம் பாலை விட வெண்மையானதாக இருந்து மனிதர்களின் பாவக்கரங்கள் பட்டு அது கருப்பாகி விட்டது என்று - கருப்புக் கல் எதனால் கருப்பானது என்ற வரலாற்றையும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
''ஆதமுடைய மக்களின் பாவங்களை கல் வாங்கிக்கொண்டதால் அது கருப்பாகி விட்டது'' என்று சொல்லவில்லை என்பதை கருப்புக் கல்லை சிவலிங்கமாகக் கருதும் சிவபக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு மனிதருடைய பாவத்தை இன்னொரு மனிதரே ஏற்க இயலாது என்ற நிலை இஸ்லாத்தில் இருக்கும் போது, ஒரு கல் பாவங்களை வாங்கிக் கொண்டதால் கருப்பானது என்று கருதுவது நகைப்புக்குரியது. கருப்புக் கல் சுவனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு கல், இந்த பூமியில் சுவனத்தின் பொருளாக கருப்புக் கல் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைத் தொட்டார்கள், முத்தமிட்டார்கள். நபியவர்கள் அதை முத்தமிட்டதால், அதைப் பின்பற்றி இந்த சமூகம் அதை முத்தமிடுவதையும், தொடுவதையும் சிறப்பாகக் கருதுகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்யும்போது, கருப்புக் கல்லை மட்டும் தொடவில்லை. காபா ஆலயத்தின்  யமன் மூலைகள் - ருக்னுல் யமானீ என்று சொல்லப்படும் வடகிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆகிய இரு மூலைகளையும் தொட்டிருக்கிறார்கள்.
''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கருப்புக் கல், ருக்னுல் யமனி ஆகிய) இரு யமனிய மூலைகளைத் தவிர இறையில்லம் காபாவில் வேறு எந்த இடத்தையும் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்ததில்லை'' (புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அஹ்மத், ஹாகிம்)
நபி (ஸல்) அவர்கள் கருப்புக் கல் மூலையை மட்டும் சிறப்பிக்கவில்லை. யமனிய மூலைகள் இரண்டையும் சிறப்பித்திருக்கிறார்கள். கருப்புக் கல்லைத் தொட்டார்கள், முத்தமிட்டார்கள் என்று அறிவிப்புகள் இருப்பது போல் அதை கம்பாலும் தொட்டிருக்கிறார்கள், அதை நோக்கி சைகையும் செய்திருக்கிறார்கள்.
''நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாஃபு செய்தார்கள். கருப்புக் கல்லின் பக்கம் வரும்போதேல்லாம் தம்மிடமிருந்த விளைந்த கம்பால் கருப்புக் கல்லைத் தொட்டார்கள்'' (புகாரி, முஸ்லிம்)
''நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து காபாவை தவாஃப் செய்வார்கள். கருப்புக் கல்லின் பக்கம் வரும்போதெல்லாம் சைகை செய்தார்கள்'' (புகாரி, முஸ்லிம்)
மேலும்,
ஹஜ். உம்ரா, தவாஃபு என காபாவைச் சுற்றி வலம் வரத் துவங்கும்போது, முதல் சுற்றை இந்த கருப்புக்கல் மூலையிலிருந்தே துவங்க வேண்டும். துவங்கி, சுற்றி மீண்டும் கருப்புக் கல் மூலைக்கு வந்தால் ஒரு சுற்று நிறைவடையும்.
''நபி (ஸல்) அவர்கள் கருப்புக் கல்லிலிருந்து, கருப்புக் கல் வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும், நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்'' (திர்மிதீ)
கருப்புக் கல் மூலையிலிருந்து தவாஃப் சுற்றைத் தொடங்கி, ஏழு சுற்றுக்களில் ஒவ்வொரு சுற்றிலும் கருப்புக் கல் மூலைக்கு வந்து, அந்த மூலையை நோக்கி சைகை செய்தால் அந்தச் சுற்று முழுமை பெற்று அடுத்தச் சுற்றுத் துவங்கும். தவாஃப் கிரியைகளில் கருப்புக் கல்லை முத்தமிடுவது, முத்தமிடாமல் அதை நோக்கி சைகை செய்வது இவ்விரண்டும் நபிவழிகள் ஆகும். இதை வசதிக்கேற்றவாறு முஸ்லிம்கள் கடைபிடித்து நிறைவேற்றிக்கொள்ளலாம். இதில் கட்டாயம் என்று எதுவுமில்லை.
கருப்புக் கல்லும், சிலைகளும்
கருப்புக் கல்லை, சிலைகளுக்கொப்பாகக் கருதி, கருப்புக் கல்லை முஸ்லிம்கள் வணங்குகிறார்கள் என்று விமர்சிக்கும் சில கிணற்றுத் தவளைகள், வேண்டுமானால் முஸ்லிம் பெயர்களில் பாஸ்போர்ட் எடுத்து - அவர்கள் உள்ளத்தால் இஸ்லாத்தை நம்பிக்கை கொள்ளா விட்டாலும் பரவாயில்லை - வந்து காபாவை ஒருமுறை நேரில் பார்த்துவிட்டுப் பின்னர் விமர்சிக்கலாம்.
மக்கா வெற்றியின்போது, நபி (ஸல்) அவர்கள் காபாவில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை அப்புறப்படுத்தும்படி கட்டளையிட்டார்கள். அந்த சிலைகளில், நபி இப்ராஹீம் (அலை) நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் சிலைகளும் இருந்தன. அம்பு மூலம் குறி சொல்வது சிலையாகச் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது. கண்ணியமிக்க இறைவனின் நண்பராகத் திகழ்ந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சிலையையும் அப்புறப்படுத்தினார்கள் என்றால் அதை விட மற்ற சிலைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. சிலைகள் வணங்கப்படுபவைகளாக இருந்தன. நபி இப்ராஹீம்  (அலை) நபி இஸ்மாயீல் (அலை) இருவரின் சிலைகளும் வணங்கப்பட்டு வந்தன.
வணங்கப்படும் எந்த சிலைகளும், பொருள்களும் புனித ஆலயமான காபாவில் இருக்கக்கூடாது என இறைவனுக்கு இணையாக வணங்கப்படுவைகளை அகற்றினார்கள். கருப்புக் கல் காபாவின் கட்டடத்தின் கற்களில் ஒரு கல்லாக காபாவோடு இருந்தது. சிலைகள் மற்றும் எவரையும், எதையும் வணங்காத நபி இப்ராஹீம் (அலை) நபி இஸ்மாயீல் (அலை) இருவரும் காபாவை அதன் அஸ்திவாரத்திலிருந்து எழுப்பிபோது கருப்புக் கல்லை அதனிடத்தில் பதித்துக் கட்டடம் எழுப்பினார்கள். குறைஷியர் காபாவைப் புதுப்பித்துக் கட்டும்போது அதனாலேயே கருப்புக் கல்லுக்கு முக்கியத்துவம் வழங்கி, குறைஷியரில் எல்லாக் கோத்திரத்தினரும் தமது கையால் கருப்புக் கல்லை அதனிடத்தில் தூக்கி வைக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டு சர்ச்சை செய்து கொண்டனர்.
மீண்டும்,
கல் அது கல், அது கருப்புக் கல் என்று கூறி முஸ்லிம்கள் எவரும் அந்தக் கருப்புக் கல்லை வணங்கவும், வழிபடவுமில்லை. ஒரு கல்லை கல்லென்று சொல்வது வணக்கமாக ஆகாது நன்றி!