ஞாயிறு, 28 ஜூலை, 2013

இறைத்தூதரும் குழந்தைத் திருமணமும்


 சிந்தனை மற்றும் பகுத்தறிவு ரீதியாக எதையும் அலசிப் பார்க்கும் மனோ பக்குவத்திற்கு தடைப் போடும் எந்த சித்தாந்தத்தின் மீதும் (அது இஸ்லாமாக இருந்தாலும் சரி) எங்களுக்கு நம்பிக்கையில்லை என்ற கொள்கையுடன் உங்களை இதுதான் இஸ்லாம் இணையத்திற்குள் வரவேற்றுக் கொள்கிறோம்.தேவையான அளவு அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மதங்களை அணுகுவது ஒரு ஆரோக்யமான நிலையாகும். அறிந்துக் கொண்டதை பகிர்ந்துக் கொள்வதும், அறிந்துக் கொண்டதில் வரும் சந்தேகங்களை மேலும் தெளிவுப்படுத்திக் கொள்வதும் அதன் மீது நமக்குள்ள ஈடுபாட்டின் அடையாளம் என்பதால் அந்த மனநிலை ஒரு பரந்த சிந்தனையாளனுக்குரியதாகவே இருக்கும்.


1) நபி ஏன் வன்முறையைப் பரப்பினார்?

2) 6 வயது சிறுமியை ஏன் திருமணம் செய்தார்?

3) இஸ்லாம் கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல் சர்வாதிகாரத்துடன் எதையும் நம்பச் சொல்வது ஏன்?

இவற்றில் மூன்றாவது கேள்வியை முதலில் எடுத்துக் கொண்டால் தான் மற்ற இரண்டிற்கும் பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இஸ்லாம் கேள்விகளுக்கே இடம் கொடுக்காது என்பது உண்மை என்றால் மற்ற இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாத நிலை எங்களுக்கு ஏற்பட்டு விடும். அதனால் மூன்றாவது கேள்வியை முதலில் பரிசீலிப்பது தான் பொருத்தமானதாகும்.

விருப்பு - வெறுப்பு இன்றி நீங்கள் திறந்த மனதுடன் மதங்களை அணுகுவீர்கள் என்றால் கேள்விகளால் நிறைந்த மார்க்கமும் வளர்ந்த மார்க்கமும் இஸ்லாம் ஒன்றுதான் என்பதை நீங்கள் தெளிவாக அறிந்துக் கொள்வீர்கள். ‘நாங்கள் இப்படித்தான் பதில் சொல்வோம்’ என்று அவசரப்பட்டு எங்களைப் பற்றி முடிவெடுத்து விடாமல் சற்று நிதானத்துடன் தொடருங்கள்.
ஹிந்துத்துவம் - கிறிஸ்த்துவம் - இஸ்லாம் இந்த மூன்றும் பெரிய மதங்களாகும். (கேள்விகளுக்கு இடங்கொடுக்கும் பக்குவம் கம்யூனிஸத்தில் இருந்தாலும் அது தன்னை மதம் என்று அறிமுகப்படுத்தாததால் அதை இங்கு சற்று தள்ளி வைப்போம்) இந்த மூன்று பெரிய மதங்களில் அவற்றின் கொள்கைகள், திட்டங்கள், செயலாக்கங்கள், வழிகாட்டிகள் (வேதங்கள் - அதை விளக்குபவர்கள்) இவற்றின் மீது உலகில் நடக்கும் வாதங்களையும் அந்த வாதங்களை சந்திப்பவர்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது,ஹிந்துத்துவத்திலும் - கிறிஸ்த்துவத்திலும் (நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி) கேள்விகள் கேட்காமல் நம்ப வேண்டும் என்ற நிலை இருப்பதை உணர்வீர்கள்.

இஸ்லாத்தில் அந்த நிலை இல்லை. இதற்கு மிக சிறிய அளவில் ஓர் உதாரணம் சொல்ல முடியும். இதுதான் இஸ்லாம் என்ற இந்த இணையத் தளம் உட்பட தமிழில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் பல இணையங்கள் உள்ளன. அவற்றில் பல தளங்கள் ‘மாற்றுமதத்தவர்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கலாம்’ என்ற வசதியை செய்து வைத்துள்ளன. இது போன்ற வசதி பிற மத இணையங்களில் (தமிழில்) கிடைக்குமா? அந்த மதங்கள் பற்றி கேள்விக் கேட்டு - விவாதித்து அறிந்துக் கொள்ளலாமே.. என்று நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கவில்லை. (நீங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்).

ஹிந்து மதத்திற்கென்று ஆன்மிக பிரச்சாரவாதிகள் (காஞ்சி பெரியவாள்) உட்பட எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் நீங்கள் கேள்விக் கேட்கலாம். ஆனால் அந்தக் கேள்விகள் அவர்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டும் என்ற அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர விவாதித்து மேலும் தெளிவுப் பெறும் வகையில் அமைந்திருக்கக் கூடாது. (சிலை வணக்கம் - பெண்ணியம் - மறுஜென்மம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்).

பால் தினகரன் உட்பட அதே அடிப்படையில் அமைந்த பல குழுக்கள் கைகளில் பைபிளை வைத்துக் கொண்டு ‘கர்த்தரை விசுவாசியுங்கள்’ என்ற பிரச்சாரத்தை முன் மொழிந்துக் கொண்டிருக்கின்றன. கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு அற்புதங்கள் பற்றிக் கூறவும் அவர்களில் பலவீனமானவர்களை அழவைக்கவும் தான் இவர்களால் முடியுமே தவிர ”எவரும் கிறிஸ்த்துவம் பற்றி, பைபிள் பற்றி இங்கு பகிரங்கமாகக் கேள்விக் கேட்கலாம்” என்று அவர்களால் சொல்ல முடிவதில்லை. (அவர்களின் பணிகளை குறைச் சொல்வதற்காக இதை நாம் இங்கு குறிப்பிடவில்லை. கேள்விகளுக்கு இடங்கொடுக்காத நிலையை சுட்டிக் காட்டுவதற்காகத் தான் குறிப்பிடுகிறோம்).

இஸ்லாத்தை குர்ஆனிலிருந்தும் நபியின் வாழ்விலிருந்தும் கற்றுணர்ந்த அடிப்படைவாதிகள் மாற்றுக் கொள்கையுடையவர்களிடமிருந்து கேள்விகளை சந்திப்பதில் சற்றும் சலைத்தவர்களல்ல. ஏனெனில் இஸ்லாம் வளர்ந்தது அந்த அடிப்படையில் தான்.

‘நீங்கள் அறியாதவற்றை வேதஞானம் உள்ளவர்களிடம் கேள்விக் கேட்டு அறிந்துக் கொள்ளுங்கள்’ என்கிறது குர்ஆன். (16:43)

கேள்வி ஞானம் ஊக்கப்படுத்தப்பட்டுள்ள மார்க்கத்தில் போய் ‘கேள்வி ஞானத்திற்கு இடமில்லை’ என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள்?

‘இறைவனின் வசனங்கள் அவர்களுக்கு நினைவூட்டப்பட்டால் அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் அதன் மீது அடித்து விழ மாட்டார்கள்.(மாறாக அந்த வசனம் குறித்து சிந்தித்து செயல்படுவார்கள்) (அல் குர்ஆன் 25:73).


சிந்தனையின் வாசல் திறந்தே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் இந்த வசனமும்,கேள்விகளின்றி மத போதகர்கள் சொல்வதை அப்படியே ஏற்பது மனிதனை கடவுளாக்கும் பாவச் செயலாகும் என்று இறைத்தூதர் எச்சரித்துள்ளதும் ‘இஸ்லாம் கேள்விகளுக்கு இடமிளிப்பதில்லை’ என்ற கருத்தில் இருப்பவர்களின் சிந்தனைக்குரியதாகும்.

அது மட்டுமின்றி குர்ஆனை நீங்கள் மேலோட்டமாகப் படித்தால் கூட ‘அது மூன்று கொள்கையுடையவர்களை சந்தித்ததையும் - அவர்களின் கொள்கைத் திரித்தல்கள், அதில் ஏற்படுத்திய இடற்பாடுகள் ஆகியவற்றை சுட்டிக் காட்டி விமர்சித்துள்ளதையும் காண்பீர்கள்.அந்த மூன்றுக் கொள்கையாளர்கள்.

1) மக்கா நகரில் வாழ்ந்து வந்த சிலை வணக்கக் கொள்கையுடையவர்கள்.
2) மதீனாவிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் வாழ்ந்து வந்த யூதர்கள்.
3) கிறிஸ்த்துவர்கள்.

விமர்சனங்களை வெளிப்படுத்துவதும் - விமர்சனங்களை சந்திப்பதும் கேள்வி ஞானம் உள்ள இடங்களில் மட்டும் தான் நிகழும் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டால் உலக அளவில் உள்ள மாற்றுக் கொள்கையுடையவர்களை கொள்கை ரீதியாக துணிச்சலுடன் விமர்சிக்கும் குர்ஆனில் - இஸ்லாத்தில் எத்துனை கேள்வி ஞானத்திற்கு இடமிருக்கும் என்பதை புரிந்துக் கொள்வீர்கள்.

எனவே ‘இஸ்லாம் கேள்விகளுக்கு இடங்கொடுப்பதில்லை’ என்ற வாதம் தவறானது என்பதை முதலில் கூறிக் கொள்கிறோம்.இரண்டு கேள்விகள், அது குறித்த சர்ச்சைகளில் மட்டும் தான் ஈடுபடக் கூடாது என்று தடை வந்துள்ளது அவை,
ஒன்று - விதி,
இரண்டு - இறைவனின் பிறப்பு.

இவை விடைகளுக்கு அப்பாற்பட்ட கேள்விகள். இவை இரண்டைத் தவிர வேறு எது பற்றி வேண்டுமானாலும் - எத்தகைய கேள்விகளையும் - விமர்சனங்களையும் இஸ்லாத்தின் மீது வைக்கலாம். அவற்றிற்கு முறையான பதில் இஸ்லாத்தில் உண்டு.

நீங்கள் சில முஸ்லிம்களிடம் கேள்விக் கேட்டு அவர்கள் பதில் சொல்லாமல் போயிருக்கலாம். அத்தகைய முஸ்லிம்களை நீங்கள் சந்தித்தால் ‘அது அவர்களின் கல்வியின் குறைப்பாடு’ என்று விளங்கிக் கொள்ளுங்கள். அவர்களின் குறைப்பாட்டை இஸ்லாத்தின் குறைப்பாடாக முடிவு செய்ய வேண்டாம். இதுவே உங்கள் மூன்றாவது கேள்விக்குரிய பதிலாகும்.

2) நபி ஏன் வன்முறையைப் பரப்பினார்?

தனி மனிதருக்கும் - ஆட்சியாளருக்கும் உள்ள வித்தியாசத்தையும்,கலகத்துக்கும் - போருக்கும் உள்ள வித்தியாசத்தையும் அறியாதவர்கள் மட்டுமே இது போன்ற வாதத்தை எடுத்து வைப்பார்கள்.இயேசு போர் செய்யவில்லை என்பது உண்மை. சமாதான வாழ்வையே அவர் விரும்பினார் என்பதும் உண்மை. இதை காரணம் காட்டி ஒரு கிறிஸ்த்துவர் இயேசுவிடம் இல்லாத முரட்டுக் குணம் முஹம்மதிடம் இருந்தது என்று கூறினால் (அவ்வாறு பரவலாக கூறத்தான் செய்கிறார்கள். அதன் விளைவுதான் இந்தக் கேள்வி) நிச்சயம் அவரது அறியாமைக்கு நாம் அனுதாபப்படுவோம்.

தம்மைத் தாக்க வருபவர்களை - தமக்கு சொந்தமான ஒன்றை அபகரிக்க வருபவர்களை ஓர் ஆட்சியாளர் எதிர்த்துப் போராடுவது வன்முறை என்றால் ‘போர்’ என்ற சொல்லை நாம் தமிழ் மொழியிலிருந்து எடுத்து விடத்தான் வேண்டும். முதலாம் உலக (ப்போர்) வன்முறை, இரண்டாம் உலக (ப்போர்) வன்முறை, கார்கில் வன்முறை, வளைகுடா வன்முறை என்று போர்கள் அனைத்தையும் வன்முறையாக மாற்றியாக வேண்டும்.ஒரு நாட்டுடைய ராணுவம் தங்களுடைய எதிரிகளை களத்தில் சந்திப்பதை ‘வன்முறை’ என்று நீங்கள் கருதுவீர்களா..? சுதந்திரப் போராட்டத்தில் போராடி மடிந்தவர்களையும் - கார்கிலில் போராடி உயிர் நீத்தவர்களையும் ‘வன்முறையாளர்கள் ஒழிந்தார்கள்’ என்று பாராட்டுவீர்களா..? வெள்ளையர்களுக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் ஒருங்கிணைத்த தேசிய ராணுவத்தை ‘வன்முறையார்கள்’ என்று வர்ணிப்பீர்களா..?

இதுவெல்லாம் வன்முறை என்பது உங்கள் எண்ணம் என்றால் முஹம்மத் வன்முறையாளர் என்ற உங்கள் கருத்தும் உண்மைதான். ராணுவமும் - போரும் வன்முறையல்ல என்று நீங்கள் வாதித்தால் முஹம்மத் என்ற ஓர் ஆட்சியாளர் தலைமையில் இயங்கிய இஸ்லாமிய ராணுவத்தையும் அவர்கள் சந்தித்தப் போர்களையும் மட்டும் எப்படி வன்முறை என்று கருதுகிறீர்கள்?

மதீனா என்பது இஸ்லாமிய ஆட்சியாளர் ஆட்சிப் புரியும் ஒரு நாடு. இங்கு இஸ்லாமிய ஆட்சி அமைவதற்கு முன்னால் அந்த ஆட்சியாளரும் அவரைச் சார்ந்த கனிசமான மக்களும் தமது சொந்த பூமியிலிருந்து (மக்காவிலிருந்து) நாடு துறந்து வெளியேறுகிறார்கள். பத்தாண்டு காலம் பெரும் துன்பங்கள் அனைத்தையும் சகித்து - இழக்க வேண்டிய அனைத்தையும் இழந்து - கொள்கை ஒன்றுதான் முக்கியம் என்ற உறுதியுடன் அகதிகளாக அந்நிய மண்ணுக்குச் செல்கிறார்கள். இவர்களின் கொள்கையும் வாழ்க்கையும் பரிசுத்தமானது என்பதை உணர்ந்த - விளங்கிய அந்த மண்ணின் மக்கள் தங்களின் ஆளுமைக்குரியவராக இறைத்தூதரை நியமித்துக் கொள்கிறார்கள்.
இறைத்தூதர் ஆட்சியாளராக ஆன பிறகு எல்லா நாடுகளும் (இன்றைக்கும்) சந்திக்கும் அச்சுறுத்தல்களை அந்த நாடும் சந்தித்தது, எதிரிகளின் கூடுதல் வெறித்தனத்துடன். எதிரிகளிடமிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக ஓர் ஆட்சியாளர் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் முஹம்மத் என்ற அந்த இறைத் தூதரும் செய்தார்கள். இதைத்தான் நீங்கள் வன்முறை என்கிறீர்களா..?

மனிதத்துவத்திற்கும் - மனித நேயத்திற்கும் எதிராக முஹம்மத் நடந்தார் என்பதற்கு வரலாற்றிலிருந்து ஒரேயொரு சம்பவத்தைக் கூட யாராலும் காட்ட முடியாது. காரணம் அவர் சாதாரண மனிதரல்ல. அவர் ஓர் இறைத்தூதர்.

முஹம்மத்(ஸல்) அவர்கள் சந்தித்தவைகள் அனைத்தும் போர்கள் தான் என்றாலும் இதர ஆட்சியாளர்களின் போர் குணங்களுடன் எந்த வகையிலும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் சந்தித்தப் போர்களில் அனேக நியாயங்கள் இருந்தன.

நாடு பிடிக்கும் பேராசையுடன் உலகை வளம் வந்த நெப்போலியனை ‘மாவீரன் நெப்போலியன்’ என்கிறது உலகம். அக்கம் பக்கம் ஆட்சிப் புரிந்த சிற்றரசர்களையெல்லாம் கருவறுத்து - பெண்களை நாசமாக்கி - யானைப் படை, குதிரைப் படைகளால் விளைச்சல் நிலங்களையெல்லாம் அழித்தொழித்து உலா வந்தவர்களையெல்லாம் வரலாற்று வீர நாயகர்களாக எழுதி வைத்துள்ளோம். (தேவைப் பட்டால் விபரங்கள் வெளியிடுவோம்) ஆனால் முஹம்மத் என்ற அந்த இறைத்தூதர் சந்தித்தப் போர்களில் இத்தகையப் பேராசையில் - வரம்பு மீறலில் ஒன்றையாவது காட்டமுடியுமா..? போர்களங்கள் தவிர இதர நேரங்களில் அந்தத் தலைவரும் இதர ராணுவ வீரர்களும் ‘வாளெடுத்த’ சம்பவம் ஒன்று உண்டா..?

ஓர் ஆட்சித் தலைவராக அவர் சந்தித்த தற்காப்புப் போர் - மற்றும் சில அவசியப் போர்களைத் தவிர அந்த சகிப்புத் தன்மை மிக்க மாமனிதரிடம் வேறென்ன வன்முறை இருந்தது? அவர் ஈடுபட்ட வன்முறையை ‘இது’ என்று குறிப்பிட்டு சுட்டிக் காட்டுங்கள். அது பற்றி விவாதிப்போம்.

3) உங்களின் அடுத்த சந்தேகம் நபி ஏன் 6 வயது சிறுமியை திருமணம் செய்து ஒன்பது வயதில் உறவு வைத்துக் கொண்டார்? நபி என்பவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருக்க வேண்டாமா?

இந்த சந்தேகத்தில் உள்ள நியாயத்தை நாம் மறுக்க மாட்டோம். இது நியாயமான சந்தேகம் என்பதால் இது பற்றிய கூடுதல் தெளிவை நாம் பெற்றுதான் ஆக வேண்டும்.

பால்ய விவாகம் தவறு என்பது இன்றைய சிந்தனையே!

பால்ய விவாகம் தவறு என்பது சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒரு சிந்தனையாகும். அதற்கு முன் இது குறித்த சிந்தனையே மக்களிடம் இருக்கவில்லை என்று கூறலாம். இந்த சிந்தனை ஏற்பட்டப் பிறகும் கூட பால்ய வயது என்பதில் ‘வயதை’ தீர்மாணிப்பதில் இன்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெரும் வேறுபாடு இருந்தது.

இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் கூட 8 வயது பெண்ணை மணக்கலாம் என்ற சட்டம் இந்தியாவில் இருந்தது. புகழ் பெற்ற பாரதியார் கண்ணம்மாவை திருமணம் முடிக்கும் போது கண்ணம்மாவிற்கு வயது 8 என்பதை இங்கு நினைவுக் கூறலாம். திருமண வயது 13 என்றும் 16 என்றும் 18 என்றும் 21 என்றும் மாற்றங்கள் நடந்தது கடந்த 25 - 30 ஆண்டுகளுக்குள் தான்.

பால்ய விவாகம் தவறு என்ற சிந்தனையே எட்டாத - தவறாகக்கூட கருதப்படாத - ஒரு காலத்தில் நடந்த திருமணத்தை, அது தவறு என்று தீர்மானிக்கப்பட்ட காலத்தில் (ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு) இருந்துக் கொண்டு ‘அது தவறு’ என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நாம் முதலாவதாக சிந்திக்க வேண்டும்.

கம்யூனிஸ சிந்தனையே முன்வைக்கப்படாத ஒரு காலகட்டத்தைப் பற்றி இன்றைக்கு ஒரு கம்யூனிஸவாதி ‘அவர்கள் ஏன் கம்யூனிஸ சிந்தனையைப் பின்பற்றவில்லை?’ என்று கேட்டால் அது எப்படி பொருத்தமற்றதோ அது போன்றதுதான் இதுவும். ஒரு காரியம் தவறு என்று தெரிந்த பிறகு அந்தக் காரியத்தை செய்தால் தான் அது தவறு என்ற நிலையைப் பெறும். இறைத்தூதர் ஆய்ஷாவை திருமணம் செய்தது தவறு என்றே கருதப்படாத காலத்தில் நடந்ததாகும். இது முதலாவது பதிலாகும்.

உறவு முறையை வலுப்படுத்திக் கொள்ளுதல்.

மனதிற்கு பிடித்த நல்லவர்களுடனான உறவை பலப்படுத்திக் கொள்வதற்கு விருப்பமில்லாதவர் என்று உலகில் யாரும் இருக்க முடியாது. உறவை எந்த வகையிலெல்லாம் பலப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களும் அதை நடைமுறைப் படுத்துபவர்களும் உலகில் ஏராளமாக உள்ளனர். உறவு முறையை வலுப்படுத்துவதில் உலகில் முக்கியப் பங்கு வகிப்பது திருமண பந்தமாகும்.

பல மாதங்களுக்குப் பின் - பல வருடங்களுக்குப் பின் நடக்கவிருக்கும் திருமணங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்படுகிறது. பல இடங்களில் பிறந்தக் குழந்தையைக் கூட இன்னாருக்கு என்று முடிவு செய்யப்பட்டு விடுவதை பரவலாகப் பார்க்கலாம்.

‘அக்காள் மகள் மாமனுக்குத் தான்’ என்ற ஹிந்து பாரம்பரியம் நீடிப்பதை நாம் கண்டு அனுபவிக்கிறோம். தம்பியோடு - சகோதரனோடு உள்ள குடும்ப உறவை மேலும் பலப்படுத்திக் கொள்ளவே இத்தகைய திருமண உறவுகள் நீடிக்கின்றன. இவைகளையெல்லாம் மனதில் நிறுத்திக் கொண்டு ‘முஹம்மத் - ஆய்ஷா’ திருமணத்தை அணுகுவோம்.

வேறு எவரும் விஞ்ச முடியாத அளவிற்கு முஹம்மத் அவர்களின் மீது பாசத்துடன் இருந்தவர் அபூபக்கர் என்ற நபித்தோழர். சுக துக்கம் அனைத்திலும் தோளோடு தோள் நின்று இறைத்தூதரோடு தன் வாழ்க்கையைப் பகிர்ந்துக் கொண்டவர். இந்த உறவு இன்னும் வலுப்பட விரும்பியே தனது மகளை இறைத்தூதருக்கு மணம் முடித்துக் கொடுக்கிறார்கள்.

திருமணம் என்ற ஒப்பந்தத்துடன் அன்றைக்கு அது நடந்தாலும் இன்றைக்கு நிச்சயதார்த்தத்தின் நிலை என்னவோ இதேதான் அன்றைக்கு நடந்த அந்த திருமணத்தின் நிலையுமாகும். பெயருக்கு அது திருமணமாக இருந்தது.

ஒரு பெண் பருவமடைதல் (வயதுக்கு வருதல்) என்பது அவள் தாய்மையடையும் பக்குவத்திற்குரிய அடையாளமாகும். அதன் பின்னரே அன்றைக்கு இல்லறம் துவங்கியது.

முஹம்மத் அவர்கள் முடித்த பல்வேறு திருமணங்களில் ஆய்ஷா மட்டுமே கன்னிப் பெண். மற்ற அனைவரும் இறைத்தூதரின் வயதுக்கு ஒப்பவர்கள் - சிலர் அவர்களின் வயதை விட அதிக வயதை அடைந்தவர்கள். இப்படி ஒரு கன்னிப் பெண்ணுடன் அவர்கள் இல்லறத்தில் சேராமல் போயிருந்தால் அவர்களின் ஆண்மையில் கூட சந்தேகம் எழும். இந்த திருமணத்தின் வழியாக அத்தகைய சந்தேகம் எழாமல் போயிற்று.

இல்லறம் மட்டுமே குறிகோளல்ல.

என்னதான் தனது நண்பர் அபூபக்கர் விரும்பினாலும் சின்னப் பெண் என்பதால் முஹம்மத் இந்த திருமணத்தை மறுத்திருக்கலாமே.. என்ற சந்தேகம் கூட எழலாம். ஆய்ஷா போன்ற ஒரு பெண் தேவை என்பதை முஹம்மத் அவர்கள் உணர்ந்ததால் தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

அந்தத் தேவை என்ன?

இறைவன் புறத்திலிருந்து மனித சமுதாயத்திற்காக வந்துக் கொண்டிருந்த தூதர்களில் இறுதியானவர் முஹம்மத் நபி அவர்கள். அவர்கள் மொத்த மனித சமுதாயத்திற்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்று குர்ஆன் கூறுகிறது. அதனால் அவர்களின் பணி விசாலமானதாகவும் - விரிவானதாகவும் இருந்தது. அவர்களின் முழு வாழ்க்கையும் அகில உலகின் முன்னும் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமாகியது. அவர்களின் வெளியுலக வாழ்க்கையை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஆயிரக்கணக்கான நபித்தோழர்கள் இருந்தார்கள். வீட்டிற்குள் வாழும் வாழ்க்கையை எடுத்துச் செல்ல வேண்டுமானால் மனைவி என்ற அந்தஸ்த்தில் வாழ்பவரால் மட்டும் தான் முடியும். அந்த வகையில் சுறுசுறுப்புமிக்க கண்காணிப்புத் திறனும், நினைவாற்றலும் - மிக்க மனைவி தேவைத்தான் என்பதால் அதற்கு பொருத்தமானவராக ஆய்ஷாவை அவர்கள் கண்டதால் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

முஹம்மத் - ஆய்ஷா இவர்களுக்கு மத்தியில் நடந்த வாழ்க்கையை வெறும் திருமணம், இல்லறம் என்று மட்டும் பார்க்காமல் அதில் பொதிந்துள்ள இந்த உண்மைகளை விளங்கினால் அந்த உறவின் அவசியத்தில் யாரும் குறைக் காண முடியாது. காரணம், இந்த உலகில் - நான்கு சுவர்களுக்கு மத்தியில் நடந்த தனது இல்லற வாழ்க்கையின் நல் அமசங்களைக் கூட மனித சமுதாயத்திற்கு பயனளிக்கக் கூடிய வகையில் பகிரங்க பிரகடனம் செய்ய வேறு எந்தத் தலைவராலும் முடியாது. இறைவனின் இறுதித் தூதரைத் தவிர.
--------------------------------------------------------------------------------
பால்ய விவாகம் அந்த சமுதாயத்தில் அன்றைக்கு நடைமுறையில் இருந்தாலும் இறைத்தூதரின் இறுதிக் காலத்தில் அத்தகையத் திருமணங்கள் இல்லாமலாக்கப்பட்டு விட்டன. திருமணம் என்பதை வலுவான உடன்படிக்கை என்று இறைவன் குறிப்பிட்டு வசனத்தை இறக்கியவுடன் பால்யவிவாகம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. எனவே இன்றைக்கு அத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை. இது குறித்து வாய்ப்பு வரும் போது விளக்குவோம்.ஆனாலும் பால்ய வயது என்னவென்பதை தீர்மானிப்பதற்கு உலகம் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

2 கருத்துகள்: