ஞாயிறு, 28 ஜூலை, 2013

அன்னை ஜைனப்(ரலி) திருமணம் 

  
சதித்திட்டங்களால் முஹம்மது நபியைக் கொல்ல முடியாமல் தோற்றவர்கள், ஹிஜ்ராவுக்குப் பிறகு முஹம்மது நபி அடுத்தடுத்து அடைந்த வெற்றிகளால் மீளெழுச்சிபெற்று, எல்லாச் சூழ்ச்சிகளையும் தகர்த்தெறிந்து புத்துணர்வு பெற்று இஸ்லாம்  வீறுகொண்டு வளர்ந்ததால், சோர்வுற்ற எதிரிகள், இனி இஸ்லாத்தின் வளர்ச்சியைப் போர்கள் மூலம் தடுக்க முடியாது என்பதை மனதளவில் உணர்ந்து,முஹம்மது நபியின் தனிப்பட்ட வாழ்க்கைமீது போர்தொடுக்கும் சதித்திட்டத்துடன் பரப்பிய அவதூறுகளுள் ஒன்றே அன்னை ஜைனப் ரலி..அவர்களுடனான  முஹம்மது நபியின் திருமண உறவு.
     

எத்தகைய நபரையும் பாலியல் குற்றச்சாட்டுகள்மூலம் களங்கப்படுத்திவிடலாம் என்ற துர்எண்ணம் பிடித்தவர்கள் அன்றும் இருந்தனர். அவ்வகையில் முஹம்மது நபியைக் களங்கப்படுத்தத் தக்க  தருணம் பார்த்துக் காத்திருந்த எதிரிகள், அன்னை ஜைனப் ரலி.. அவர்களுடனான திருமண உறவைக் கொச்சப் படுத்திக் கொஞ்சம் சொறிந்து கொண்டு ஆறுதல் அடைந்தனர். எனினும், உண்மையின் வெளிச்சத்தில் இந்தத் திருமண உறவை அலசும்போது, நபி ஸல்... மீதான குற்றச்சாட்டு முழுக்க முழுக்க அவதூறு என்பதைக் காணலாம்.
     
1) முஹம்மது நபியின் அத்தை மகள் அன்னை ஜைனப் ரலி..அவர்கள்,முஹம்மது நபியைத் திருமணம் செய்ய விரும்பினாலும், பல்வேறு சூழல்களால் அது கைகூடவில்லை.
     
2) அடிமையாக இருந்த ஜைத் இப்னு ஹாரிதா ரலி...அவர்களை முஹம்மது நபி ஸல்.. அவர்கள் வளர்ப்பு மகனாகத்   தத்தெடுத்ததோடு, ஜைனப் ரலி..அவர்களை ஜைதுக்குத் திருமணமும் முடித்து வைக்கிறார்கள். ஜைனப் ரலி.. மற்றும் குடும்பத்தாருக்கு இவர்களின் திருமணத்தில் உடன்பாடில்லை. குரைஷிப் பெண்ணுக்கு ஓர் முன்னாள் அடிமையை மணம் முடிப்பதா என்ற குலப்பெருமையே பின்னணிக் காரணமாக இருந்தது. எனினும், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நீடித்ததால் ஜைனப்-ஜைத் தம்பதிகள் விவாகரத்துபெற்றுப் பிரிந்துவிடுவது என்று முடிவெடுத்தபோது, முஹம்மது நபி ஸல்..அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி மணவாழ்க்கையைத் தொடரச் செய்கிறார்கள்.
     
3) ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட அரபிகளால், காலங்காலமாக நடைமுறையிலிருந்த அறியாமைக்கால பழக்கங்களைக் கைவிட முடியவில்லை. அன்றைய காலகட்டத்தில் தத்துப் பிள்ளையை சொந்தப் பிள்ளையாகவே  கருதும் மனப்போக்கு அரபிகளிடம் இருந்ததால்,பெற்ற பிள்ளைகளின் உரிமைகளுக்கு இழப்பு ஏற்பட்டது. வாழ்வியல் புரட்சி நெறியாக இஸ்லாம் வளர்ந்து கொண்டிருந்தபோது, வாரிசு, சொத்துரிமை,விவாகரத்து,திருமணம் ஆகியவற்றில் மிகுந்த குழப்பங்கள் இருந்தன. இவற்றிற்குத் தீர்வுகாண வேண்டிய சமூகப் பொறுப்பும் முஹம்மது நபிக்கு இருந்தது.


***********
வேறொரு தாய்-தந்தைக்குப்பிறந்த குழந்தையை தத்து/சுவீகாரம் என்றெல்லாம் மகவாக ஏற்றாலும் நடைமுறையில் பெற்ற பிள்ளைக்கும்-தத்துப் பிள்ளைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சொல் அளவில்கூட இருஉறவுகளும் ஒன்றல்ல என்பதை இதற்கான தனித்தனியான சொற்பிரயோகங்கள் உணர்த்துகின்றன. இரண்டும் ஒன்றே எனில் தத்து/சுவீகாரம் என்ற தனி அடையாளப்படுத்தும் சொற்களுக்கு அவசியமில்லை.
     
குழந்தை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தத்து எடுக்கப்பட்ட குழந்தைக்கும் பெற்ற பிள்ளைக்கும் சம உரிமைகள்  என்பது பேச்சளவில் மனிதாபிமானம் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் சொந்தப்பிள்ளைகளுக்கு அநீதியே இழைக்கப்படுகிறது.நடைமுறையில் வளர்ப்புப் பிள்ளைகளின் சகோதரர்களிடம் இதை உறுதி செய்து கொள்ளலாம்!
     
தத்தெடுப்பது உண்மையான உறவு முறைகளில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை அறிவுப்பூர்வமாக அணுகுவதாலேயே தத்துப் பிள்ளை,பெற்ற பிள்ளையாக முடியாது என்று இஸ்லாம் ஆணித்தரமாகப் பிரகடனம் செய்கிறது.இதை நடைமுறைப்படுத்துவதற்காக வளர்ப்பு மகன் ஜைத் ரலி..தமது மனைவி ஜைனப் ரலி அவர்களை விவாகரத்துச் செய்தபிறகு முஹம்மது நபி ஸல்... அவர்கள் ஐந்தாவது மனைவியாக திருமனம் முடிக்கிறார்கள்.
     
வளர்ப்பு மகனின் முன்னாள் மனைவியை மணம் செய்தால் அரபிகள் தம்மைக்கேவலமாகப் பேசுவார்களே என்ற அச்சம் கலந்த மனத்தடை முஹம்மது நபியிடமும் இருந்ததால்தான் ஜைத் ரலி அவர்கள்,ஜைனப் ரலி.  அவர்களை விவாகரத்துச் செய்வது குறித்து ஆலோசித்தபோது,முஹம்மது நபி ஸல்.  அதைத் தடுத்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதையே அல்லாஹ்வும், தனது அருள்மறையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறான்:

    
"எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர்மீது அருள் புரிந்தவரிடம்,'அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக ரத்து செய்துவிடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக்கொள்'  என்று சொன்னபோது,அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடையை மனத்தினுள் மறைத்து வைத்தீர்;ஆனால், அல்லாஹ்தான் நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்...(033:03)
     
என்றதோடு, ஜைனப் ரலி..அவர்களை முஹம்மது நபி ஸல்..அவர்கள் மீண்டும் மணம் செய்யவேண்டும் என்பதே  அல்லாஹ்வின் ஏற்பாடாகவும் இருந்தது. ஆக, முஹம்மது நபி ஸல். அவர்களின் ஒவ்வொரு திருமணமும் சமூக  நலன் சார்ந்தது என்பதோடு அப்பழுக்கற்ற இல்லற வாழ்வுக்குச் சொந்தக்காரராகவே நபிகளார் இருந்துள்ளார்கள்.
*******
வளர்ப்பு மகன் ஜைதின் மனைவி ஜைனபை,ஆடை கலைந்திருந்த கோலத்தில் முஹம்மது நபி காண நேர்ந்ததால், ஜைனபின் பேரழகில் காதல் கொண்டு மனைவியாக அடைய எண்ணம் கொண்டதாகவும் சிலர் கட்டுக்கதையைப் பரப்பியுள்ளனர். இப்படியொரு நிகழ்வு நடக்கவே இல்லை என்பதை விளக்கி சகோ.அபூமுஹை,சலாஹுத்தீன் ஆகிய பதிவர்கள் தனிப்பதிவிட்டுள்ளார்கள்.
     
முஹம்மது நபியின் தந்தையின் சகோதரி (அத்தை) மகளான ஜைனப் அவர்களும் முகம்மது நபியும் ஒரே வீட்டில் தாம் வசித்தார்கள்  என்பதோடு, ஜைனப் அவர்களைச் சிறுவயது முதலே எந்தத் தடையும் இல்லாமல் (பர்தா குறித்த தடை அப்போது இல்லை) பார்க்கவும் முஹம்மது நபி வாய்ப்புப் பெற்றிருந்தார்கள் உண்மை இவ்வாறிருக்க ஜைனபின் அழகைப்பார்த்த பிறகு முஹம்மது நபி, மனைவியாக்க எண்ணம் கொண்டதாக கதைப்பது அறியாமை அல்லது அவதூறாகவே கருதப்பட வேண்டும்.
     
மேலும்,முஹம்மது நபி அவர்கள் ஜைனப் அவர்களை ஐந்தாவது மனைவியாக மணந்தபோது, முஸ்லிம் ஆண்கள் அதிகபட்சம் நான்கு பெண்களை மணக்கலாம் என்ற உச்சவரம்பு நடைமுறைக்கு வரவில்லை. உண்மையிலேயே முஹம்மது நபிக்கு அத்தகைய எண்ணம் இருந்திருந்தால்,தம்வசதிக்காக இந்த வரம்பை அதிகமாக்கியிருக்கலாமே!
     
ஒரு வாதத்திற்காக, ஜைனபின் பேரழகில் மயங்கியதாகச் சொல்லப்படுவது உண்மையெனில், மனம் கவர்ந்தவரை இன்னொருவருக்கு மணம் செய்துவைத்து, பிறகு விவாகரத்துச் செய்ய வைத்து, நான்கு மாதங்களுக்கு மேலாகக் காத்திருந்து மறுமண முடிக்க வேண்டிய அவசியமில்லாமல் உடனடியாகவே மணமுடித்திருக்கலாமே!
     
தமது மகளிருக்கும்போது மருமகன் இன்னொரு பெண்ணை மறுமணம் செய்வதை எந்தத் தந்தையும் விரும்ப மாட்டர்.அபூபக்கர் ரலி அவர்களின் மகள் ஆயிஷா,உமர் ரலி அவர்களின் மகள் ஹப்ஸா ஆகியோரின் கணவனாக இருந்த முஹம்மது நபி, ஐந்தாவதாக ஜைனப் அவர்களை மணந்தபோது அபூபக்கர் ரலி எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம். ஆனால், இவர்களிடையேயான நட்பும் புரிதலும் மென்மேலும் வளர்ந்ததேயன்றி மனதில் சிறுசஞ்சலம்கூட ஏற்படவில்லை!
     
ஜைத்-ஜைனப் தம்பதிகள் விவாகம் ரத்தானபோது, முஹம்மது நபி 'பனூ குறைளா' யூதர்களை முற்றுகையிட்டு இருந்தார்கள். அழகில் மயங்கியதாகச் சொல்லப்படுவது உண்மையெனில் போர்க்களத்திற்குத் தோழர்களை மட்டும் அனுப்பி இருக்கலாமே!
     
எல்லாவற்றையும்விட, இந்தத் திருமண உறவில் குறைகாண்பதாக இருந்தால் நான்கு மனைவிகளுள் ஒருவரேனும் குறைகண்டிருக்கக்கூடும். ஆனால், அத்தகைய நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை. சக்களத்திகளே விரும்பிச் சகித்துக் கொண்டிருந்த உத்தம நபியின் உன்னத இல்லற வாழ்வைக் குறைசொல்லும் தகுதி யாருக்கும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக