திங்கள், 29 ஜூலை, 2013

ஜிஹாத் என்றால் என்ன




ஜிகாத் என்ற பதம் சரியாக புரிந்துக்கொள்ளப்படாததாக அல்லது தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. பலவிதமான பிரச்சினைகளின் மையப்புள்ளியே தவறான புரிதல் தானே
.


ஜிஹாத் என்றால் என்ன?இன்று மிக அதிகமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட இஸ்லாமிய மரபுச்சொல் ஜிஹாதாகத்தான் இருக்க வேண்டும். ஜிஹாத் என்றாலே மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல்; தாக்கி அழித்தல்; அவர்கள் மீது போர் தொடுத்தல் என்கிற ரீதியில் ஒரு தவறான கருத்தோட்டம் நிலை பெற்றிருக்கிறது. இந்த தவறான புரிதலுக்கும், கருத்தாக்கத்துக்கும் பல்வேறு காரணங்களும் பின்னணிகளும் இருக்கின்றன. மேற்கத்திய மீடியாக்களின் சளைக்காத பிரச்சாரமும் இதற்கு ஒரு காரணம். இஸ்லாத்தை முஸ்லிம்களே சரியாக விளங்கிக் கொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணம்.
'முயற்சித்தல்' எனப் பொருள்படும் 'ஜஹத' எனும் அரபி மூலச்சொல்லிலிருந்து பிறந்ததுதான் 'ஜிஹாத்' எனும் பதம். இச்சொல்லுக்கு 'அயராத போராட்டம்', 'விடா முயற்சி', 'கடின உழைப்பு' என்றெல்லாம் பொருள் உண்டு. குர்ஆனில் 'ஜிஹாத்' என்ற சொல் பல இடங்களில் நான்கு விதமான அர்த்தங்களில் இடம் பெற்றுள்ளது.

1. இணைவைப்பவர்கள், நயவஞ்சகர்களுடன் போர் புரிதல்.
2. வழிகேட்டில் இருப்பவர்களுடன் போர் புரிதல்.
3. தனது மனோஇச்சையுடன் போர் புரிதல்
4. இறைவன் காட்டிய நேர்வழியில் நடக்க முயற்சித்தல், அல்லது போராடுதல்.
இவற்றுள் முதல் இரண்டு வகை ஜிஹாதையும் முறைப்படி அறிவித்து நடத்தும் அதிகாரம் ஒரு இஸ்லாமிய அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு. அதனை தனி நபர்களோ, தனிக்குழுக்களோ தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது. அத்தகைய இஸ்லாமிய அரசு கூட தன்னிச்சையாக வேறொரு நாட்டின் மீது ஜிஹாத் என அறிவித்து விட முடியாது. மார்க்க ரீதியான, உலகாதாய ரீதியான, ஒழுக்க ரீதியான என எல்லா அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்தே அது முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு போரிடும்போது கூட பெண்களை, பொதுமக்களை, குழந்தைகளை, மதகுருக்களைத் தாக்கக்கூடாது. விளை நிலங்களைச் சேதப் படுத்தக் கூடாது. மரங்களையோ வீடுகளையோ கொளுத்தக் கூடாது. நிராயுதபாணி வீரர்களை கொல்லக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் நிபந்தனைகளை விதிக்கிறது.
மேலும், இறைவன் இந்த ஆட்சியாளர்களை நீதியை நிலைநாட்டும்படி வலியுறுத்துகிறான்.

'உங்களுக்கும், அவர்களின் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்; மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபை உடையவன்' (60:7)
'மார்க்க (விஷயத்)தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே, அவர்களுக்கு நீங்கள் நன்மை செயவதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்'. (60:8)
'நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப் படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்'. (60:9)
அப்பாவி பொதுமக்களை வேட்டையாடுகிற யூத நடைமுறை, இஸ்லாத்துக்கும் இஸ்லாம் காட்டும் அறவழிக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும். அதே சமயம் தீமைகள் புயலாய் வீசும்போது மூலையில் முடங்கியிருக்க இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை. தனது தாய்நாடு மாற்றாரால் ஆக்ரமிக்கப்பட்டு அப்பாவி பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் ஈவிரக்கமின்றி கொல்லப்படும்போது அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் பணிக்கவில்லை. மண்ணின் விடுதலைக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகளல்ல என்பது உலக நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், 'ஜிஹாத்' என்ற பெயரிடப்பட்டு இஸ்லாம் மீது பழி சுமத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் எதுவுமே ஜிஹாத் கிடையாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட நான்கு வகை ஜிஹாத்களில் 3-ம் 4-ம் தான் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். ஒரு முஸ்லிம் தன் மனத்துடன் போராடி, மன இச்சைகளை வென்று, உளத்தூய்மையை ஏற்படுத்தப் போராடுவதுதான் அவருக்கு கடமையான ஜிஹாத். மேலும், தமது வாழ்விலும் தாம் வாழும் சமூகத்திலும் நன்மைகளை ஏவுவதற்காகவும், தீமைகளை அழித்தொழிப்பதற்காகவும் ஓயாமல் பாடுபடுவதும், அந்த நோக்கத்திற்காக தம்மிடம் உள்ள அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் ஆற்றல்களையும் திறமைகளையும் பயன்படுத்துவதும் ஜிஹாத் தான். இறைத் திருப்தியை பெறுவதே ஜிஹாதின் நோக்கமாக இருக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் எதிரிகளுடன் போரிடுவதைவிட மனதுடன் போரிடுவது தான் உயர்ந்தது. அதுவே பெரிய ஜிஹாத் (ஜிஹாதே அக்பர்) என நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

பெற்றோருக்குப் பணிவிடை செய்வதே சிறந்த ஜிஹாத் என்றும் நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி வேண்டி வந்த ஒரு மனிதரிடம், "உமது பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?" என்றார்கள். அதற்கு அம்மனிதர் "ஆம்!" என்றார். "பெற்றோருக்கு பணிவிட செய்வதற்கு அரும்பாடுபடு" என்று சொல்லி திருப்பி அனுப்பினார்கள்!" (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி). இன்னொரு சந்தர்ப்பத்தில், பெண்களும் இஸ்லாமிய யுத்தங்களில் பங்கெடுக்க அனுமதி கேட்டபோது " பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜே பெண்களுக்கான ஜிஹாத்" எனறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்: "உங்களில் எவர் ஒரு தீய செயலை காண்கிறாரோ அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அவரால் அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை தம் மனத்தால் வெறுக்கட்டும். இது இறை நம்பிக்கையில் மிகவும் பலவீனமான நிலையாகும்". (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)ஆக நன்மையை ஏவுவதும், தீமைகளுக்கு எதிராகப் பொங்கி எழுவதும் அறவழியில் போராடுவதுமே ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். பொது மக்களுக்குத் தீங்கிழைப்பதும் அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பதும் எந்த நிலையிலும் ஜிஹாத் ஆகாது.
"பயங்கரவாதத்தைப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு இவ்வாறு தெளிவாக வரையறுக்கப் பட்டிருக்க, சில முஸ்லிம்கள் சம்பந்தப்படும் வன்முறைச் சம்பவங்களை இஸ்லாத்தின் மீதே குற்றம் சுமத்தி அவதூற்றுப் பிரச்சாரம் செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு".

ஆகவே ஜிகாத் என்பதின் பொருளை அதன் வேர்ச்சொல்லில் இருந்து புரிந்துக்கொண்டோம். மேலும் ஜிகாத் என்றால் "புனிதப் போர்" என்றும் ஊடகங்களில் கற்பிக்கப்பட்டு வருகிறதே அதெல்லாம் கட்டுக்கதையா?

ஜிஹாத் என்ற இந்த அரபிச் சொல்லுக்கு "புனிதப்போர்" என்ற அர்த்தத்தை அரபி மொழியின் எந்த ஒரு அகராதியிலும் பொருள் காண முடியாது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை, போர் என்பது ஒருபோதும் புனிதமாகக் கருதப்படவே முடியாத ஒன்று என்பது திருக்குர்ஆனையும் இஸ்லாமிய வரலாற்றையும் தெளிவாகப் படித்து அறிந்து கொண்டவர்களுக்கு நன்றாக விளங்கும். ஒன்றுக்கொன்று எதிரெதிர் துருவங்களான சமாதானமும்(இஸ்லாம்), போரும் ஓரிடத்தில் இணைகின்றன என்றால் அது நகைப்பிற்கிடமாக இல்லை?

இன்று உலகளாவிய அளவில் ஊடகங்களாலும் வன்சக்திகளாலும் உலக அமைதிக்கு எதிரான ஒரு கொள்கையாக இஸ்லாம் சித்தரிக்கப்படுகிறது. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் சொல் தான் இந்த "ஜிஹாத்".

ஜிஹாத் என்றால் என்ன? அது எதற்காக செய்யப்படுகிறது? எங்கே அது செய்யப்பட வேண்டும்? யாருக்கு எதிராக செய்யப்பட வேண்டும்? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் அதன் ஊடாக எழும்பும் பொழுது அதனைக் குறித்த எவ்வித இஸ்லாமிய அறிவும் இன்றி அல்லது அதனைக் குறித்து தெரிந்திருந்தாலும் இஸ்லாத்தை மோசமாக சித்தரிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அதற்கு மிக மோசமான ஓர் அர்த்தத்தைக் கொடுத்து உலக மக்களை இஸ்லாத்திற்கு எதிராக திருப்ப இன்று உலகளாவிய அளவில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சோவியத் யூனியனின் (USSR) சிதறலோடு உலகில் கம்யூனிஸ சித்தாந்தம் வீழ்ச்சி அடையத் தொடங்கிய 1980 காலகட்டத்திற்குப் பின் "புனிதப்போர்" என்ற வார்த்தை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தப்பட்டு உலகளாவிய அளவில் செய்திகளில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. ஜிஹாத் என்று திருக்குர்ஆனில் வரும் இந்த அரபி வார்த்தை, ஏகாதிபத்தியவாதிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அல்லது உலகுக்குத் தவறாக விளக்கமளிக்கப்பட்ட இஸ்லாமியப் பதங்களில் ஒன்றாகும்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் இருபெரும் வல்லரசுகளாக விளங்கிய அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையில் சோவியத் யூனியனின் பிளவுகாலம் வரை பனிப்போர் நிலவி வந்தது. இக்காலகட்டத்தில் இரு வல்லரசுகளும் ஒன்றையொன்று தகர்க்க மறைமுகமாக்ப் பல்வேறு வழிகளில் திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வந்தன. இறுதியில் சோவியத் யூனியன் தகர்ந்து அந்நாட்டோடு இணைந்திருந்த அனைத்து நாடுகளும் பிரிந்து தனித்தனியாக சென்றன. அதோடு உலகில் அசைக்க முடியாத ஒரே வல்லரசாக அமெரிக்கா மட்டுமே இருந்து வருகிறது. இக்கால கட்டத்திற்குப் பின்னரே உலகில் "இஸ்லாம்" பயங்கரவாத மார்க்கமாக சித்தரிக்கப்பட இந்த "ஜிஹாத்" என்ற அரபிப்பதம் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு உலக ஊடகங்கள் அனைத்திலும் நிறைந்து நிற்பதையும் அக்காலகட்டத்திற்குப் பின்னரே "இஸ்லாமிய தீவிரவாதிகள்" என்ற சொல் உலகில் பிரபலப்படுத்தப்பட்டதையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

1980களுக்குப் பின் இன்று உலகில் இஸ்லாம் ஒருபக்கமும் ஏகாதிபத்திய அமெரிக்க சியோனிஸ கூட்டு சக்திகள் ஒருபக்கமுமாக பிரிக்கப்பட்டு உலகின் மற்றைய நடுநிலைநாடுகளை இஸ்லாத்தின் எதிர்பக்கமாக அணிவகுக்க வைக்க இந்த "ஜிஹாத்" என்ற பதம் மிக அழகாக ஏகாதிபத்தியவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. இதன் பின்னணியில் தெளிவான ஒரு திட்டம் வகுக்கப்பட்டு அது செயல்படுத்தப்படுகிறது என்ற ஐயப்பாடு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. (இப்னு ஆதம். நன்றி: சத்தியமார்க்கம் .காம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக