உலகில் பெரும்பாலான நாடுகள் மனித உற்பத்தியைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதிக சந்ததிகள் பெறுவதால் ஏற்படும் அசௌகரியங்களையும் பிரச்சாரம் செய்து வருகின்றன. விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி கரு வளராமலிருக்கவும் வளர்ந்த கருவைச் சிதைக்கவும் பல சாதனங்களையும் உருவாக்கியுள்ளன. குடும்பக் கட்டுப்பாடு என அறிமுகப்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு முஸ்லிம்கள் எந்த அளவு ஒத்துழைக்கலாம்? இதனை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் அறிவது அவசியமாகும்.
குடும்பத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும் குழந்தைகள் உருவாவதை தற்காலிமாக நிறுத்திக் கொள்ளவும். இன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நவீன முறைகள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததில்லை. அன்றைய மக்கள் குழந்தைகள் உருவாகாமலிருக்கவும் குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் ஒரு முறையை மட்டும் கையாண்டு வந்தனர். அதாவது இல்லறத்தில் உச்ச நிலைக்கு வரும் போது ஆண்கள் தங்கள் விந்துவை வெளியே விட்டு விடுவர். இது தான் அன்றைய மக்களிடம் அறிமுகமான ஒரு முறை. அரபு மொழியில் இந்தச் செயல் 'அஸ்ல்' எனக் கூறப்படுகிறது. இந்த அஸ்ல் என்ற காரியத்திற்கு மார்க்கம் எந்த அளவு அனுமதி வழங்குகிறது என்பதை நாம் அறிந்து கொண்டால் குடும்பக்கட்டுப்பாடு பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும்.
நாங்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் 'அஸ்;ல்' செய்து வந்தோம் என்று ஜாபிர்(ரலி) அவர்கள் தெரிவிக்கும் செய்தி புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபி(ஸல்)அவர்களின் காலத்திலேயே நபித்தோழர்களும் 'அஸ்ல்' செய்துள்ளனர். அதை அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் தடை செய்யாமல் இருந்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இது நடந்தாலும் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் கவனத்திற்கு வராமல் இது நிகழ்ந்திருக்கக்கூடும் என்று எண்ணுவதற்கு இடமில்லை. ஏனெனில் நாங்கள் அஸ்ல் செய்து கொண்டிருந்தோம். இந்த செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்படியிருந்தும் எங்களை அவர்கள் தடுக்கவில்லை' அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) அவர்கள் ஆதார நூல் : முஸ்லிம்
எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள். அவள் கர்ப்பமடைந்து விடுவாளோ என நான் அஞ்சுகிறேன்' என்று நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ விரும்பினால் அஸ்ல் செய்துகொள். (ஆனால்) அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவனை அடைந்தே தீரும் என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர்(ரலி) அவர்கள் ஆதார நூல் : முஸ்லிம், அபுதாவுத், அஹ்மத்
இந்த ஹதீஸில் அந்த மனிதர் அஸ்ல் செய்ய அனுமதி கேட்கவில்லை. குழந்தை பெறாமலிருக்க, தான் என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றே கேட்கிறார். நபி(ஸல்) அவர்கள் தாங்களே முன்வந்து அஸ்ல் செய்துகொள் என்று அவருக்குச் சொல்லித் தருகிறார்கள். அதே நேரத்தில் இறைவனின் விதி ஒன்று உண்டு. அதை மாற்றிவிட இயலாது என்ற அடிப்படை உண்மையையும் போதிக்கிறார்கள். விதியை நம்புவது என்பது அஸ்ல் என்ற பிரச்னைக்கு மட்டும் உரியதன்று. எல்லாப் பிரச்னைக்கும் விதியை நம்புதல் பொதுவாக அவசியம் என்பதாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக