திங்கள், 3 ஆகஸ்ட், 2015

அரபி மொழியில்தான் ஓத வேண்டுமா?

கேள்வி 1 : ஓதுதல் என்றால் என்ன?

கேள்வி 2 : அதை அரபி மொழியில் தான் ஓத வேண்டுமா?

கேள்வி 3 : தமிழ் மொழிpயில் ஓதக் கூடாதா?

கேள்வி 4 : அரபி மொழி தெரியாதவர்கள் என்ன செய்வது?

கேள்வி 5 : மாற்று மத நண்பர்கள் தமிழில் ஓதலாமா?

மொழிகள் என்பது கருத்துக்களை வெளிப்படுத்தும் ஒரு சாதனமே தவிர மொழிகளில் தேவ மொழி தெய்வீக மொழி என்றெல்லாம் கிடையாது. இஸ்லாத்தின் பார்வையில் அனைத்து மொழிகளும் சமமானவையே.

திருமறையின் வசனத்தைப் பாருங்கள்:

எந்தத் தூதரையும் அவரது சமுதாயத்தவரின் மொழி பேசக் கூடியவராகவே அனுப்பி வைத்தோம். (அல்குர்ஆன் : இப்ராஹீம் - 4)

நபிகள் நாயகத்துக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் தமது சமுதாயத்தின் மொழியிலேயே வேதங்களைக் கொடுத்து இறைவன் அனுப்பியதாக இவ்வசனம் கூறுகின்றது. எல்லா மொழிகளையும் இஸ்லாம் சமமாகவே பார்;க்கின்றது என்பதற்கு இது சான்று. இறுதித்தூதராக நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்களின் தாய்மொழி அரபு என்பதால் அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. நபிகள் நாயகம்(ஸல்)அகில உலகுக்கும் வேதமாக அமைந்துவிட்டது. அகில உலகத்தின் வேதத்தை அரபு மொழியில் ஏன் அருள வேண்டும் என்று சிலருக்குத் தோன்றலாம். தமிழ் மொழியிலோ வேறு எந்த மொழியிலோ அருளப்பட்டிருந்தாலும் இதே கேள்வியைக் கேட்க முடியும். ஏதாவது ஒரு மொழியில் தான் அருள முடியும். நபிகள் நாயகத்தின் மொழி அரபு மொழியாக இருந்ததால் அரபு மொழியில் அருளப்பட்டது. இந்த அடிப்படையைக் கவனத்தில் வைத்துக் கொண்டு உங்கள் கேள்விகளுக்கான விடையைக் காணலாம்.

திருக்குர்ஆனை இறைவனிடமிருந்து வந்ததாக இறைவனின் வார்த்தையாக நாம் நம்புகிறோம். அல்லாஹ்வின் வார்த்தைஎன்று அதை நம்புவதால் அதை ஓத வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட இடங்களில் அப்படியே ஓத வேண்டும். இவ்வாறு ஓதுவது அரபு மொழிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் என்று எண்ணிவிடக் கூடாது. அல்லாஹ்வின் வார்த்தைக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் என்றே கருத வேண்டும். குர்ஆனை ஓத வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அரபு மொழியில் அதற்கு நிகரான வேறு வார்த்தைகளை ஓதுவதும் கூடாது என்பதிலிருந்து அரபு மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை அறியலாம். குர்ஆனை ஓத வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட தொழுகை போன்ற வணக்கங்களில் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் குர்ஆனின் தமிழாக்கத்தைப் படிக்கலாம். படிக்க வேண்டும். ஏனெனில் குர்ஆன் விளங்குவதற்காகவும் சிந்திப்பதற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் இதயங்களில் பூட்டுக்கள் உள்ளனவா? (அருள்மறை அந்நிஸா 4 : 82)

புரியாத மொழியில் ஓதவதைவிட புரிந்த மொழியில் ஓதுவது சிறந்ததல்லவா என்று சிலருக்குத் தோன்றலாம். இந்தக் கண்ணோட்டம் சரியானதுதான். ஆயினும் இதைவிட முக்கியமான நோக்கத்திற்காகப் புரியாத மொழியில் எத்தனையோ வார்த்தைகளை நாம் கூறி வருகிறோம். பல்வேறு மொழிகள் பேசக்கூடிய நாட்டால் ஒரே மொழியில் தேசிய கீதம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மொழி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் அதைத்தான் படிக்கின்றனர். நாட்டின் ஒருமைப்பாடு முக்கியம் என்று இதற்குக் காரணம் கூறப்படுகின்றது. நாட்டின் ஒற்றுமைக்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் என்று காட்டுவதற்காக இதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அகில உலகுக்கும் பொதுவான மார்க்கம் இஸ்லாம். அகில உலகும் ஒரே சீரான முறையில் வணங்கும் போது உலக ஒற்றுமை எடுத்துக் காட்டப்படுகின்றது. நாடு இனம் மொழி ஆகிய அனைத்து வேறுபாடுகளும் மறந்து நாம் அனைவரும் மனிதர்கள் என்ற உலக ஒருமைப்பாடு இதன் மூலம் நிலை நிறுத்தப்படுகின்றது. ஒரு பள்ளிவாசலில் ஒரு இறைவனை ஒரே மாதிரியாக வணங்கும் போது ஏற்படும் உலக ஒற்றுமைக்காக மொழி புரியவில்லை என்ற குறையை சிறிது நேரம் மறந்து விடுவதில் எந்த நஷ்டமும் ஏற்பட்டுவிடாது. எந்த இலட்சியமும் இல்லாமல் புரியாத மொழியில் உள்ள பாடல்களை மனிதன் ரசிக்கிறான். மிகப்பெரிய இலட்சியத்திற்காக அல்லாஹ்வின் வேதத்தை அருளப்பட்டவாறு படிப்பதில் எந்தக்குறையும் ஏற்பட்டுவிடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக